
ராகு கேது தோஷத்தால் குடும்பத்தில் பிரச்னை, செயல்களில் தடங்கல் ஏற்படுகிறதா... கவலை வேண்டாம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தேவநல்லுார் பொத்தையடி தர்மசாஸ்தாவை தரிசித்தால் தீர்வு கிடைக்கும்.
மகாவிஷ்ணு முன்பு மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை பங்கிட்டு தேவர்களுக்கு கொடுத்தார். அமிர்தத்தை சாப்பிட விரும்பிய அசுரனான சுவர்பானு, தானும் ஒரு தேவராக மாறினான்.
அதையறிந்த சூரியனும், சந்திரனும் அவனை மோகினியிடம் காட்டிக் கொடுத்தனர். கையில் இருந்த அமிர்தம் எடுத்த கரண்டியால் அசுரனின் தலையை மோகினி துண்டிக்க தலையும் உடலுமாக துண்டாகி விழுந்தான். அவனது உடல் விழுந்த இடம் கழுத்தறுத்தான் பொத்தை என்றும், தலை விழுந்த இடமே பிரண்ட மலை என்றும் இங்குள்ளது.
அசுரனைக் காட்டிக் கொடுத்து பாவத்திற்கு விமோசனம் வேண்டி சூரியனும், சந்திரனும் சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி கொடுத்த இடமே தேவநல்லுார். இங்குள்ள பச்சையாற்றின் அருகே முன்பு சாஸ்தா கோயில் இருந்தது. காலப் போக்கில் அது அழிந்தது. இதையறிந்த பக்தர்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினர்.
சாஸ்தாவை வழிபட்டால் ராகு, கேது, சூரியன், சந்திரனால் ஏற்படும் கிரக தோஷம் மறையும். நன்மை பெருகும். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இங்கு வழிபாடு நடக்கிறது.
எப்படி செல்வது:
* வள்ளியூரில் இருந்து 20 கி.மீ.,
* களக்காட்டில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 6:00 மணி
தொடர்புக்கு: 99442 17556
அருகிலுள்ள கோயில்: நாங்குநேரி வானமாமலை பெருமாள் 12 கி.மீ.,(குழந்தை வரம்)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04635 - 265 291