
18ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தியாகராஜ சுவாமிகள் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்கவர். 1759 முதல் 1847 வரை வாழ்ந்த இவரது காலத்தை 'தியாகராஜ சகாப்தம்' என்பர். இவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது.
திருவாரூர் ராமபிரம்மம், சாந்தாதேவி தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தியாகராஜரின் பெற்றோர் திருவையாறுக்கு இடம் பெயர்ந்தனர். எட்டு வயதில் தியாகராஜருக்கு ராமதாரக மந்திரம் உபதேசிக்கப்பட்டது. தந்தையின் சங்கீத ஞானம் தியாகராஜரிடம் ஒட்டிக் கொண்டது. திருவையாறு சமஸ்கிருத கல்லுாரியில் தியாகராஜர், நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார்.
தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் அவை வித்வான் ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடமும் சங்கீதம் கற்றார். 38 வயதிற்குள் 96 கோடி ராமநாமம் ஜபித்ததன் பயனாக ராம, லட்சுமணரை நேரில் தரிசிக்கும் பேறு பெற்றார். பார்வதி என்ற பெண்ணை மணந்தார்.
ஐந்தாண்டில் மனைவி இறந்ததால், அவரது தங்கை கமலாம்பாளை மறுமணம் புரிய சீதாலட்சுமி என்ற மகள் பிறந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் சகோதரர்கள் புறக்கணிக்கவே, வீட்டில் இருந்த ராமர் சிலையுடன் புறப்பட்டார். உஞ்சவிருத்தியில் (பிச்சை) கிடைத்த வருமானத்தில் காலம் தள்ளினார். தட்சிணை பெறாமலேயே சீடர்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.
தியாகராஜரின் மீது கொண்ட வெறுப்பால் சகோதரர் ஜப்யேசன், தம்பி எழுதிய பாட்டு புத்தகங்களுக்கு தீயிட்டார். ராமர் சிலையை எடுத்து காவிரியாற்றில் வீசினார். வருத்தப்பட்ட தியாகராஜர் 'அநியாய முஸேயகுரா ரானிது ராது' என்ற பாடலை பாடினார். கனவில் தோன்றிய ராமர் காவிரியில் சிலை கிடக்கும் இடத்தை தெரிவிக்க, தியாகராஜர் 'தொரிகிதிவோ' ( நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) என்ற பாடல் பாடினார்.
சரபோஜி மன்னர் தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்ன போது 'ராமரைப் பாடிய நாக்கால் மன்னரை பாட மாட்டேன்' என மறுத்தார். 'நிதிசால சுகமா? ராமுனி சந்நிதி ஸேவசுகமா?' (பணம் சுகமா...ராமசேவை சுகமா) என்னும் பாடல் அப்போது பிறந்தது. இறந்த ஒருவரை பாடல் பாடி உயிர்பிழைக்கச் செய்தார்.
1847 ல் பகுளபஞ்சமியான தை மாத தேய்பிறை பஞ்சமியன்று ராமருடன் கலந்தார். அவர் மறைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே இவரது பாடல்கள் பிரபலமாயின. பெங்களூர் நாகம்மாளின் முயற்சியால் தியாகராஜர் கோயில் திருவையாறில் கட்டப்பட்டது.
பகுளபஞ்சமியான நாளை (ஜன.18, 2025) ஆராதனை விழா நடக்கிறது.
எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 13 கி.மீ.,
விசேஷ நாள்: பகுள பஞ்சமி, ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி.
நேரம்: காலை 6:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 94436 62578
அருகிலுள்ள கோயில்: திருவையாறு பஞ்சநதீஸ்வரர் (பாவம் தீர...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94430 08104, 0436 - 226 0332