
திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீசுவரர் - மூங்கில்
நாயன்மாரில் ஒருவரான சுந்தரர் மணமகன் கோலத்தில் தன் திருமணத்திற்காக திருவருட்துறை என்னும் சிவத்தலத்துக்கு வந்தார். அங்கு முதியவர் வடிவில் வந்த சிவன் திருமண வீட்டாரிடம் 'மாப்பிள்ளையான சுந்தரன் என் அடிமை. அவனை என்னுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்' என்று சொல்லி திருமணத்தை தடுத்தார். அதற்கான ஆதாரமாக சான்றுஓலையைக் காட்டினார்.
முதியவருக்கு அடிமையாக பணிபுரிய வேண்டும் என அங்கிருந்தோரும் சுந்தரரை வற்புறுத்தினர். அதிர்ச்சிக்கு ஆளான அவர், 'பித்தனே, கிறுக்கனே' எனத் திட்டினார். அதை பொருட்படுத்தாத முதியவர் மணமகன் கோலத்திலேயே சுந்தரரை அழைத்துச் சென்றார்.
மூங்கில் வனமான திருவெண்ணெய் நல்லுார் கருவறைக்குள் சுந்தரரின் கண் முன்னே சென்று மறைந்தார். முதியவராக வந்து தன்னை ஆட்கொண்டவர் சிவபெருமான் என்பதை அறிந்து, 'அறியாமையால் பித்தனே என திட்டி விட்டேனே' என அழுதார். 'திட்டிய சொல்லாலேயே எம்மை வாழ்த்திப் பாடு” என அசரீரி கேட்டது. 'பித்தா பிறைசூடி பெருமானே' எனத் தொடங்கும் முதல் தேவாரப் பாடலை பாடினார். அன்று முதல் சிவத்தலங்களுக்குச் சென்று பக்தியைப் பரப்பினார். கிழவராக வந்த சிவன் சாய்ந்து நின்ற துாண் இக்கோயிலில் தற்போதும் உள்ளது. இதைத் தொட்டால் சூடாக இருப்பதை உணரலாம். சிவபெருமானின் பாதம் பட்ட இடத்தை தொட்டுக் கும்பிடுகின்றனர்.
மூங்கில்வனமாக இருந்த இத்தலத்தில் தாருகாவன முனிவர்கள் தங்கியிருந்தனர். அகந்தை மிக்க அவர்கள் சிவபெருமானையே அழிக்கத் துணிந்தனர். முனிவர்களின் அகந்தையை அகற்றி, அவர்களை இத்தலத்தில் தவம்புரிய அருள்புரிந்தார் சிவபெருமான். அதனால் இத்தலம் 'அருள்துறை' எனப் பெயர் பெற்றது. தன்னை அழிக்க துணிந்தவர்கள் மீதும் அருள்புரியவே 'கிருபாபுரீசுவரர்' என்றும் பெயர் பெற்றார்.
இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் உள்ளது. இதன் தாவரவியல் பெயர் பாம்பூசா ஆரண்டினேசியா (Bambusa arundinacea). இது போயேசியே குடும்பத்தை சேர்ந்தது. மூங்கில் மரங்கள் வறண்ட நிலத்தில் கூட நன்கு வளரும்.
சுந்தரர் பாடிய பாடல்
பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான் மறவாதே
நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லுார் அருட்துறையுள் அத்தாஉனக்கு ஆளாய்இனி அல்லேன் எனலாமே.
திருவெண்ணைநல்லுாரில் அருள்புரியும் பித்தனே, பிறைசூடிய பெருமானே உனை மறவாமல் என்றும் நினைத்து போற்றுகின்றேன் என்கிறார் சுந்தரர்.
சித்தர் போகர் பாடிய பாடல்
மூங்கிலரி சியின்பெயர் மூர்க்கங்கேளு
முள்ளான வாஞ்சிகோவே ணுசபலாகும்
தீங்கில்லாத் திரணகேது சதிநாகமாகும்
துச்சார துக்கசா ரச்சமாகுஞ்
சாங்கிலா சூகபகுவார காரமுகமாகுஞ்
சகாரமார கீசகச்சைவம கசோவாவாம்
வீங்கிலாம் பிருத்தீயு யீசமுமாகும்
வெண்மையா மூங்கிலரிசிப் பேருமாமே
மூங்கிற்குருத் தான்பெயரை மொழியக்கேளு
முனிவான வஞ்சக ரிருட்சோவாகும்
லாங்கிருத்து விதாகிவாத பித்தாளாவாம்
நலமான திரணத்துவ சோயவபலமாகும்
தீங்கிர தேசத்தி திதமுமாகும்
திறமான வேணுவக் கடுபுகியாகும்
ஊங்கிர விதிரவிலா சனியுமாகு
மொளிமூங்கிற் குருத்திட வண்மையாமே
வாஞ்சிகோ, கோவேனுசபலம், திரனகேது, சதிநாதம், துக்கசாரம், சூகுபகுவாரம், காரமுகம், தீசகசைவம், கசோவாம், பிரித்தியுஞ்சம் ஆகியன மூங்கில் அரிசியின் வேறு பெயர்களாகும். மஞ்சகரிச்சம், விதாகிவாதபித்தம், திரததுவசயபலம், தேசப்பிதம், வினோபகடுமுகி, விசிறவிளாசினி ஆகியன மூங்கில் குருத்தின் வேறு பெயர்களாகும்.
சித்தர் அகத்தியர் பாடிய பாடல்
குடற்கட்டுச் சூலையுடன் குன்மம் உதிரம்
உடற்கெட்டா தோடி யொழியும் - அடற்றங்கு
வேல்விழிமா தேகேளாய்! வேயின்
இலைதனக்குக்
கால்வழியுஞ் சோணிதம், போங் காண்.
ரத்தம் உறையும் நோயை மூங்கில் இலையால் குணப்படுத்தலாம்.
உதிரபித் தந்தீர்க்கும் ஓங்குசுரத் திற்கும்
அதிரவரு கண்ணோ யதற்கும் - புதிதாய்க்
கஞ்சிசெய்ய லாகுங் கருதிற்சிற் றுண்டியுமாஞ்
செஞ்சிலம்பார் மூங்கில் அரிசி.
மூங்கில் அரிசியை சமைத்து பாயாசம் செய்து சாப்பிட ரத்த அழுத்தம், கண் நோய்கள் மறையும்.
நீர்க்கடுப்பு மெத்தவுறு நீடுபித்த மும்பெருகும்
ஆர்க்கும் அனலம் அதிகரிக்கும் - பார்க்குளுறை
கோங்கி னறியமுகைக் கொங்கை
மலர்ந்திருவே
மூங்கிலின் பாய்க்கு மொழி.
மூங்கில் பாயில் தொடர்ந்து படுத்தால் சிறுநீர் எரிச்சல், உடல்சூடு தணியும்.
நகத்தில் ஏற்படும் வீக்கம், அழுகிய
புண்கள் குணமாகும். மூங்கில் குருத்தை இடித்து சாறு பிழிந்து புண்களின் மீது பூசினால் விரைவில் ஆறும்.
வேயரி சியிலடு வெண்சுதை சர்க்கரைப்
பாயச முண்டிடப் பல்பிணி யுங்கெடும்
மூங்கில் அரிசியை பாயாசம் செய்து சாப்பிட உடல் பலமடையும். நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சித்தர் தேரையர் பாடிய பாடல்
சூதக வாய்வினது சோணிதந்தங் காதுவரு
மாதே! சுரந்தணியும் வாதம்போம்பூ - பூதரமேல்
ஓங்கி வளர்ந்திழையு மோங்கலெனு
மூங்கிலுக்கு
வாங்குஞ்சு வாசம்போம் வாழ்த்து.
மூங்கில் மரப் பட்டை, இளந்தண்டை சீவி அத்துடன் கருஞ்சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் பிரசவத்துக்கு பின் ஏற்படும் ரத்தச்சிக்கல் மறையும்.
பித்தக்கை காலெரிச்சல் பேசுமதிற் றாகசுரம்
தொத்துஞ் சயகாசந் தொல்லிருமல் - குத்தலுற
முற்றியநீர் கட்டை முறித்துவிடும் மூங்கிலதில்
பற்றியதோர் உப்பினது பண்பு.
பித்தத்தால் ஏற்படும் கைகால் குடைச்சல், எரிச்சல், தாகம், ஜுரம், ஆஸ்துமா, இருமல், நீர்க்கட்டு ஆகியவற்றுக்கு மூங்கில் உப்பு சிறந்த மருந்தாகும்.
சித்தர் தன்வந்திரி பாடிய பாடல்
வேயுப்பின் சுவைக ஷாயம் விளம்பிய மதுரந்
திக்தம்
தேயுறு சீதம் ரூகூந் துகளறு மதுரம் பாகந்
தேய்வுறு காசங் கிருச்ரந் தெரிகூயஞ்
சுவாசந் தீரு
மேய்வுறும் பலமே புஷ்டி யியைந்திடு மென்ப
மேலோர்.
மூங்கில் உப்பு கசப்பு, இனிப்பு கலந்த சுவையுடையது. இருமல், சளியை போக்கும். உடலுக்கு பலம் தரும். பித்தம் தணியும்.
எப்படி செல்வது: கடலுார் - திருக்கோவிலுார் செல்லும் வழியில் 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 93456 60711
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567