
ஜாதகத்தில் சனி, சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் பலம் பெறாவிட்டால் மற்றவர் மத்தியில் மதிப்பு, செல்வாக்கு இருக்காது. இந்த கசப்பான அனுபவம் இருப்பவர்கள் கடலுார் திருக்கூடலையாற்றுார் நர்த்தன வல்லபேஸ்வரரை தரிசியுங்கள். ஏழரைச்சனியால் பயப்படுபவர்கள் இங்கு வழிபட பிரச்னை தீரும்.
சோழநாட்டை ஆண்ட மன்னரான தினகரன் ஆணவத்தால் மனைவியைக் கொன்றார். தோஷத்திற்கு ஆளானவர் பின்னாளில் நாடோடியாக சுற்ற ஆரம்பித்தார். அப்போது ஒரு நோயுற்ற நாய் அவரைப் பின்தொடர்ந்தது. ஒருநாள் அது நதியில் மூழ்கி எழுந்தவுடன் நோய் நீங்கியது.
இதைக் கண்ட மன்னர் அந்நதியில் நீராடினார். பிறகு சிறிது காலத்திலேயே அவரும் பழைய அரச வாழ்க்கைக்கு திரும்பினார். இதற்கு நன்றிக்கடனாக தான் நீராடிய இடத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு கோயில் ஒன்றை நிர்மாணித்தார்.
இந்த இடத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு என்னும் நதிகள் கூடுவதால், இவ்வூருக்கு திருக்கூடலையாற்றுார் எனப் பெயர் வந்தது. பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனத்தை(நடனம்) தரிசித்தனர். இதனால் சுவாமி 'நர்த்தன வல்லபேஸ்வரர்' எனப்படுகிறார்.
இங்கு ஞானசக்தி, பராசக்தி என்ற பெயருடன் அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. அகத்தியர் தனக்கு மகள் வேண்டும் என சிவபெருமானை பிரார்த்தித்தார். சுவாமியின் அருளால் மணிமுத்தாற்றில் தாமரை மீது பெண் குழந்தை ஒன்று விளையாடுவதைக் கண்டார் அகத்தியர்.
குழந்தைக்கு 'அம்புஜவல்லி' என பெயரிட்டு வளர்த்தார். பின்னாளில் வராகமூர்த்தியாக பூமியில் அவதரித்த போது இவளைத் திருமணம் புரிந்தார். இவருக்கும் சன்னதி உள்ளது. நவக்கிரகத்திற்கு சன்னதி இல்லை. பொங்கு சனீஸ்வரர், சித்திர குப்தர் தனி சன்னதியில் உள்ளனர்.
எப்படி செல்வது : சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு சாலை வழியாக 27 கி.மீ.,
விசஷே நாள்: கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மாசிமகம்.
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04144 - 208 704
அருகிலுள்ள கோயில் : திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் 42 கி.மீ., (பிரம்மஹத்தி தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04143 - 246 467