ADDED : ஜூன் 27, 2025 07:23 AM

கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரம் குங்குமசுந்தரி அம்மன் சன்னதியில் வளைகாப்பு நடத்தினால் சுகப்பிரசவம் ஏற்படும். தாயும் குழந்தையும் நலமுடன் வாழ்வர்.
படைப்புக்கடவுளான பிரம்மா ஒருமுறை சிவதரிசனம் பெற கைலாயம் சென்றார். அங்கு நின்ற முருகப்பெருமானை அவர் பொருட்படுத்தவில்லை. அத்துடன், 'நானே படைப்புக் கடவுள்' என ஆணவத்துடன் செயல்பட்டார். இதனால் கோபம் கொண்ட முருகன், படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். பொருள் தெரியாமல் பிரம்மா விழிக்கவே, அவரது படைக்கும் தொழிலை தான் ஏற்றுக் கொண்டார். மந்திரத்தின் விளக்கம் சிவபெருமானுக்கும் தெரியவில்லை.
எனவே தந்தையான சிவனுக்கு குருவாக இருந்து முருகன் உபதேசித்தார். இத்தலமே ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை. உபதேசம் பெறுவதற்காக சிவன் வந்த போது, பார்வதியும் உடன் வந்தாள். அவளை குறிப்பிட்ட இடத்தில் இருக்கச் சொல்லிய சிவன், தான் மட்டும் சுவாமிமலைக்கு சென்றார். பார்வதி தங்கிய இடம் 'உமையாள்புரம்' எனப் பெயர் பெற்றது. இங்கு வாழ்ந்த கமலா என்ற பக்தையின் கணவர் உடல்நலக்குறைவால் கவலைக்கிடமானார்.
தாலிபாக்கியம் பெற வேண்டி அந்தப்பெண் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டார். அம்மன் அருளால் கணவர் குணம் பெற்றார். இதனால் அம்மனுக்கு 'குங்கும சுந்தரி' எனப் பெயர் ஏற்பட்டது. அம்மனின் முன் மகாமேரு சக்கரம் உள்ளது. பெண்கள் சுமங்கலியாக வாழவும், கன்னியர் நல்ல மணவாழ்வு அமையவும் குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
சுகப்பிரசவம் ஏற்பட வளைகாப்பு நடத்துகின்றனர். காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த ஆனந்தமகா கணபதி கோயிலும் இங்கு உள்ளது. இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடை முடிநாதர் கோயில்கள், திவ்ய தேசங்களான கபிஸ்தலம், புள்ள பூதங்குடி உள்ளன.
எப்படி செல்வது: கும்பகோணம் -- திருவையாறு சாலையில் 10 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசியில் திருக்கல்யாணம், ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்.
நேரம்: காலை 9:00 -- 11:00 மணி; மாலை 6:00 -- 7:30 மணி
தொடர்புக்கு: 94425 84410
அருகிலுள்ள கோயில்: கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் 13 கி.மீ.,(நலமுடன் வாழ...)
நேரம்: அதிகாலை 5:30 -- 10:30 மணி; மாலை 4:30 -- 8:30 மணி
தொடர்புக்கு: 94425 84410