
உத்தரபிரதேசம் பிருந்தாவனம் பங்கேபிகாரி கோயிலில் மூலவராக ராதாகிருஷ்ணர் இருக்கிறார். பங்கே பிகாரி என்பதற்கு 'வளைந்து கொடுத்து மகிழ்பவர்' என்பது பொருள். தன் காதலியான ராதாவிற்காக உடலை வளைத்த நிலையில் கிருஷ்ணர் இருக்கிறார்.
கிருஷ்ணர் அவதரித்த இடம் மதுரா என்றாலும் பிருந்தாவனமே சிறுவயது விளையாடல்கள் நடந்த இடம் என்பதால் இங்கு தரிசிப்பதை பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர்.
கோகுலத்தில் கிருஷ்ணர் பிறந்த போது ேஹாமம் நடத்தி பெயர் சூட்டியவர் ஸ்ரீகர்காசாரியார். அவரது பரம்பரையில் வந்த சுவாமி ஹரிதாஸ். இவர் பாகிஸ்தானில் உள்ள முல்டன் என்னும் ஊரில் வசித்தார். 1600ல் தன் சொந்த ஊரான மதுராவிற்கு குடியேறினார். ஒருநாள் பிருந்தாவனத்தில் பக்திப் பாடல்கள் பாடிய நிலையில் ராதையுடன் கிருஷ்ணர் நடனக் கோலத்தில் காட்சியளித்தார். அந்த கிருஷ்ணரே சிலை வடிவில் இங்கு மூலவராக இருக்கிறார்.
1862ல் ராஜஸ்தான் அரண்மனை பாணியில் பிரம்மாண்டமான கோயிலை கோஸ்வாமி என்பவர் உருவாக்கினார். மூலவர் கறுப்பு நிறக் கல்லால் ஆனவர். காலை 8:30 மணிக்கு ஸ்ரீருங்கா தரிசனமும், மதியம் 1:00 மணி நைவேத்யத்தின் போதும், இரவு 8:30 மணிக்கு துாக்க ஆரத்தியும் இங்கு முக்கியமானவை. பூஜையின் போது மணி ஒலிக்கும் வழக்கம் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கிருஷ்ண ஜெயந்தியன்று அதிகாலையில் சுவாமி கண் விழித்ததும் மங்கள ஆரத்தி விசேஷமாக நடக்கும். ஹோலியின் போது ஐந்து நாட்களுக்கு கோபியர்களுடன் காட்சியளிக்கிறார்.
எப்படி செல்வது: மதுராவில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாள்: அட்சய திரிதியை, கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி.
நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 5:30 - 9:30 மணி
தொடர்புக்கு: 98979 19717
அருகிலுள்ள கோயில்: மதுரா ஜென்மஸ்தான் 12 கி.மீ., (மகிழ்ச்சியான வாழ்வுக்கு...)
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி ; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 05652 - 423 888