
இமயமலையில் வெளிப்புறமாக அமைந்துள்ள மலைத்தொடர் சிவாலிக். இத்தொடரில் சிவபெருமானுடைய உடலின் ஐந்து பாகங்கள் வெவ்வேறு இடங்களில் காட்சி கொடுத்தன. அவை பஞ்ச கேதாரத் தலங்களாக போற்றப்படுகின்றன.
கேதார்நாத்தில் உடல், துங்கநாத்தில் கைகள், ருத்ரநாத்தில் தலை, மத்தியமகேஷ்வரில் தொப்புள், கல்பேஷ்வரில் தலைமுடி காணப்பட்டன. இவற்றில் நாம் பார்க்க இருக்கும் கோயில் துங்கநாத். இத்தலம் உத்தர்கண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது.
இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இதுவே உலகின் உயரமான சிவன் கோயிலாக விளங்குகிறது. துங்கநாத் என்றால் 'கொடுமுடிகளின் நாதர்' என பொருள்.
மகாபாரதப்போரில் கவுரவர்களை வதம் செய்தனர் பாண்டவர்கள். என்னதான் தர்மத்திற்காக யுத்தம் செய்தாலும் உயிர்வதை என்பது பாவம் தானே. அதை போக்கிக் கொள்ள இங்கு வந்து வழிபாடு செய்தனர் பாண்டவர்கள். இப்படி பழமை வாய்ந்த இத்தலம் எட்டாம் நுாற்றாண்டில் கட்யூரி ஆட்சியாளர்களால், நாகரா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது. ஆனால் தற்போது தொல்லியல் துறையின் ஆய்வு செய்து கோயிலின் கட்டுமானம் சில இடத்தில் 5- 10 டிகிரி வரை சாய்ந்துள்ளதாக கூறியுள்ளனர்.
கோயிலில் பிரதானமாக இருப்பது சிவலிங்கம். அருகே பார்வதிதேவிக்கு சன்னதி உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகின்றனர். ஏப்ரல் முதல் நவம்பர் வரை மட்டுமே தரிசிக்க முடியும்.
குளிர்காலத்தில் கோயில் மூடப்பட்டு சுவாமியின் சிலைகள் அருகில் உள்ள மார்க்கண்டேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்படும்.
எப்படி செல்வது : உத்தர்கண்ட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 309) வழியாக 103 கி.மீ., தொலைவில் ருத்ரபிராயக். அங்கிருந்து சோப்தா 34 கி.மீ., அங்கிருந்து மலையேற்ற பாதையாக துங்கநாத் 3.5 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி
அருகிலுள்ள கோயில் : மக்குமாத் மார்க்கண்டேஸ்வரர் 29 கி.மீ., (முயற்சி நிறைவேற...)
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 8:00 மணி