sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 32

/

தலவிருட்சங்கள் - 32

தலவிருட்சங்கள் - 32

தலவிருட்சங்கள் - 32


ADDED : ஜன 05, 2024 10:48 AM

Google News

ADDED : ஜன 05, 2024 10:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் -- தசவில்வம்

மோட்சம் பெற்ற உயிர்கள் மட்டுமே கைலாயத்தை தரிசிக்க முடியும். ஆனால் வாழும் காலத்திலேயே கைலாயம் தரிசித்த புண்ணியத்தை பெற பூலோக கைலாயமாக ஒரு கோயில் உள்ளது தெரியுமா... அதைக் காண கண்கள் கோடி வேண்டும்.

பாண்டிய மன்னரான மலையத்துவஜனின் மகள் மீனாட்சியை, சொக்கநாதரான சிவன் மணம் புரிந்து மதுரையின் மன்னராக பொறுப்பேற்க தயாரானார். பாண்டியர்கள் அரச பீடத்தில் அமரும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதற்காக சிவலிங்கம் ஒன்றை நிறுவி தனக்கு தானே பூஜை செய்தார் சொக்கநாதர்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலின் கருவறையில் சிவனும், பார்வதியும் பூஜை செய்யும் நிலையில் வீற்றிருப்பது சிறப்பு. துன்பம், தடைகள் விலகவும், விருப்பம் நிறைவேறவும், வீடு கட்டவும், தொழில் செய்யவும், பணக்கஷ்டம் தீரவும் வழிகாட்டுவதோடு அடியார்களுக்கு எல்லா நன்மைகளும் புரிவதால் 'இம்மையிலும் நன்மை தருவார்' என சுவாமி அழைக்கப்படுகிறார். பஞ்சபூதங்களில் இது மண் தலமாக இருப்பதால் வீடு கட்டுபவர்கள் கைப்பிடி மணல் வைத்து வேண்டி கட்டடப் பணியை தொடங்குகின்றனர்.

மீனாட்சியம்மன் கோயிலின் உள்ஆவரண கோயிலான இது மதுரை நகரின் தென்மேற்கு திசையில் உள்ளது. இங்கு சிவன் வல்லப சித்தராக தோன்றி கல் யானைக்கு கரும்பு கொடுத்த வரலாறு சிறப்பானது. பத்மாசனத்தில் அமர்ந்து வலது கையில் ஆகாயத்தை காட்டி, இடது கையில் சித்த மருந்துகளை வைத்தபடி இவர் இருக்கிறார். கல்வியில் சிறக்கவும், கலைகளில் தேர்ச்சி அடையவும், அமைதி பெறவும் பவுர்ணமி, திங்கட்கிழமைகளில் சாம்பிராணி பதங்கத்தால் காப்பிட்டு, பூப்பந்தல் இட்டு வேண்டுகின்றனர். காய்ச்சலை போக்கும் ஜுரத்தேவர் தனது மனைவியான சுரசக்தியுடன் இங்கிருப்பது சிறப்பு. காய்ச்சல் நீங்கி உடல்நலம் பெற மிளகு ரசம், கார புளியோதரை வைத்து நைவேத்தியம் செய்கின்றனர். இங்கு 60, 80 வயதில் நடத்தும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிேஷக வைபவத்தை நடத்துகின்றனர்.

மூன்றடுக்கு கொண்ட திரிசூலம் போல 10 இலைகளுடன் கூடிய அபூர்வ தசவில்வம் இங்கு தலவிருட்சமாக உள்ளது. காட்டு எலுமிச்சை, நாக வில்வம், பத்ரமரம் என்றும் இதற்கு பெயருண்டு. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள் என வேதங்கள் சிறப்பிக்கின்றன.

நருங்கி கிரனுலேட்டா (Naringicrenulata) என்ற தாவரவியல் பெயரும், ரூட்டேசியே குடும்பத்தை சார்ந்ததுமான தசவில்வம் சிவ வழிபாட்டிற்கு சிறந்தது என்பதால் கோயில்களில் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. மரங்களிலே தொன்மையான மரம் என்பதால் இதை 'ஆதி' என்றும், காடுகளில் நறுமணம் தருவதால் 'வனமுனி' என்றும் போகர் குறிப்பிடுகிறார்.

மூன்று அடுக்கு, ஐந்து அடுக்கு, ஏழு அடுக்கு, ஒன்பது அடுக்கு என வில்வ இலைகள் பலவிதமாக இருக்கின்றன. ஏழு, ஒன்பது அடுக்கு வில்வத்தை மகாவில்வம், பிரம்ம வில்வம் என்பர். அழிந்து வரும் மரங்களில் தசவில்வம், மகாவில்வம், காசி வில்வம், ஏகவில்வம் குறிப்பிடத்தக்கவை. அனைத்து வில்வங்களும் ஒரே மருத்துவ குணம் கொண்டவை என சித்த நுால்கள் சொல்கின்றன.

வில்வத்தின் சிறப்புகளை காளகஸ்தி கோயில் தலபுராணம் குறிப்பிடுகிறது. வில்வமரம் பஞ்சதருக்களில் ஒன்று. மற்றவை மா, வன்னி, மந்தாரை, பாதிரி ஆகியன. வில்வ வேர் காய்ச்சல், வாந்தி, மாந்தம், பேதி, அதிக தாகம், உடல் வலி போக்கும். வில்வ வேரில் இருந்து தயார் செய்யப்படும் வில்வாதி தைலம், ஒற்றை தலை வலி, கண் நோய்களை போக்கும். வில்வ இலை உடல் வெப்பம், பார்வை குறைபாடு, காது கேளாமை, மூலம், கண் நோயை தீர்க்கும். வில்வ காயை காய வைத்து, நெருப்பில் கருக்கி, உப்பு சேர்த்து பல் தேய்க்க பல் வலி, ஈறு வலி, பல்லில் ரத்தக்கசிவு மறையும். வில்வம் பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை தரும் வில்வப்பழச் சதையிலிருந்து தயார் செய்யப்படும் வில்வாதி லேகியம் பேதியை கட்டுப்படுத்தும். பலம் சேர்க்கும். வயிற்றுபுண்ணை போக்கும். இலையில் உள்ள எண்ணெய் நறுமணம் தரும்.

சிவ வழிபாடு செய்த அசுரர்கள், சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுரகிரி மலையில் வில்வமாக மாறி வழிபடுவதாக சதுரகிரி புராணம் கூறுகிறது. மூன்றடுக்கு வில்வ இலைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகும். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய சக்திகள் திரிசூல வடிவில் சக்தி அம்சமாக வில்வ இலைகள் உள்ளன.

எப்படி செல்வது: மதுரை ரயில் நிலையத்திலிருந்து அரை கி.மீ.,

நேரம்: காலை 6:15 - 11:30 மணி; மாலை 4:30 - 9:30 மணி

தொடர்புக்கு: 94434 55331

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us