
உறக்கத்தில் இருந்து எழுவோம்
சேர நாட்டின் தலைநகரான வஞ்சியும், சோழ நாட்டின் தலைநகரான உறையூரும் சேவல் கூவி எழுகின்றது என்றால் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதி அந்தணர்கள் ஓதும் வேத ஒலி கேட்டே துயில் எழுகிறது என்கிறது பரிபாடல். அதிகாலையில் எழும் பழக்கம் பாரத நாட்டின் கலாசாரம். சனாதனம் இதையே காலையில் எழும்போது 'ஹரி ஹரி' என சொல்லியபடி எழுவாயாக என்கிறது.
ஆண்டாளும், முனிவர்களும், யோகிகளும் 'மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் கேட்டிலையோ' என பாடுகின்றாள். ஆனால் இப்போது ஆங்கிலத்தில் ஹரி(வேகமாக) என்று எழும் சூழல் உண்டாகி விட்டது. இரவு எட்டு மணிக்குள் உறங்கி அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தனர் நம் முந்தைய தலைமுறை. இன்றும் சிலர் இதைக் கடைபிடிக்கிறார்கள்.
ஆனால் இன்றைய தலைமுறை அதிகாலை 12:00 மணிக்கு துாங்கி காலை எழுவதற்கு எட்டு மணி ஆகிறது. பெற்றோரும் இதற்குச் சமாதானம் சொல்கிறார்கள். இரவெல்லாம் படிப்பு, வேலை என்ன செய்வது என்கிறார்கள். 'டிவி', அலைபேசி துாக்கத்தை பன்னிரண்டு மணிக்கு தள்ளி விட்டது.
அலைபேசி ஒருபுறம் என்றால் வெளிநாட்டுப் பணிகளை வலைதளம் மூலம் கணினியில் பணிபுரிவோர் தங்களின் துாக்கம், உடல்நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர் என்பது மருத்துவ உலகம் கூறும் கசப்பான உண்மை.
பறவைகளின் ஒலியைக் கேட்டே அக்காலத்தில் மக்கள் அதிகாலை கண் விழித்து அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். கரிச்சான்குருவி அதிகாலை 3:00 மணிக்கும், குயில் 4:00 மணிக்கும், சேவல் 4:30 மணிக்கும், காகம் 5:00 மணிக்கும், மீன்கொத்திப் பறவை 6:00 மணிக்கும் ஒலி எழுப்புவதைக் கொண்டே நேரத்தைக் கணக்கிட்டனர். மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் பறவைகள், விலங்குகள் இரவு நேரத்தை உறங்க மட்டுமே பயன்படுத்துகின்றன. இரவில் இலைகளை மூடி ஓய்வெடுப்பதை கண்கூடாக சில மரங்களின் மூலம் அறிகிறோம்.
இரவில் கண் விழிக்கும் ஆற்றலைப் பெறும் யோகக் கலையை லட்சுமணன், அனுமன் ஆகியோர் விதிவிலக்காகப் பெற்றிருந்தனர் எனினும் பெரும்பாலோர் இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்து வந்தனர். 'சீக்கிரம் படுக்கச் சென்று சீக்கிரம் விழித்துக் கொள்' என ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. 'வைகறை துயிலெழு' என்பது நமது அவ்வைப் பாட்டி தந்த அருமையான வரி. 'நல்ல பொழுதை எல்லாம் துாங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்' என்பார் பட்டுக்கோட்டையார். எனவே உறங்குவதற்கான நேரத்தையும், விழிப்பதற்கான நேரத்தையும் நாம் குறிப்பாக அடுத்த தலைமுறையினர் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
வைகறைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்கிறது வேதம். காற்றில் ஓசோன் அதிகம் உள்ள நேரம் அது. யோகக்கலை, மூச்சுப்பயிற்சி செய்ய அதுவே உகந்த நேரம். வரமாய் இருக்கின்ற வைகறைப் பொழுதைப் பயன்படுத்திக் கொள்வாய் என்கிறது உபநிடதம்.
முயல், ஆமைக்கதை அனைவரும் அறிந்த ஒன்றே. தொடர்ந்த முயற்சியால் ஆமை வெற்றி பெற்றது. இறுமாப்பு எய்தி துாங்கியதால் முயல் தோற்றது. முயல் ஆமையால் தோற்றது என்பதை விட முயலாமையால் தோற்றது என்றே சொல்லலாம். வரமாய் அமைந்த வைகறையிலே எழுவோம். வளரும் தலைமுறையை எழுப்பப் பழகுவோம். உறக்கத்தில் இருந்து மட்டுமல்ல...
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870