
கும்பகோணம் வேதநாராயணப் பெருமாள் கோயிலில், சரஸ்வதி பிரம்மனுடன் அருள்பாலிக்கிறாள். 'பிரம்மன் கோயில்' எனப்படும் இத்தலத்தை தரிசிப்பவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
படைக்கும் தொழில் புரியும் பிரம்மாவுக்கு, மும்மூர்த்திகளில் தானே உயர்ந்தவர் என்ற கர்வம் உண்டானது. இதை அறிந்த மகாவிஷ்ணு ஒரு பூதத்தை பிரம்மா மீது ஏவினார். அதைக் கண்டு அஞ்சிய பிரம்மாவிடம், '' பூதத்தை அனுப்பியவன் நானே. கர்வமுடன் அலைந்த நீ படைப்புத் தொழிலை மறக்கக் கடவது'' என சபித்தார் விஷ்ணு. இதன்பின் பிரம்மா பூலோகத்தில் யாகம் மேற்கொண்டார். அதன் பயனாக வேதநாராயணப் பெருமாளாக காட்சியளித்த மகாவிஷ்ணு விமோசனம் அளித்தார். அவரே இங்கு மூலவராக கோயில் கொண்டிருக்கிறார்.
சரஸ்வதி, காயத்ரி தேவியுடன் நின்ற கோலத்தில் பிரம்மா இங்கு இருக்கிறார். பிரம்மாவுக்கு எதிரிலுள்ள சன்னதியில் யோகநரசிம்மர் உள்ளார். வேதவல்லித்தாயார், ஆண்டாளுக்கும் சன்னதிகள் உள்ளன. கல்வியில் சிறக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும் 'பிரம்ம சங்கல்ப பூஜை' நடத்துகின்றனர். படிப்பில் சிறந்து விளங்க பிரம்மா, சரஸ்வதிக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது : கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள் : சரஸ்வதி பூஜை, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 8:00 - 11:30 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 94865 68160
அருகிலுள்ள கோயில் : கபிஸ்தலம் கஜேந்திரவரதர் 10 கி.மீ.,(ஆபத்து விலக...)
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 04374 -- 223 434