
குழந்தை வரம் வேண்டுவோர் தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூர் பெருமாளுக்கு வெள்ளிக்காப்பு காணிக்கை செலுத்துங்கள்.
நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். கனவில் தோன்றிய பெருமாள், ''காலை எழுந்ததும் யார் உன் கண்ணில் தெரிகிறாரோ அவரை பின்தொடர்ந்து செல். வயிற்றுவலி தீரும்'' எனத் தெரிவித்தார். மறுநாள் காலையில் வெள்ளைப்பன்றி (வராகம்) ஒன்று வந்தது. தீர்த்தரும் அதை பின்தொடர, இங்குள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதிக்குள் சென்று மறைந்தது. தீர்த்தரும் வழிபட வயிற்றுவலி தீர்ந்தது. வராக வடிவில் சுவாமி வந்ததால் இது 'வரகூர்' எனப்பட்டது. இக்கோயில் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது.
ஒருமுறை கிருஷ்ணர் காட்சியளித்த போது அவருடன் வந்த சத்தியபாமா, '' கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுவீராக'' என கட்டளையிட்டார். தீர்த்தரும் 'ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி' என்னும் பெயரில் கீர்த்தனைகள் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் 'ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்னும் பாடலை இங்கு பாடினார். 'சிக்யோத்ஸவம்' என்பதற்கு 'உறியடி திருவிழா' என பொருள்.
இங்குள்ள மூலவரின் பெயர் லட்சுமி நாராயணர். உற்ஸவர் பெயர் வெங்கடேசப் பெருமாள். துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடியை பிரசாதமாக தருகின்றனர். உடல் நலம் பெற இதைச் சாப்பிடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுவோர் பூஜையில் வைத்த வெள்ளிக்காப்பை அணிந்து கொள்வர். குழந்தை பிறந்ததும் அதை காணிக்கையாக செலுத்துவர். நினைத்தது நிறைவேற அங்கப்பிரதட்சணமும், பிரச்னை தீர பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய்யும் நிரப்புகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று இக்கோயிலில் 'கிருஷ்ண லீலா தரங்கிணி' பாடல்களை பாடுவர்.
எப்படி செல்வது : தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் 10 கி.மீ துாரத்தில் கண்டியூர். அங்கிருந்து நடுக்காவிரி சாலையில் 13 கி.மீ.,
விசேஷ நாள் : கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99657 92988, 04362 - 280 392
அருகிலுள்ள கோயில் : திருவையாறு ஐயாறப்பர் 16 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94430 08104