
நேபாளத்தில் உள்ள பக்தபூர் நகரில் சூரிய விநாயக் பகுதியில் உள்ளது டோலேஷ்வர் மகாதேவ் கோயில். இயற்கை ஆர்வலர்கள் மலை, காடுகளை ரசித்தபடி இக்கோயிலுக்கு சென்று வரலாம்.
அரனிகோ நெடுஞ்சாலையை விட்டு விலகி, அடர்ந்த மலையை நோக்கி வாகனம் செல்கிறது. பசுமையான தாவரங்கள், மலைகள், வளைவான சாலைகள் என பக்தபூர் நகரின் அழகான காட்சியை வழி நெடுக கண்டு களிக்கலாம். பிமலேஷ்வர், சிபரே மகாதேவ் கோயில் என்றும் இக்கோயிலை அழைக்கின்றனர். கோயிலுக்கு வெளியே பெரிய நந்தி சிலை, உயரமான திரிசூலம் பக்தர்களை வரவேற்கிறது.
பகோடா பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலின் கருவறையில் மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். பழமையான இந்த சிவலிங்கம் துவாபர யுகத்தின் முடிவில் தோன்றியது என்பது சிறப்பு. கேதார்நாத் கோயிலின் நடைமுறைகளை பின்பற்றி இங்கு காலை முதல் மாலை வரை ஆரத்தி சடங்குகள் நடக்கிறது.
கேதார்நாத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த காலத்தில் பசுவின் வடிவில் சிவபெருமானை வழிபட்டனர். அந்த பசுவின் தலைப்பகுதி இந்தக் கோயிலிலும், மற்ற பாகங்கள் கேதார்நாத் கோயிலிலும் உள்ளன. அதனால் கேதார்நாத் கோயில் முறைப்படியே பூஜை நடக்கிறது. கேதார்நாத் கோயிலை தரிசித்த பின்னரே பக்தர்கள் இங்கு வருகின்றனர். பசுவாக இருந்த சிவனின் உடல், தலைப்பகுதி இரண்டையும் வழிபட புண்ணியம் இருந்தால் மட்டுமே தரிசிக்க முடியும்.
எப்படி செல்வது: காத்மாண்டு பசுபதிநாதர் கோயிலில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: மகாசிவராத்திரி, தீஜ், பால சதுர்த்தசி.
நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மதியம் 1:00 - 5:30 மணி
தொடர்புக்கு: 977 - 1661 8082
அருகிலுள்ள கோயில்: பசுபதிநாதர் 20 கி.மீ., (மோட்சம் கிடைக்க...)
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 98116 57677

