
ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இல்லாவிட்டால் பணக்கஷ்டம், தம்பதிக்குள் பிரச்னை ஏற்படும். இதிலிருந்து விடுபட நினைப்பவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் உள்ள திருவுடையம்மனை தரிசிப்பது நல்லது.
முன்பொரு காலத்தில் இப்பகுதி சரக்கொன்றை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இங்குள்ள மேட்டுப்பகுதியில் பசு ஒன்று தினமும் பால் சொரிந்து வந்தது. ஒருமுறை அந்த இடத்தில் பாம்பு ஒன்று பாலைக் குடித்து விட்டு புதருக்குள் மறைவதைக் கண்டார் பசுவின் உரிமையாளர். அங்கு சிவலிங்க வடிவில் புற்று இருப்பதைக் கண்டார். அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டு சுவாமிக்கு 'சுகந்த வனேஸ்வரர்' என பெயர் சூட்டப்பட்டது. திருமணங்கீஸ்வரர் என்றும் சுவாமிக்கு பெயருண்டு.
பிற்காலத்தில் விக்கிரம சோழன் இக்கோயிலில் வழிபட வந்த போது அம்மனுக்கு சன்னதி இல்லையே என வருந்தினார். உடனடியாக சிலை செதுக்கவும் தலைமை சிற்பிக்கு உத்தரவிட்டார்.மலையில் இருந்து கல் எடுத்து வரும் போது, வழியில் அது மூன்று துண்டாக பிளந்தது. தெய்வக் குற்றம் நேர்ந்ததாக கருதிய சிற்பி, தன் கையை தானே வெட்ட முயன்றார். அப்போது 'கலங்காதே... மூன்று கோயில்களில் மூன்று விதமான கோலத்தில் அருள்புரிய இருக்கிறேன். அதற்கான மூன்று சிலைகளைச் செய்' என அசரீரி ஒலித்தது.
அதன்படி திருவொற்றியூரில் வடிவுடை அம்மன், திருமுல்லைவாயிலில் கொடியிடை அம்மன், இக்கோயிலில் திருவுடையம்மனாகவும் அம்பிகை குடிகொண்டாள். தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை திருவுடையம்மம்மனுக்கு அபிஷேகம் செய்தால் சுக்கிரதோஷம் தீரும். பவுர்ணமியன்று தரிசித்தாலும் நன்மை கிடைக்கும்.
எப்படி செல்வது: சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலில் சென்றால் மீஞ்சூரை அடையலாம். 3 கி.மீ., துாரத்தில் உள்ள மேலுார் கிராமத்தில் கோயில் உள்ளது.
விசேஷ நாள்: வெள்ளிதோறும், பவுர்ணமி, ஆடிப்பூரம்.
நேரம்: காலை 7:30 - 12:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 98417 01988, 96779 75628 96001 47124
அருகிலுள்ள கோயில் : வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் 26 கி.மீ., (திருமணத்தடை விலக...)
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 044 - 2637 6151