sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தலவிருட்சங்கள் - 34

/

தலவிருட்சங்கள் - 34

தலவிருட்சங்கள் - 34

தலவிருட்சங்கள் - 34


ADDED : ஜன 19, 2024 01:55 PM

Google News

ADDED : ஜன 19, 2024 01:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழநி முருகன் கோயில் - அத்தி

அண்ணாசாமி தம்பிரான் என்னும் முருக பக்தர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இந்த சமயத்தில் பழநிக்கு பாத யாத்திரை செல்லும் சாது ஒருவர், 'வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. திருப்போரூர் கந்தசாமியை வணங்கினால் குணம் பெறுவாய்' என வழிகாட்டினார். அண்ணாசாமியும் கார்த்திகை தோறும் திருப்போரூர் கோயிலுக்குச் சென்றார். வயிற்றுவலி மறைந்தது.

தனக்கு வழிகாட்டிய சாதுவின் நினைவில் மூழ்கி, மெய் மறந்த நிலையில் தன் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதைக் கேள்விப்பட்ட வேறொரு சாது, முருகனின் படம் ஒன்றை அண்ணாசாமிக்கு வழங்கினார். அதை தலையில் சுமந்தவாறே ஊர் திரும்பினார். தினமும் அதை பூஜித்தார்.

நாளடைவில் அண்ணாசாமியின் தெய்வீக முகத்தை தரிசிக்க பக்தர்கள் வரத் தொடங்கினர். இதற்கு முருகப்பெருமானே காரணம் எனக் கருதிய அண்ணாசாமி பாதயாத்திரையாக பழநிக்குச் சென்றார். ஊர் திரும்பும் வழியில் சாலையோரக் கடையில் பெரிய முருகன் படம் ஒன்றைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.

அன்றிரவு அக்கடைக்காரரின் கனவில் தோன்றிய முருகன் அப்படத்தை அண்ணாசாமியிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். கடைக்காரரும் தேடி வந்து ஒப்படைத்தார். முருகபெருமானே தன்னை நாடி வந்ததாக மகிழ்ந்த அண்ணாசாமி தினமும் பூஜித்து, பக்தர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லத் தொடங்கினார்.

அண்ணாசாமியின் விருப்பப்படி ரத்தினசாமி தம்பிரான் என்பவர் முருகப்பெருமான் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபட்டார்.

இருபது ஆண்டுகள் கோயிலை சிறப்புற நிர்வகித்த பின்னர் தன் சீடரான பாக்கியலிங்க தம்பிரானிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவரும் நிர்வாகத்தை செவ்வனே நடத்தினார்.

தற்போதைய வடபழநி கோயிலின் கருவறை, பிரகாரங்களை உருவாக்கி 50 ஆண்டுகள் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தினார்.

தாமரை பீடத்தின் மீது முருகன் காட்சியளிப்பதும், காலில் காலணி அணிந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். செவ்வாய் பகவான் தனி சன்னதியில் இருக்கிறார். கோயிலின் கூரையில் முருகனின் திருவிளையாடல்கள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் முடி காணிக்கை, வேல்காணிக்கை செலுத்துகின்றனர். பால், சந்தனம், பஞ்சாமிர்தம்,

திருநீறு அபிஷேகம் செய்கின்றனர்.

பைகஸ் கரிகா (Ficus carica) என்னும் தாவரவியல் பெயரும், மோரேசியே குடும்பத்தை சார்ந்ததுமான அத்தி மரம் இக்கோயிலில் தலவிருட்சமாக உள்ளது. முருகன் சன்னதிக்கு எதிர்புறத்தில் இந்த மரம் உள்ளது. அத்திப்பூவைக் காண்பது அரிது. 'அத்தி பூத்தாற் போல' என்று பழமொழியும் உண்டு.

சித்தர் போகர் பாடிய பாடல்

அத்தியென்ற பேர்தனையே அறியக்கேளு

அழகான உதும்பர் கூரவிருட்சம்

இத்தியென்ற எமதுத்தாச தாபலமுமாகு

மேற்றமா மதிசயமாம் புட்பியாகும்

குத்தியென்ற அக்கியாம் கோடுருகவமாங்

கூறறிய புட்பபலா புத்தோவாகுஞ்

சித்தியென்ற கூர்விருட்ச

பஞ்சகத்திலொன்றாஞ்

செப்பியதோ ரத்தியிட செயலுமாமே.

உதும்பர், கூரவிருட்சம், எமதுத்தம், சதாபலம், மாமதிசயம், மாபுட்பி, அக்கி, கோடுருகம், புட்பபலா, புத்தோவாகும், கூர்விருட்சம், பஞ்சகத்தி அதம், அதவு, உதும்பரம், கோளி, சுக்ரபஷ்டம், காட்டுத்தீமரம் என பலபெயர்கள் அத்திக்கு உண்டு என்கிறார் போகர்.

சித்தர் அகத்தியர் பாடிய பாடல்

மூலக்கி ராணியறும் மூலவிரத் தந்தீரும்

சாலக் கடுப்புந் தரிக்குமோ! - மாலரவத்

துத்திப் படவல்குற் றேகாய்! துவர்ப்பையுறும்

அத்திச் சிறுபிஞ் சருத்து

அத்திப் பிஞ்சை சமைத்து ஊறுகாய், வற்றல், குழம்பு செய்வது வழக்கம். அத்தி பிஞ்சை தொடர்ந்து சாப்பிட வயிற்றுபோக்கு நிற்கும். வயிற்று புண்கள் ஆறும்.

அத்திக்காய் தன்னை அருந்தினால் ஆரணங்கே!

எத்திக்கும் மேகம் இருப்பதுண்டோ? -சத்திக்கும்

வாதம் அகலும் மலங்கழியும் சூலையொடு

மீதனலும் புண்ணும்போம் விள்.

அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கும். மலம் இளகும்.

காரமோ டுட்டினமாங் காதுகின்ற பித்தத்தை

நீரிழிவைச் சூலைகளை நீடிரத்தஞ் - வேருங்

கிரிச்சரத்தைப் போக்குங் கிளர் கோளி

யென்னும்

மரச்சருமப் பாலதனை வாங்கு.

அத்தி பாலை வெண்ணெய் அல்லது சர்க்கரையுடன் கலந்து சாப்பிட பெண்களுக்கு ரத்தபோக்கு நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்த்மொடு

நாறுவிர ணங்களெலாம் நாடாவாம் கூறுங்கால்

அத்திகரு மேகம்போம் ஆயிழையே!

எஞ்ஞான்றும்

அத்திப்பாற் பட்டைக் கறி.

அத்திப்பட்டையைக் கஷாயம் செய்து சாப்பிட ரத்தப்போக்கு மறையும்.

புண்களில் துர்நாற்றம் விலகும். அத்திப்பட்டை கஷாயத்தால் புண்களை

கழுவ விரைவில் ஆறும்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

ஆனைக் கன்றி லொருபிடியு

அசுரன் விரோதி யிளம்பிஞ்சும்

கானக் குதிரைப் புறத்தோலுங் காலிற்

பொடியை மாற்றினதும்

தானைத் தாய்கொல் சலத்துடனே தகவா

எட்டொன் றாக்கொள்நீ

மானைப் பொருவும் விழியாளே வடுகுந் தமிழும்

குணமாமே.

அத்திப்பிஞ்சு, வேலம்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை ஆகியவற்றை சமஅளவு எடுத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து வாழைப்பூ சாறு கலந்து சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு மறையும். ரத்தம் சீதம் செல்லுதல் நிற்கும்.

தினமுமலக் கட்டொழிக்குந் தேகவெப்ப நீக்கும்

மனமுறுபித் தக்கோபமாற்று - மினுமயிலுந்

துன்னு விழியையடைச் சொன்னமே

வையகத்தோர்

பன்னுவிதை யத்திப் பழம்.

அத்திப் பழத்தை தண்ணீர் விட்டு பிசைந்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து பாகு செய்து சாப்பிட ரத்தசோகை, நாவறட்சி, வீக்கம், மலச்சிக்கல், உடல் சூடு நீங்கும். அத்திப்பழங்களை குறுக்குவாட்டில் அரிந்து துண்டாக்கி தேனில் நனைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இளைத்த உடம்பு பலம் பெறும். அத்திக் காய்களை பொரியல், மசியல், கூட்டு செய்து வாரம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றுப்புண்

குணமாகும்.

எப்படி செல்வது: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 3 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:30 - 9:00 மணி

தொடர்புக்கு: 80723 98360, 044 - 2483 6903



-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567






      Dinamalar
      Follow us