
சிலருக்கு குரல் இனிமையாக இருக்கும். அவர்கள் பேசுவதே சங்கீதமாக காதில் ஒலிக்கும். அவர்களே பாடகராக வலம் வருகின்றனர். இவர்களைப் போல உங்களுக்கும் பாடகராக ஆசையா... செங்கல்பட்டு மாவட்டம் மானாம்பதி திருக்கரையீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
கோபுரத்தை கடந்ததும் நம்மை வரவேற்கும் விதத்தில் விநாயகர் இருக்கிறார். இவரை தரிசித்து நடந்தால் கருவறையில் திருக்கரையீஸ்வரர் தரிசனம் தருகிறார். இக்கோயிலின் சிறப்பே கருவறை மீதுள்ள விமானம் தான்.
யானையின் பின்புறத்தைப் போல இருக்கும் இதற்கு 'கஜபிருஷ்டம்' என்று பெயர். இந்த அமைப்பை கஜபிருஷ்டம், ஹஸ்தி பிருஷ்டம், குஞ்சர பிருஷ்டம் என்கிறது சிற்ப சாஸ்திரம். கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்பதற்கு யானை என பொருள். இந்த அமைப்பின் மூலம் பிரபஞ்ச சக்தியை கூடுதலாக தக்க வைக்க முடியும். கஜபிருஷ்டக் கோயில்கள் தொண்டை, சோழ நாட்டில் அதிகம் உள்ளன.
இங்குள்ள திருக்கரையீஸ்வரருக்கு தேன் அபிேஷகம் செய்தால் குரல் வளம் உண்டாகும். இந்த பிரசாதத்தை தொடர்ந்து சாப்பிட திக்குவாய், தைராய்டு குணமாகும். ஆஸ்துமா உள்ளவர்கள் சுவாமிக்கு அபிேஷகம் செய்த திருநீற்றை பூசுகின்றனர். இங்குள்ள அம்மனின் பெயர் 'பாடலாம்பிகை'. பைரவர், சூரியன், துர்கை, சூலத்தேவர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. கோயிலின் பின்புறம் உள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி வழிபடுவோருக்கு தோல் நோய்கள் குணமாகும். குளத்தின் அருகே கன்னிமார், காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன.
வேடுவர் வடிவில் இங்கு வந்த சிவனும், பார்வதியும் மான் ஒன்றின் மீது அம்பு தொடுத்ததால் இத்தலம் 'மான் அம்பு எய்திய பதி' எனப்பட்டது. இப்போது 'மானாம்பதி' என்றானது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது.
எப்படி செல்வது: திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் 9 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம்
நேரம்: காலை 7:00 - 11:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 97910 17692
அருகிலுள்ள கோயில் : வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் 32 கி.மீ., (வெற்றிக்கு...)
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 044 - 2717 2225

