sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 33

/

தலவிருட்சங்கள் - 33

தலவிருட்சங்கள் - 33

தலவிருட்சங்கள் - 33


ADDED : ஜன 12, 2024 05:20 PM

Google News

ADDED : ஜன 12, 2024 05:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்காழி சாலைக்கரையாள் காமாட்சி மகாமாரியம்மன் - வேம்பு

கார்த்தவீரியன் என்னும் சத்திரியன் சூரியனுக்கு சமமான ஆற்றல் பெற்றிருந்தான்.

அக்கினி பகவானை தன் அஸ்திரமாக கொண்ட அவன், தன்னை எதிர்த்த இலங்கை மன்னன் ராவணனை சிறை வைத்தான். திரிசிதர் என்னும் முனிவரிடம் பெற்ற வரத்தால் முனிவர்களை எல்லாம் துன்புறுத்தினான். ஜமதக்கினி முனிவர், அவரது மனைவி ரேணுகாதேவியை துன்புறுத்தி அவர்களிடமிருந்த பசுவான காமதேனுவைக் கைப்பற்றினான். தடுக்க வந்த முனிவரின் தலையை வெட்டி வீசியதோடு காமதேனுவை கதற கதற இழுத்துச் சென்றான். பழிக்குப் பழி தீர்க்க ஜமதக்கினி முனிவரின் மகனான பரசுராமன், தன் தந்தையை கொன்ற கார்த்தவீரியன் உள்ளிட்ட 27 தலைமுறை சத்திரியர்களையும் அழிப்பதாக சபதமிட்டு தன் ஆயுதமான கோடாரியால் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான்.

பரசுராமன் தன் தந்தையின் உடலுக்கு எரியூட்டிய போது தாயாரான ரேணுகாதேவி உடன்கட்டை ஏற முயன்றாள். அதையறிந்த சிவபெருமான் கனமழை பெய்யச் செய்து தீயை அணைத்தார். தீக்காயத்துடன் தப்பிய ரேணுகாதேவியின் முன் சிவபெருமான் தோன்றி,

'' ஜமதக்கினி முனிவரின் மனைவியான நீ சாதாரண பெண் அல்ல. பார்வதியின் அம்சம். அக்னியால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அதை நிரூபிக்கவே இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. உன்னை வழிபடுபவர்கள் துன்பத்தில் இருந்து விடுபடுவர். நீயே மாரியம்மனாக அவதரித்து உயிர்களுக்கு அருள்புரிவாயாக'' என சொல்லி மறைந்தார். இதன்பின் மாரியம்மன் வழிபாடு பரவியது.

இத்தலத்தில் காமாட்சி மாரியம்மன், சாலைக்கரையாள் என்னும் பெயரில் அம்மன் அருள்புரிகிறாள். பில்லி, சூனிய பாதிப்பு தீர அம்மனுக்கு படையலிட்டு வழிபடுகிறார்கள். இங்கு வேண்டி குழந்தைபேறு பெற்றவர்கள் அம்மனுக்கு சேலை சாத்துகின்றனர்.

அசாடிராக்டா இண்டிகா (Azadirachta indica) என்னும் தாவரவியல் பெயரும், மீலியேசியே குடும்பத்தை சார்ந்ததுமான வேப்ப மரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும்.

இங்குள்ள வேப்ப மரத்தடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சித்திரை மாத அமாவாசை, ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பவுர்ணமியன்று அம்மனுக்கு விசேஷ ஹோமம் நடக்கிறது. கரகம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி, பால் குடம் சுமத்தல், தீ மிதித்தல் போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

சித்தர் போகர் பாடிய பாடல்

வேம்பிடைப் பெயர்களையே விரும்பிக்கேளு

மிடுக்கான பிசுமந்தம் நிம்பவாகும்

ஆம்பான அரிஷ்டமாஞ் சருதோபத்திரி

அழகான பிரபத்திரம் பாரிபத்திரமாந்

தாம்புய மனோயவ னேஷ்டமாகுஞ்

சாகாத மூலிதான் பழங்காயாகும்

தாம்பான சுத்தித்த சூதபற்பம் தத்தமாம்

தத்தமாம வேம்பினுட தூய்மையாமே

பிசுமந்தம், நிம்பம், அரிஷ்டம், சுந்சருதோபத்திரி, பிரபத்திரம், பாரி பத்திரம், தாம்புயம், மனோயவம், சுனேஷ்டம், சாகாதமூலி, பழங்காயாம், சூதபற்பம், தத்தம் ஆகியவை வேம்பிற்குரிய பெயர்கள் என போகர் குறிப்பிடுகிறார்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

கிருமிகுட்ட மாந்தங் கெடுவிடஞ்சு ரங்கள்

பொருமியம சூரிகையின் புண்கள் - ஒருமிக்க

நிம்பத் திலையிருக்க நீடுலகில் நீங்காமல்

கம்பத் திலையிருக்கக் காண்.

வயிற்றுப்புழு, தோல் நோய், மாந்தம், விஷக் காய்ச்சல், அம்மை, சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் வேப்பிலையால் குணமாகும்.

புந்தியிதைத் தீட்டுவிக்கும் புன்பிணியை

யோட்டுவிக்கு

மிந்தியத்தை நன்றா யிசைவிக்கும் - சந்ததமம்

வீறுண்டாங் கற்ப மிகவுண்டா மெஞ்ஞான்றும்

மாறன்றா ரையமில்லா மல்.

வேம்பின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. புத்தியைத் தெளிவிக்கும். கபம் போக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வீரியம் உண்டாக்கும். மூலிகை கற்ப மருந்துகளில் இதுவும் ஒன்று.

பித்தந் தெழுந்த பெருமூர்ச்சை நாத்தோடம்

சத்தத் தெழுவமனம் தங்கருசி - முற்றியகால்

ஏப்பம் மசகீட மிவையேகு நாட்சென்ற

வேப்பமவ ருக்கு வெருண்டு.

நுாறாண்டு பழமையான வேப்ப மரத்தால் மயக்கம், பித்தம், நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, வாத நோய், ஏப்பம், வயிற்றுப்புழுக்கள் மறையும்.

வாதம்போம் பித்தமிகும் மாறாக்கி ரந்தியொடு

மோதுசுரப் பான்சிரங்கு முன்னிசிவும் -ஓதுடலின்

நாப்ப ணுறுசுரமு நாடுசன்னி யுந்தொலையும்

வேப்பநெய் யென்றொருக்கால் விள்ளு.

வேப்பெண்ணெய்யை பூசினால் மூட்டு வலி, கட்டிகள், சிரங்கு, கை கால் பிடிப்பு, காய்ச்சல் ஆகியன நீங்கும். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து துணியில் தடவி பற்றிட அம்மைப் புண், நீர் வடியும் கரப்பான், சொறி, சிரங்கு மறையும்.

சன்னியுடன் வாதந் தலைநோய்போம் வாதமறும்

முன்னின்ற தோடம் முறியுங்காண் - பன்னுதமிழ்

வல்லவரே! வேம்பினால் வந்தபிண்ணாக்

கென்றொருகால்

சொல்லவையம் போமே தொலைந்து.

வேப்பம் புண்ணாக்கை இடித்துப் பொடித்து, வறுத்து ஒற்றடம் கொடுக்க

ஜன்னி, மூட்டு வலி, தலைவலி, சைனஸ் பிரச்னை தீரும். புண்ணாக்கை எடுத்து சாம்பலாக்கி மூக்கில் நுகர மூக்கு நீர்,

சைனஸ், தலைவலி நீங்கும்.

ஓதரிய வேம்பை யுரைக்கிற் சுரமுடனே

வாதமுறு மூலகண மாந்தம்போந் - தீதாய்

உதிருமெரி பூச்சிகுன்ம மோதா தொழியுஞ்

சிதறுமலம் போகுமெனத் தேர்.

நன்கு முற்றிய வேப்பம்பட்டையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க ஜுரம் மறையும்.

தன்வந்திரி பாடிய பாடல்

முன்னுதிக் தரஸம் சீத வீர்யமும் லருகு ணந்தான்

துன்னிய கடுவி பாகம் துகளுறுச் லேஷ்மம்

குஷ்டம்

உன்னிய ரக்த பித்தம் உறுதின விவற்றைப்

போக்கும்

பன்னிய வேம்பின் பண்பே என்றனர் பகரு

நுாலோர்.

கசப்பு, குளிர்ச்சி வீரியத்தன்மை, உஷ்ணம் கொண்ட வேப்ப இலைகளால் தோல் நோய், ரத்த பித்தம் ஆகியன விலகும்.

தாவரப் பொருள்க ளானுஞ் சங்கமப் பொருடம்

மானு

மேவுறு விடங்கன் சன்னி வேதைவா தத்த

லைநோய்

வாவுறு சென்னி பாரம் வாதகோ பங்களாற்றும்

ஏவறு மின்ப மேயாம இயம்புமப் பருப்பினாளே.

தாவர, விலங்குகளால் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்குவதோடு, தலையில் ஏற்படும் நோய்கள், வாத நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் வேப்ப மரத்திற்கு உண்டு.வேப்ப மரத்தின் காற்று உடலில் பட்டால் அம்மை, தொற்று நோய்கள், மனச்சோர்வு, துாக்கமின்மை நீங்கும். அம்மை போன்ற தொற்று நோய்களில் இருந்து நம்மைக் காக்கவே மாரியம்மன் கோயில்களில் வேப்ப மரம் தலவிருட்சமாக உள்ளன.

எப்படி செல்வது: சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 500 மீ., தென்பாதியில் கோயில் உள்ளது

நேரம் : காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 98436 80057; 98655 56488



-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us