ADDED : நவ 07, 2024 10:31 AM

திருச்சி மாவட்டம் திருவாசியை அடுத்து கொள்ளிடக்கரை சாலையில் உள்ளது துடையூர். இங்கு மங்களாம்பிகையுடன் காட்சி தருகிறார் விஷமங்களேஸ்வரர். இவரை பிரதோஷத்தின் போது வணங்கி திருநீறு பூசினால் பூச்சிகளின் விஷத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
பழமையான இக்கோயிலை கண்டராதித்த சோழன் கட்டினார். ஒருகாலத்தில் கொள்ளிடக்கரையில் கடம்ப வனத்தில் பிரம்மாண்டமாக கோயில் இருந்தது. தற்போது சிறியதாக மாறினாலும் அதன் அழகு குறையவில்லை. உள்ளே செல்லும் முன்பே அருமையாக அமர்ந்திருக்கும் நந்தி நமது கண்ணில் படும். அடுத்தடுத்து கலைநயமிக்க சிற்பங்கள் தெரியும் என்பதால் வெளியே வர மனமே வராது.
பின் முனீஸ்வரரை பார்க்கலாம். இவருக்கு 'வாத முனீஸ்வரர்' என்றும் பெயர் உண்டு. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வலிகள், வாதநோய்களை போக்கும் வல்லமை படைத்தவர். செவ்வாய், சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி நாளில் நல்லெண்ணெய்யும் மூலிகைத் தைலமும் கலந்து இவருக்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த பிரசாதத்தை பக்தர்கள் உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுகிறார்கள்.
சரி. மூலவருக்கு ஏன் விஷமங்களேஸ்வரர் என பெயர் வந்தது என்பதை பார்ப்போம். முன்பு சிவனடியார் ஒருவர் இங்கு பிரகாரத்தை வலம் வரும்போது பாம்பு தீண்டியது. அருகில் யாரும் இல்லை. அடியாரோ 'சிவமே கதி' என அங்கேயே அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் சிவபெருமானின் அருளால் உடலில் ஏறிய விஷம் முறிந்தது. இதனால் மூலவர் இப்பெயரை பெற்றார். விஷக்கடி என வருபவர்களுக்கு மூலவருக்கு அபிேஷகம் செய்த திருநீறு தரப்படுகிறது. அதோடு இங்கு ஆறு தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். இத்தலத்தை தரிசித்தால் நமது துயர்கள் தீரும் என நாயன்மாரான திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
பிறையூருஞ் சடைமுடி எம்பெருமான் ஆரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லுாரும் நல்லாற்றுாரும்
நாலுாரும் சேற்றுாரும் நாரையூரும்
உறையூரும் ஓத்துாரும் ஊற்றத்துாரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே
பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லுார், நல்லாற்றுார், நாலுார், சேற்றுார், நாரையூர், உறையூர், ஓத்துார், ஊற்றத்துார், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர் ஆகிய தலங்களை தரிசித்தால் துன்பங்கள் தொடராது.
எப்படி செல்வது: திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் 18 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - 12:30 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98947 96967