
நேபாளம் முஸ்தாங் மாவட்டம் முக்திநாத்தில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசமான முக்தி நாராயணர் கோயில் உள்ளது. இமயமலைச் சாரலில் உயரமான இடத்தில் அமைந்த கோயில் இது. இப்பகுதியில் சாலமரங்கள் நிறைய இருந்ததால் 'சாளக்கிராம ஷேத்திரம்' எனப்பட்டது. இப்பகுதி மக்கள் 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்கின்றனர். இங்கு தாமோதர குண்ட் என்ற குளம் உள்ளது.
நேபாள பாணியில் அமைந்த இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கியபடி சுவாமி இருக்கிறார். சுயம்பு மூர்த்தியான இவர் மீது திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் பாடியுள்ளனர். ஆனால் முன்பு நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சுவாமி இருந்ததாக பழைய நுால்களில் கூறப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் தன் பாடலில் இதை உறுதிப்படுத்துகிறார்.
கால மாற்றத்தால் புதிய சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமிக்கு அர்ச்சனை, அபிஷேகம் கிடையாது. செப்பு கிண்ணத்தில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது இருக்கும். அதை துணியில் ஒற்றி சுவாமியை துடைப்பர். இதையே அபிேஷகமாக கருதுகின்றனர். விருப்பம் நிறைவேற சிறிய மணிகளை வாங்கி கோயிலில் கட்டுகின்றனர். இங்குள்ள யாகசாலையில் எப்போதும் நெருப்பு எரிகிறது. அதில் பக்தர்கள் அமர்ந்து மந்திரம் சொல்லி ஹோமம் நடத்துகின்றனர். லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு இங்குண்டு. கருடன், சந்தோஷி மாதா, லலிதா, விநாயகர், பார்வதி, சிவன் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள நீர்த்தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர பாவ, புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் நீராடுவோருக்கு நிம்மதியும், மோட்சமும் கிடைக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை குளிர் காலம் என்பதால் தீர்த்தத்தில் நீராடுவது சிரமம். இங்கு கிடைக்கும் சாளக்கிராம கல்லை பூஜையறையில் வைத்து வழிபட தோஷம் எல்லாம் விலகும்.
எப்படி செல்வது: நேபாள தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 கி.மீ.,
விசேஷ நாள்: புத்த பூர்ணிமா, விஜயதசமி, ஸ்ரீராமநவமி.
நேரம்: காலை 6:00 - மாலை 6:30 மணி
அருகிலுள்ள கோயில் : ஜ்வாலா மாய் - நித்திய சுடர் (மனபலம் அதிகரிக்க...)
நேரம்: காலை 6:00 - மாலை 6:30 மணி

