
சேலம் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ளது வசந்த வல்லபராஜ பெருமாள் கோயில். இங்கு தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர். தங்களின் விருப்பம் நிறைவேற இவருக்கு தபால் மூலம் கோரிக்கைகளை பக்தர்கள் அனுப்புகின்றனர்.
சீதையை கடத்திச் சென்றான் ராவணன். அப்போது ராமர் உள்ளிட்ட அனைவரும் சீதையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தவம் செய்தால் மட்டுமே சீதையை மீட்க முடியும் என நினைத்தார் ஆஞ்சநேயர். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் தான் சங்ககிரி மலை. இங்கு தான் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். தவம் செய்யும் நிலையில் ஒருவரிடம் கோரிக்கையைச் சொல்ல முடியாது அல்லவா! அதற்காக முன்பு ஓலைச்சுவடியில் கோரிக்கைகளை எழுதி வைத்தனர். தற்போது அது தபாலாக மாறி விட்டது. இதனால் 'தபால் ஆஞ்சநேயர்' எனப் பெயர் பெற்றார்.
மலை மீது இருந்த ஆஞ்சநேயர் 17ம் நுாற்றாண்டில் அடிவாரத்தில் இருந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார். வேண்டுதல்களை எழுதி சன்னதியில் கோரிக்கையாக வைக்கலாம். கோயிலுக்கு வர முடியாதவர்கள், 'தபால் ஆஞ்சநேயர், அரசு மருத்துவமனை எதிரே, வி.என்.பாளையம் அஞ்சல், சங்ககிரி' எனும் முகவரிக்கு கடிதமாக எழுதி அனுப்பலாம்.
ஞாயிறன்று மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் அனுப்பிய கடிதங்களை பிரித்து பூஜை செய்கின்றனர். ஆஞ்சநேயர் அருளால் கோரிக்கை நிறைவேறியதும் துளசிமாலை, வெண்ணெய் சாத்தியும், நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிலர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதிய பாடலை பாடி வழிபடுகின்றனர். அந்தப்பாடல் இதோ,
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன்
எம்மை அளித்துக் காப்பான்.
எப்படி செல்வது: சேலம் சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, அமாவாசை.
நேரம்: காலை 7:00 - 9:30 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 99423 40663
அருகிலுள்ள கோயில்: சேலம் அழகிரிநாதர் 42 கி.மீ., (சுக்கிர தோஷம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0427 - 222 1577