
தாழ்ந்த இடத்தை நோக்கி நீரும், வெற்றிடத்தை நோக்கி காற்றும் செல்லும். அதுபோல பிரச்னையில் இருப்பவர்களின் மனம் அமைதியை நாடிச் செல்லும். அந்த அமைதி யாரால் எங்கே கிடைக்கும்? வாழ்வு தரும் வள்ளிமலை சுவாமிகளால் கிடைக்கும்.
குறமகளான வள்ளி பிறந்து உலாவிய இடம். அவளை திருமணம் செய்ய முருகன் திருவிளையாடல் நடத்திய இடம். தம்பியின் திருமணத்துக்கு உதவ விநாயகர் யானை உருவமெடுத்து வந்த தலம் என பல சிறப்பு கொண்டது வள்ளிமலை. அடிவாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார் முருகன். 440 படிகள் மீது ஏறினால் மலைக்கோயிலில் அழகன் முருகனை தரிசிக்கலாம். வெளியே வந்தபின் இடப்பக்கமாக திரும்பி உச்சி நோக்கிப் பயணித்தால் வள்ளிமலை சுவாமிகளின் ஆஸ்ரமத்திற்கு செல்லும் பாதை வந்து விடும்.
வழியெங்கும் மரங்கள். வண்டுகள் எழுப்பும் ஒலி. குரங்குகள் செய்யும் சேட்டைகள் என அனைத்தும் வள்ளி வாழ்ந்த காலத்துக்கே நம்மை கொண்டு செல்லும். படிகள் இல்லாத பாதையில் அரைமணி நேரம் நடந்தால் முதலில் தரிசனம் தருபவள் பொங்கியம்மன். யார் இந்த அம்மன்? ஒருமுறை திருப்புகழ் சுவாமிக்கு சிறு பெண் குழந்தை திருப்புகழ் ஒன்றை பாடிக் காட்டினாள். ஆச்சர்யத்தில், 'யாரம்மா... நீ இவ்வளவு அழகாக பாடுகிறாயே' என்றார்.
அதற்கு சிறுமி, 'என் பாட்டைக் கேட்டு உன் மனம் பொங்கலையா' எனக் கேட்டாள். அந்தச் சிறுமி வேறு யாருமல்ல. வள்ளியம்மை தான். அவளின் அருளால் அன்று முதல் சுவாமிகள் ராக தாளத்துடன் திருப்புகழை பாட ஆரம்பித்தார். பொங்கி அம்மனான இவளை வழிபட்டால் இசை, கல்வியில் சிறந்து விளங்கலாம்.
பிறகு அவர் தவம் செய்த இடமும், ஜீவசமாதியும் இருக்கும் குகைக்குள் நுழையலாம். குகையின் இருளும் குளிர்ச்சியும் நம்மை பூரண அமைதிக்கு அழைத்துச் செல்லும். இங்கு மவுனம் தான் தாய்மொழி. மனதில் இருக்கும் பிரச்னையை மனதார சொல்லி முறையிடலாம். மவுனத்தின் வழியே. எப்படி? ஒன்றும் செய்ய வேண்டாம். ஐந்து நிமிடம் அங்கு தியானம் செய்யுங்கள். எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார்.
வெளியே வந்த பிறகு இன்னும் நடந்தால் சூரியன் காணாத சுனை, வள்ளியம்மை மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம், மலை உச்சியில் அருளும் மல்லிகார்ஜுனர், யானை வடிவில் இருக்கும் பாறை என இயற்கையின் அழகு நெஞ்சை அள்ளும். ஆங்காங்கே சமணர்களின் படுகைகள், பாறைகளில் தீர்த்தங்கரர்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளதையும் பார்க்கலாம்.
எப்படி செல்வது: ராணிப்பேட்டையில் இருந்து பொன்னை செல்லும் வழியில் 19 கி.மீ., வள்ளிமலை.
விசேஷ நாள்: திருக்கார்த்திகை, கார்த்திகை மாதம் அசுவினி நட்சத்திரம் திரயோதசி திதியில் சுவாமிகள் ஜீவசமாதியான நாள்.
நேரம்: காலை 7:00 - மாலை 5:00 மணி
தொடர்புக்கு: 04172 - 252 295
அருகிலுள்ள கோயில்: திருவலம் வில்வநாதேஸ்வரர் 12 கி.மீ., (ஞானம் கிடைக்க..)
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04162 - 236 088

