
108 திவ்ய தேசங்களில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது இமையவரப்பன் கோயில். இவருக்கு கார்த்திகை ஞாயிறு அன்று விளக்கேற்றினால் மனதில் நிம்மதி, அமைதி நிலைக்கும்.
மகாபாரதத்தில் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக இருந்தவர் துரோணர். இவர் தன் மகன் அஸ்வத்தாமன் மீது உயிரையே வைத்திருந்தார். பின்னாளில் பாண்டவர்களுக்கு எதிராக போர் செய்யும் சூழலுக்கு ஆளானார். அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் எனக் கூறினால் இவரை வென்றுவிடலாம் என நினைத்தனர் பாண்டவர்கள். அதன்படி பொய்யே பேசாத தர்மர் இப்படி கூற வேண்டும் என்றனர். 'அஸ்வத்தாமன்' என்ற சொல்லை சத்தமாக சொல்லி (அஸ்வத்தாமன் என்ற) 'என்ற யானை இறந்து விட்டது' என மெல்லிய குரலில் சொல்ல வைத்தனர். இதைக் கேட்ட துரோணர் நிலைகுலைந்தார். உடனடியாக அவரைக் கொன்றனர். போர் முடிந்ததும் துரோணரின் உயிரிழப்புக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என வருந்தினார் தர்மர். இதில் இருந்து விடுபட சகோதரர்களுடன் தலயாத்திரை மேற்கொண்டார். அதன்படி செங்குன்றுார் எனப்படும் இங்கு வந்து சிற்றாற்றில் நீராடி பெருமாளை வழிபட்டு மனஅமைதி பெற்றார். இவருக்கு முன்பே இமையவர்கள் (தேவர்கள்) இங்கு வழிபட்டுள்ளதால், இத்தலத்தின் பெருமாள் 'இமையவரப்பன்' (தேவர்களின் தந்தை) என அழைக்கப்படுகிறார்.
ஜகஜ்ஜோதி விமானத்தின் கீழ் இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற கோலத்திலும், செங்கமலவல்லி என்ற பெயரில் தாயார் அமர்ந்த கோலத்திலும் அருள்புரிகின்றனர்.
எங்கள் செல்சார்பு யாமுடை அமுதம்
இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம் அருவன்
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங்குன்றுார் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர்துணையே
என நம்மாழ்வார் இங்கு பாடியுள்ளார்.
எப்படி செல்வது: ஆலப்புழாவில் இருந்து திருவல்லம் சாலை வழியாக 46 கி.மீ.,
விசஷே நாள்: திருவோணம், வைகுண்ட ஏகாதசி வளர்பிறை ஞாயிறு
நேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 0479 - 246 6828
அருகிலுள்ள கோயில் : திருப்புலியூர் மாயப்பிரான் 5 கி.மீ., (கல்வியில் சிறக்க...)
நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94478 00291