/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பிதுர்தோஷத்தை போக்குவார் பரிதியப்பர்
/
பிதுர்தோஷத்தை போக்குவார் பரிதியப்பர்
ADDED : ஜன 12, 2024 04:13 PM

பிதுர், சூரிய தோஷம் உள்ளவர்கள் தரிசிக்க வேண்டிய கோயில் தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூரில் இருக்கும் பரிதியப்பர் கோயில். இத்தலம் பாஸ்கரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது.
'பரிதி' என அழைக்கப்படும் சூரிய பகவான் ஒருமுறை கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். சிவபெருமானின் அறிவுரைப்படி இங்கு வந்தவர் தீர்த்தம் உண்டாக்கி சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். இதன் மூலம் அவரது நோய் நீங்கியது. இதனால் இங்கு சுவாமி பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இந்த சிவலிங்கம் பூமியில் புதைந்தது.
பின் ஸ்ரீராமபிரானின் முன்னோரான சூரிய குலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி மூலம் மீண்டும் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது ஒருநாள் இங்கு வந்து இளைப்பாறினார். அப்போது இவரது குதிரைச்சேவகன் புல் சேகரிக்க நிலத்தை தோண்டியபோது, பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே ரத்தம் பீறிட்டது. விஷயமறிந்த சிபி சக்கரவர்த்தி அபிேஷகம் செய்து வழிபட்டார். இப்படி சூரிய பகவானால் அமைக்கப்பட்ட லிங்கம், சூரிய குலத்தோன்றலான சிபி சக்கரவர்த்தி மூலம் உலகிற்கு தெரிய வந்தது. இந்த லிங்கம் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி 18,19,20 தேதியில் விழுகிறது.
இங்கு சிவலிங்கம் எதிரே சூரிய பகவான் நின்று சிவதரிசனம் செய்யும் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே உள்ளனர். அம்பாள் மங்களாம்பிகை தனிசன்னதியில் அருள் பாலிக்கிறாள்.
பிதுர் தோஷம் உள்ளவர்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள், சூரிய தசை நடப்பவர்கள், சிம்ம ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில். இவர்கள் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிறன்று சுவாமியை தரிசித்தால் தோஷம் விலகும்.
எப்படி செல்வது
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 18 கி.மீ.,
விசேஷ நாள்: தைமாதப்பிறப்பு ரதசப்தமி, பங்குனி சூரிய பூஜை 10 நாள்
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மதியம் 3:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 04372 - 256 910
அருகிலுள்ள தலம்: தஞ்சாவூர் திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில் 60 கி.மீ.,
(நவக்கிரக தோஷம் தீர...)
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0435 - 247 0480