ADDED : அக் 30, 2025 10:57 AM

நவ.5 - ஐப்பசி பவுர்ணமி
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காளாத்தீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். இங்கு ஐப்பசி பவுர்ணமி (நவ.5, 2025) அன்று மாலையில் சுவாமிக்கு அன்னாபிேஷகமும், அம்மனுக்கு நெய்க்குள தரிசனமும் நடக்கிறது.
நெய்க்குள தரிசனம் என்பது சன்னதி முன்பு பொங்கலை பரப்பி அதில் குளம் போல நெய்யை நிரப்பும் நிகழ்வாகும். இதை தரிசித்தால் பாவம் மறையும். மறுபிறவி உண்டாகாது.
சுருளி ஆற்றின் கரையில் உள்ள இக்கோயிலை தரிசித்தால் ராகு, கேது தோஷம் விலகும். ராணி மங்கம்மாளின் பிரதிநிதியாக இப்பகுதியை நிர்வகித்த கொண்டம நாயக்கர் மகாசிவராத்திரி அன்று காளஹஸ்திக்குச் செல்வார். ஆனால் முதுமை காரணமாக செல்ல முடியாததால் வீட்டிலேயே விரதமிருந்தார். அவரின் பக்தியைக் கண்ட சிவன் அவரது கனவில் தோன்றி அருகிலுள்ள செண்பக காட்டில் நான் இருக்கிறேன் என்றார்.
மறுநாளே அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பும் போது வண்டியின் அச்சு முறிந்தது. எவ்வளவு முயற்சித்தும் வண்டி நகரவில்லை. அந்த இடத்தில் முருகன் சிலை இருப்பதைக் கண்டார். நல்ல சகுனமான இதை சிவபெருமானின் ஆணையாக கருதி அந்த இடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார். இங்குள்ள அம்மனின் பெயர் ஞானாம்பிகை. இந்த அம்மனின் சிலை அருகில் உள்ள 'கோகிலாபுர' ஆற்றில் எடுக்கப்பட்டது. அதனால் அம்பிகையின் பிறந்த தலமாக கோகிலாபுரம் கருதப்படுகிறது.
திருக்கல்யாணத்தின் போது அம்மனுக்கு இந்த ஊர் மக்கள் சீதனமாக சீர் கொடுக்கின்றனர். ராஜகணபதி, கண்ணப்பர், மகாலட்சுமி, பைரவர், வாஸ்து பகவான் சன்னதிகள் இங்கு உள்ளன.
எப்படி செல்வது: தேனியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் 28 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம், மாசி தேரோட்டம்.
நேரம்: காலை 8:00 - 1:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 90259 58848
அருகிலுள்ள கோயில்: முத்துக்கருப்பணசாமி 1 கி.மீ.,(எதிரி பயம் தீர...)
நேரம்: காலை 8:00- - 1:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 86820 80934

