
ஆக.11, 2024 - சுந்தரர் குருபூஜை
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் சுந்தரர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலுாரில் ஆதிசைவர் மரபில் சடையனார், இசைஞானி தம்பதிக்கு மகனாக பிறந்தார். நம்பியாரூரர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் எட்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர். தன்னை 'பித்தா' என அழைக்கும்படி சிவனே இவரிடம் கூறினார். எதற்காக தெரியுமா...
சுந்தரருக்கும், திருநாவலுார் அடுத்துள்ள புத்துாரைச் சேர்ந்த சடங்கவி சிவாச்சாரியாரின் மகளுக்கும் திருமணம் நடக்க இருந்தது. அப்போது வயதான அந்தணர் ஒருவர் அங்கு வந்து, சுந்தரரிடம் ''உனக்கும் எனக்கும் வழக்கு பாக்கியுள்ளது. அதை தீர்த்தபின் திருமணம் நடத்து'' என்றார்.
''இதற்கு முன் உங்களை பார்த்ததில்லையே'' என்றார் சுந்தரர்.
''இதோ! இவன் என் அடிமை என எழுதிக்கொடுத்த ஓலை என்னிடம் உள்ளது'' என்றார். கோபப்பட்ட சுந்தரர், ''எங்கே! ஓலையை காட்டுங்கள்'' எனக் கேட்டார். அந்தணரும் ஓலையை காட்டினார். 'திருநாவலுாரில் உள்ள ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லுார் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது.
நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாக இவருக்கு அடிமையாக இருப்போம்' என இருந்தது. இதையறிந்த சுந்தரர், 'இவர் பித்தன் (பைத்தியம்). இவனை நம்பாதீர்கள்'' என கோபத்தில் கத்தினார்.
ஆனால் அங்கிருந்த அனைவரும், ''இவர் உங்களுக்கு அடிமையாக இருப்பதே சரி. திருவெண்ணெய் நல்லுாரில் நீங்கள் எங்கு குடியிருக்கிறீர்கள்'' எனக் கேட்டனர்.
அவர்களை கோயிலுக்கு அந்தணர் அழைத்துச் சென்றார். அவரைப் பின்தொடர்ந்தார் சுந்தரர். ஆனால் திடீரென அந்தணர் மறைய ஒரு பேரொளி கிளம்பியது. ரிஷப வாகனத்தில் உமையவளுடன் சிவபெருமான் காட்சியளித்து, 'அன்பிற்கினிய சுந்தரா! உன்னை ஆட்கொள்ள யாம் வந்தோம். எம்மை தமிழ்ப்பாக்களால் பாடு. பித்தா! எனக் கோபத்தில் கத்தினாயே. அதையே தொடக்கமாக கொண்டு பாடு'' என கட்டளையிட்டார் சிவபெருமான். 'பித்தா! பிறைசூடி பெருமானே!' என பதிகம் பாடினார் சுந்தரர். இவரது குருபூஜை ஆடி சுவாதியன்று கொண்டாடப்படுகிறது. அன்று நாமும் பதிகம் பாடி குருவருளை பெறுவோம்.
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லுார் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.