ADDED : நவ 20, 2025 01:28 PM

நீண்ட நாளாக உடல்நலம் சரியில்லாதவர்கள், உயிருக்கு போராடுபவர்கள், எதிரியால் உயிருக்கு ஆபத்து என வருந்துபவர்கள் போன்றோருக்கு வரப்பிரசாதியாக திகழ்பவர் சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர். திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை அருகிலுள்ள ஆரணியில் இவர் கோயில் கொண்டிருக்கிறார்.
முன்பு இப்பகுதி சம்பங்கி மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. பசுமையான இப்பகுதியைத் தேடி மேய்ச்சலுக்கு பசுக்கள் வந்தன. அதில் ஒரு பசு மட்டும் புதருக்கு அருகே சென்று வந்தது. இதை கவனித்த ஒருவர் பசுவை பின்தொடர்ந்தார். அது அங்கிருந்த புற்றில் பால் சொரிவதைக் கண்டார். ஆர்வத்தில் அதை கோடரியால் அகற்ற முயற்சிக்க ரத்தம் பீறிட்டது. அங்கு ஒரு சிவலிங்கம் இருந்தது. 'சுவாமி மீது கோடாரி பட்டுவிட்டதே. தப்பு செய்து விட்டேனே' என உயிர் விட்டார்.
இதையறிந்த அவரது மனைவி உயிர் தரும் படி சிவனிடம் முறையிட்டார். அதை ஏற்று பக்தருக்கு உயிர் பிட்சை கொடுத்ததால் சுவாமிக்கு 'பிட்சாண்டீஸ்வரர்' எனப் பெயர் வந்தது. சம்பங்கி காட்டில் கிடைத்ததால், 'சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர்' எனப் பட்டார். பின்னர் கோயிலும் எழுப்பப்பட்டது. சிவகாமவல்லி என்ற பெயரில் அம்மன் அருள்புரிகிறாள். சம்பங்கி மரம் தலவிருட்சமாக உள்ளது. 1200 ஆண்டு பழமையான இக்கோயில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தால் பெரிய மண்டபத்தை பார்க்கலாம்.
திருக்கல் எனப்படும் கல்லால் கட்டப்பட்ட இம்மண்டபம் பெரிய துாண்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இதைக் கடந்து சென்றால் சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் சன்னதியை தரிசிக்கலாம். பிறந்த நட்சத்திர நாளில் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அர்ச்சனை செய்தால் பிரச்னை தீரும். நுாறாண்டு வாழும் வாய்ப்பு கிடைக்கும். பேரழகியான சிவகாமவல்லியை வழிபட்டால் கவலை தீரும். அம்மனுக்கு நேர் எதிரில் பாதுகை(காலணிகள்) செதுக்கப்பட்டுள்ளன. இவை அம்பாளின் காலணியாக கருதப்படுகிறது.
பிரகாரத்தில் பைரவர், விநாயகர், வீரபத்திரர், காளத்தீஸ்வரர், முருகன், கைலாசநாதர், விஷ்ணு, பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர், அண்ணாமலையார் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியில் பொன்னேரியில் இறங்கவும். அங்கிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் 14 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, கார்த்திகை சோமவாரம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97892 27314
அருகிலுள்ள கோயில்: அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் 8 கி.மீ., (விரும்பியது கிடைக்க...)
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98948 21712, 98433 51711

