ADDED : செப் 29, 2025 11:17 AM

படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்ளது. இங்கு சாவித்ரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.
ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அது எங்கு கீழே விழுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு 'நீலத்தாமரை' என்பது பொருள்.
யாகத்தை தொடங்கும் முன் பிரம்மாவின் மனைவி சாவித்ரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போனது. பின்னர் இந்திரனிடம் ஆலோசித்து காயத்ரி தேவியைத் திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி, தன் கணவருடன் வேறொரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இனி பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போகட்டும்' என சாபமிட்டு, அருகிலுள்ள குன்றான அருணகிரி மீதேறி அமர்ந்தாள்.
கோயிலின் முகப்பில் 'ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்' என எழுதப்பட்டுள்ளது. இதற்கு 'உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்' என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வந்த வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. தீர்த்தத்தின் பெயர் புஷ்கர்.
நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் சலவைக்கல் சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜபமாலை உள்ளன. இதை 'விஸ்வகர்மா கோலம்' என்கின்றனர். பிரம்மாவின் இடது புறம் காயத்ரி, வலது புறம் சாவித்திரி உள்ளனர்.
பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக உள்ளனர். சந்நியாசி, பிரம்மச்சாரிகள் மட்டுமே கருவறைக்குள் நுழையலாம். எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி, சிறிய குன்றின் மீது காயத்ரி கோயில்கள் உள்ளன. கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒட்டகத் திருவிழா நடக்கிறது.
எப்படி செல்வது
* ராஜஸ்தான் உதய்ப்பூரில் இருந்து 279 கி.மீ.,
* ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து 185 கி.மீ.,
விசேஷ நாள்: கார்த்திகை பவுர்ணமி.
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மதியம் 3:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0145 - 262 7426
அருகிலுள்ள கோயில்: ரங்கஜி மந்திர் 1 கி.மீ., (மகிழ்ச்சிக்கு...)
நேரம்: காலை 6:00 - 3:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94140 02421