ADDED : டிச 22, 2023 04:46 PM

மதுரையைப் போலவே தேனி மாவட்டம் கூடலுாரிலும் கூடல் அழகிய பெருமாள் கோயில் உள்ளது.
சிவனிடம் வரம் பெற்ற அசுரன் ஒருவன் தேவர்களை துன்புறுத்தினான். வருந்தியவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் தேவர்களிடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இங்கு ஆலோசனையில் ஈடுபட்டு அசுரனை அழித்தார். பின்பு தேவர்களின் வேண்டுதலுக்காக மகாவிஷ்ணு இங்கேயே எழுந்தருளினார். காலப்போக்கில் இங்கு வழிபாடுகள் மறைந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் மதுரையில் கோயில் கொண்டுள்ள கூடலழகர் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இதனால் அவர் தனது பகுதியில் கூடலழகருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென்ற ஆசை எழுந்தது. இதற்கான வழியை பெருமாளிடம் அருளும்படி வேண்டினார். அவரது கனவில் தோன்றிய கூடலழகர் இத்தலத்தை சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி தான் கண்ட அமைப்பில் தாயார்களுடன் சுவாமிக்கு சிலை வடித்து கோயில் கட்டினார். சுவாமிக்கு 'கூடல் அழகர்' என்ற பெயரும் சூட்டினார்.
பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வெள்ளிதோறும் வாசனை திரவியம், நல்லெண்ணெய் சேர்ந்த கலவையால் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். பிரிந்த தம்பதியர்கள், உறவினர்கள் மீண்டும் சேர சுவாமிக்கு துளசி மாலை சாற்றலாம். பதவி உயர்வு கிடைக்க விரும்புபவர்கள் சுவாமிக்கு தோளில் அங்கவஸ்திரம் அணிவிக்கலாம். மூலவர் மதுரை கூடலழகர் பெயரிலும், உற்ஸவர் அழகர்கோவிலில் அருளும் சுந்தர்ராஜர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இப்படி ஒரேசமயத்தில் இருவரை தரிசிப்பதால் இரு திவ்ய தேச பெருமாள்களின் அருளைப் பெறலாம்.
திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயிலில் பெருமாள் அஷ்டாங்க விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். அதைப்போலவே இங்கும் கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானத்திற்கு சிறப்பு என்னவென்றால்... ஒருநாளைக்கு 12 முறை வீதம் 48 நாட்கள் விமானத்தை சுற்றி வந்து பெருமாளை வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும். அதிலும் இங்கு விமானத்தில் தசரதரின் ஆட்சியிலிருந்து ராமர் பிறப்பு, திருமணம், வனவாசம், சீதை கடத்தப்படுதல், ராமர் பட்டாபிஷேகம் என ராமாயண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானத்திற்கு 'ராமாயண விமானம்' என்றும் பெயர் உண்டு.
கோயில் முன்மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெய்யுடன் நவநீத கிருஷ்ணர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர் உள்ளனர். புளியமரம் தலவிருட்சமாக உள்ளது.
எப்படி செல்வது: தேனியில் இருந்து கூடலுார் 47 கி.மீ.,
விசேஷ நாள்: சித்ராபவுர்ணமி கிருஷ்ண ஜெயந்தி புரட்டாசி சனிக்கிழமை
நேரம்: காலை 10:30 - 12:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 04554 - 230 852
அருகிலுள்ள தலம் கம்பராயப்பெருமாள் கோயில் 10 கி.மீ., (புத்திர தோஷம் தீர...)
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94864 69990, 93612 22888