
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது திருநாவாய் முகுந்தன் கோயில். திருவோண நட்சத்திரத்தன்றும், ஏகாதசி திதியன்றும் இவரை தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு ஒன்பது யோகிகள் தவம் செய்ததால் இதை நவயோகித்தலம் என அழைத்தனர். அதுவே தற்போது திருநாவாய் என மருவி உள்ளது.
முன்பு மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரை பூக்களால் பெருமாளுக்கு பூஜை செய்து வந்தனர். ஒருநாள் கஜேந்திரனுக்கு தாமரை கிடைக்காததால் வருந்தினார்.
இதனால் பெருமாள் தன் மனைவியான மகாலட்சுமியிடம், 'இனி நீ தாமரையை பறிக்காதே. கஜேந்திரனுக்கு விட்டுக்கொடு' என தெரிவித்தார். அதன் பின்னர் குளத்தில் நிறைய தாமரை மலர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார் கஜேந்திரன். அன்று பூக்களால் பூஜித்த போது பெருமாள் தன் பக்கத்தில் ஏக சிம்மாசனத்தில் மகாலட்சுமியை அமரச் செய்து காட்சியளித்தார்.
அவரே இக்கோயிலில் வேத விமானத்தின் கீழ் முகுந்தன் என்னும் பெயரில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். மூலவரின் முழங்காலுக்கு கீழ்ப்பகுதி பூமிக்கடியில் மறைந்த நிலையில் உள்ளது.
மலர்மங்கை நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். கணபதி, மகாலட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மா, சிவபெருமான் கோயில்கள் உள்ளன. இதனால் இத்தலம் மும்மூர்த்தி தலமாக போற்றப்படுகிறது.
திருமங்கையாழ்வார் இக்கோயிலை திருக்கோஷ்டியூர், திருநறையூருடன் ஒப்பிட்டு பாடியுள்ளார். நம்மாழ்வாரும் இதை பாடியுள்ளார். பிரகாரத்தில் பழமையான ஓவியங்கள் காணப்படுகின்றன. துவாபர யுகத்தில் பாண்டவர்கள், கிருஷ்ணர் இங்கு பித்ரு பூஜை செய்துள்ளனர். ஆடி அமாவாசையன்று முன்னோர் வழிபாடு நடக்கிறது.
எப்படி செல்வது: மலப்புரத்தில் இருந்து 28 கி.மீ.,
விசேஷ நாள்: திருவோணம், வைகுண்ட ஏகாதசி, அமாவாசை.
நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 0494 - 260 2157
அருகிலுள்ள கோயில்: காடம்புழா பகவதி அம்மன் 15 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0494 - 261 5790