
செய்த தவறுக்கு பரிகாரம் தேடுபவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதரை தரிசித்தால் பாவம் தீரும். இங்கு ஆவணி ஞாயிறன்று செல்வது சிறப்பு.
ராவணனின் மகன் இந்திரஜித் புஷ்பக விமானத்தில் சென்ற போது இப்பகுதியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே சிவலிங்கம் இருப்பதைக் கண்ட அவன், அருகில் இருந்த தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்தான். பின் விமானம் மீண்டும் பறக்க தயாரானதும் சிவ லிங்கத்தை தன் நாட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது மயங்கி விழுந்தான். இதை அறிந்த ராவணன் இத்தலத்திற்கு வந்து மகனின் குற்றத்தை பொறுத்தருள வேண்டினான்.
சுவாமியும் மன்னிப்பு அளிக்கவே 'குற்றம் பொறுத்த நாதர்' எனப் பெயர் பெற்றார். இங்கு வழிபடுபவர்கள் இனி ஒரு தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்கள் என்பதால் 'கருப்பறியலுார்' என்றும், சூரிய பகவான் சிவபூஜை செய்ததால் 'தலை ஞாயிறு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
மன்னர் விசித்திராங்கன் சிவபூஜை செய்து குழந்தை வரம் பெற்றார். அதற்கு நன்றிக்கடனாக கோயிலை விரிவுபடுத்தினார். கோல்வளை நாயகி என்னும் பெயரில் அம்மன் அருள்கிறாள். இந்த மாடக்கோயிலின் முதல் தளத்தில் உமாமகேஸ்வரர் சன்னதியும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதர் சன்னதியும் உள்ளன. சண்டிகேஸ்வரர் மனைவியுடன் இருக்கிறார்.
எப்படி செல்வது: திருப்பூண்டி செல்லும் வழியாக 30 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, ஆவணி ஞாயிறு, திருக்கார்த்திகை.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04364 - 258 833
அருகிலுள்ள கோயில்: திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் 13 கி.மீ., (நவக்கிரக தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 04366 - 329 268, 245 412