ADDED : ஜன 19, 2024 01:51 PM

கும்பாபிஷேகம்: ஜனவரி 22, 2024
* 'நாகரம்' என்னும் கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டது அயோத்தி ராமர் கோயில். இதை வடிவமைத்தவர் குஜராத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா. வயது 77. இவரது மகன்கள் ஆஷிஷ், நிஹில் சோம்புரா இருவரும் இதன் வடிவமைப்பில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளனர்.
* ராஜஸ்தானில் உள்ள பான்ஷி மலையில் இருந்து 4.7 லட்சம் கனஅடி பிங்க் நிறக் கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
* கோயில் கட்டுமானத்தில் இரும்புக்கு பதிலாக கிரானைட் கற்கள், தாமிரம், வெள்ளை சிமென்ட், மரப்பலகை பயன்படுத்தப்படுகின்றன.
* 'ஸ்ரீராம் 2023' என பொறிக்கப்பட்ட 8.5 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* இந்தியாவில் 2587 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண் பயன்படுத்தப் பட்டுள்ளது.
* கோயில் வளாகத்திற்குள் 70 ஏக்கர் பரப்பில் 70 சதவீதம் பசுமை நிறைந்த பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
* முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், சக்கர நாற்காலியில் செல்லும் வசதி உள்ளது.
* ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பக்தர்களின் வாட்ச், அலைபேசி, செருப்பை பாதுகாப்பு அறைகளில் வைக்கலாம்.
* 1980 முதல் ராம ஜென்ம பூமி இயக்கத்தினர் இக்கோயிலுக்கு நன்கொடை வசூலித்துள்ளனர்.
* ரூ.1800 கோடி மதிப்பில் எல் அண்ட் டி நிறுவனம் இக்கோயிலைக் கட்டுகிறது.
* சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளிலும் சூரியபகவான், பகவதி தாயார், கணபதி,
சிவன் கோயில் அமைகின்றன.
* கோபுரத்தின் உயரம் 161 அடி.
* நீளம் 380 அடி, அகலம் 250 அடி.
* சுவரின் அகலம் 14 அடி.
* 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
* கோயிலை சுற்றி அமைத்துள்ள செவ்வக வடிவச் சுற்றுச்சுவரின் நீளம் 2402 அடி.
1266
ராமர் கோயிலுக்கு ஆக.5, 2020 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1266 நாளில் (3 ஆண்டு, 5 மாதம், 18 நாள்) முதல் கட்ட பணிகள் முடிந்தன.
ஜன. 22, 2024ல் தரைத்தளம் திறக்கப்படுகிறது. 2025ல் பணிகள் முழுமை பெறும்.
எதையும் தாங்கும்
* ராமர் கோயில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும்.
* கருவறையின் உயரம் 20 அடி.
* கோயிலின் அடித்தளம் 45 அடி தடிமனான ரோலர் - கம்பாக்ட் செய்யப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது.
ஐந்து மண்டபம்
நடன மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் உட்பட ஐந்து மண்டபங்கள் உள்ளன.
மூன்று தளம்
ராமர் கோயில் மூன்று தளம் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. கீழ் தளத்தில் 160, முதல் தளத்தில் 132, இரண்டாவது தளத்தில் 74 அறைகள் உள்ளன.
108
திறப்பு விழாவுக்கு வதோதராவில் தயாரான 108 அடி நீள அகர்பத்தி கொண்டு வரப்படுகிறது.
392
கோயிலில் சிற்பங்களால் ஆன 392 துாண்கள் அமைய உள்ளன. தரைத்தளத்தின் 160 துாண்களில் ஆறு மட்டும் நாக்பூர் வெள்ளை மக்ரானா மார்பிள் வகையைச் சேர்ந்தவை. மற்றவை ராஜஸ்தான் பான்சி பஹர்பூரின் இளஞ்சிகப்பு நிற கற்களால் ஆனவை.
1,17,612
ராமர் கோயில் 1,17,612 சதுர அடியில் (2.7 ஏக்கர்) கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் சுற்று வட்டார பகுதி 25,00,244 சதுர அடி (57.4 ஏக்கர்) பரப்பு கொண்டது.
200 மடங்கு அதிகம்
அயோத்தியில் உள்ள ஓட்டல் அறைகள் வரும் 2024 பிப்ரவரி வரை முன் பதிவு செய்யப்பட்டு விட்டன. வாடகை சாதாரண நாளை விட 200 மடங்கு அதிகம்.
சாகேத்
இந்தியாவின் பழங்கால நகரம் அயோத்தி. இதன் மற்றொரு பெயர் சாகேத். இது கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.
சம்தா ஏரி
அயோத்தியில் சரயு நதி பாய்கிறது. இங்குள்ள சம்தா ஏரி 60 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
14 தங்கக் கதவுகள்
* தங்க முலாம் பூசிய 14 கதவுகள் உட்பட 44 கதவுகள் உள்ளன. இதற்கான மரப்பலகைகள் மஹாராஷ்டிராவின் பாலர்ஷா, ஆலப்பள்ளி வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.
* நிலத்தடி ஈரப்பதத்தில் பாதுகாக்க கிரானைட்டை பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.
* கோயிலின் இடதுபக்கம் புராண காலத்தைச் சேர்ந்த 'சீதா கிணறு' உள்ளது. இதுபோல ராம ஜென்ம பூமி வளாகத்தில் ராமாயண காலத்தில் இருந்த 11 புராண, வரலாற்று பகுதிகளை கண்டறிந்து பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர்.
* துாண்கள், சுவர்களில் பல்வேறு கடவுளர், துறவியரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
* கோயில் வளாகத்தில் ஏ.டி.எம்., வசதி, வங்கிகள், அவசரகால மருத்துவ வசதி, தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்சார நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
* கோயிலின் மற்ற பகுதிகள் 'பிங்க்' நிற கற்களில் கட்டப்பட்டாலும், நுழைவாயில், கருவறை முழுவதும் வெள்ளை நிற மார்பிளால் ஆனது.
* 'இன்டர்லாக்கிங் சிஸ்டம்', காப்பர் வயர் மூலம் கற்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒட்டுவதற்கு வெள்ளை சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது.
* 4000 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* இந்தியாவில் உள்ள 1500 கோயில்களை ஆய்வு செய்து சிறந்த கட்டுமான மாடல் தேர்வு செய்யப்பட்டது.
* கோபுரத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு துாணிலும் 16 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் மட்டும் 4000 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* டில்லி, சென்னை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., சூரத் என்.ஐ.டி., ரூர்க்கியின் மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்தின் தேசிய புவி ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவின் தேசிய ராக் மெக்கானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.
மின்சாரக் கார் வசதி
* சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் வி.வி.ஐ.பி., விருந்தினர்களை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் செல்ல 12 மின்சாரக் கார் வசதி செய்யப்பட்டுள்ளன.
* கும்பாபிஷேகம் முடிந்த பின் அயோத்திக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கிய பின்னர் மின்சாரக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 10 கி.மீ.,க்கு
ரூ.250, 20 கி.மீ.,க்கு ரூ.400, 12 மணி நேரத்துக்கு ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அயோத்தி ரயில், விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீராமர் கோயிலுக்கும், அயோத்தியின் பிற சுற்றுலா இடங்களுக்கும் இக்கார்களை பயன்படுத்தலாம்.
* அலைபேசி, செயலி வாயிலாக இந்த மின்சாரக் கார்களை புக்கிங் செய்யலாம்.
* அயோத்தியில் 100 மின்சார பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
சொர்க்கமே என்றாலும் அயோத்தி போல வருமா...
ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நவீன ஆன்மிக தலமாக மாறியுள்ளது. ராமர் கோயிலை தரிசிக்க தினமும் 3 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கின்றனர். அயோத்தியை விரிவுபடுத்த ரூ.85 ஆயிரம் கோடியில் 'மாஸ்டர் பிளான்' உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம், வாட்டர் மெட்ரோ உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2031ல் பணிகள் நிறைவடையும்.
வால்மீகிக்கு கவுரவம்
அயோத்தியில் 20 மாதங்களில் புதிதாக மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 821 ஏக்கர். முதல் 'டெர்மினல்' ரூ.1450 கோடி செலவில் 65,000 சதுர அடி பரப்பில் உள்ளது. 2200 மீ., ஓடுதளம் கொண்டது. ஏ-321 வகை விமானம் தரையிறங்கலாம். இரண்டாவது 'டெர்மினல்' 5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. அப்போது பெரிய 'போயிங்' ரக விமானத்தை தரையிறக்கலாம். ராமர் கோயிலில் இருந்து 12 கி.மீ., தொலைவில் இது அமைந்துள்ளது. ராமாயண காவியத்தின் முக்கிய அம்சங்கள் விமான நிலையத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
ஒளிரும் ரயில் நிலையம்
'அயோத்தி கோயில் சந்திப்பு' ரயில் நிலையம் ரூ.240 கோடி செலவில் 11,414 சதுர மீட்டர் பரப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் இது அமைந்துள்ளது. முகப்பு பகுதி அயோத்தி ராமர் கோயில் பாணியில் அமைந்துள்ளது. எஸ்கலேட்டர்கள், டிஜிட்டல் வழிகாட்டும் பலகைகளுடன் விமான நிலையத்தை போன்று பிரமாண்டமாக உள்ளது.
படகுப் போக்குவரத்து
அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயு நதியில் சூரிய சக்தியில் இயங்கும் படகு, படகு இல்லம், வாட்டர் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அழகிய மெழுகுச்சிலை
10 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.7 கோடி செலவில் ராமாயண மெழுகுச்சிலை அருங்காட்சியகம் அமைய உள்ளது. சீதை சுயம்வரம், ராமர் வனவாசம், அனுமன் உள்ளிட்ட 80 கதாபாத்திரங்களின் மெழுகுச் சிலைகள் நிறுவப்பட உள்ளன.
அயோத்தி 2.0
அயோத்தியில் ரூ.2200 கோடியில் துணை நகரம் அமைய உள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றி உள்ள ராமர் பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை மேம்படுத்தப்படும். 25,000 பக்தர்கள் தங்கும் அளவுக்கு கூடார நகரம் அமைக்கப்படும். நட்சத்திர ஓட்டல், வணிக வளாகங்கள் திறக்கப்பட இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.