
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு பாதாள சிவனாக மூலவர் இருப்பதால் 'குண்டுக்குள் கோயில்' என்கின்றனர். 'குண்டு' என்றால் 'பள்ளம்'.
15ம் நுாற்றாண்டில் கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமியம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்தார். இவரது குடும்பத்தினர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் போல கல்பாத்தியில் கோயில் கட்ட மூதாட்டி விரும்பினார். அதற்காக காசியாத்திரை சென்று பாணலிங்கம் கொண்டு வந்தார். கோயில் கட்டுவதற்காக தன் சொத்துக்களை அரசுடைமையாக்கினார்.
மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று, கோயில் கட்ட அனுமதித்தார் மன்னர் இட்டிகோம்பி. சுவாமிக்கு காசி விஸ்வநாதர் என்றும், அம்மனுக்கு விசாலாட்சி என்றும் பெயரிடப்பட்டது. அம்மன் தெற்கு நோக்கி இருப்பதால் எமபயம் போக்குகிறாள்.
தரைதளத்தில் இருந்து தாழ்வாக கட்டப்பட்ட கருங்கல் கோயில் இது. தெற்கு, கிழக்கு திசைகளில் 18 படிகள் கீழிறங்கிச் செல்லும் வகையில் உள்ளன. கோயிலுக்குள் இருந்தே ஆற்றுக்குச் செல்ல படித்துறைகள் உள்ளன.
மயிலாடுதுறையைப் போல இங்கும் ஐப்பசி தேர் திருவிழா நடக்கிறது. திருவிழாவில் விஸ்வநாதர் தேருடன் கல்பாத்தி லட்சுமி நாராயணர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதியும் தனித்தனி தேர்களில் எழுந்தருள்வர்.
கேரளக் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜரின் கனகசபை உள்ளது. நவக்கிரகங்கள் தம்பதியராக காட்சி தருகின்றனர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கின்றனர். ஆயுள் விருத்திக்காக ருத்ராபிேஷகம், மிருத்யுஞ்ஜய ஜபம் செய்கின்றனர்.
முன்னோர் நினைவாக கல்பாத்தி நதிக்கரையில் தர்ப்பணம், சிராத்தம் செய்வது விசேஷம். இத்தலம் 'கேரள மயிலாடுதுறை' எனப்படுகிறது.
எப்படி செல்வது: பாலக்காடு டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், ஐப்பசி கல்பாத்தி தேர் திருவிழா
நேரம்: அதிகாலை 5:30 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94478 39279, 0491 - 257 7955
அருகிலுள்ள கோயில்: ஈமூர் பகவதி 4 கி.மீ., (நோய் தீர...)
நேரம்: காலை 6:00 - 8:15 மணி;மாலை 6:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 0491 - 255 5222