ADDED : பிப் 09, 2024 11:08 AM

கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்தால் பாவம் தீரும். ஆனால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காது. இவர்களுக்காக திண்டுக்கல் மாவட்டம் கண்ணாபட்டியில் விஸ்வநாதர் குடிகொண்டிருக்கிறார். கோயில் எதிரிலுள்ள வைகையில் நீராடி தரிசித்தால் காசியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கில் இருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பாய்கிறது. இதை 'உத்தரவாகினி' என்பர். காசியில் கங்கையும் இவ்வாறே பாய்கிறது.
முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அடியாருக்கு அன்னமிட்ட பின்னரே சாப்பிடுவார். ஒருநாள் யாரும் வராததால் பணியாளரிடம் ஊருக்குள் அடியார் இருக்கிறாரா என பார்த்து வரச் சொன்னார் அவரும் ஆற்றில் ஒருவர் நீராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மகிழ்ச்சியடைந்த பக்தர் நேரில் சென்று அழைத்தார். அதற்கு அவரோ, 'சிவபெருமானை தரிசித்த பின்னரே நான் சாப்பிடுவது வழக்கம். முதலில் என்னை கோயிலுக்கு அழைத்துச் செல்லுங்கள்' என்றார். 'எங்கள் ஊரில் சிவன் கோயில் இல்லையே' என்றார் பக்தர். 'கோயில் இல்லாத ஊரில் உணவு ஏற்க மாட்டேன்' என கோபத்துடன் அடியார் புறப்பட்டார். வருந்திய பக்தர் காசிக்கு யாத்திரை சென்று சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்தார். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 'விஸ்வநாதர்' எனப் பெயர் சூட்டினார். பிற்காலத்தில் விசாலாட்சி அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.
திருமணத்தடை உள்ளவர்கள் அம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துகின்றனர். பின் அம்மனுக்கு பூஜித்த மாலையை பிரசாதமாகத் தருவர். அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நல்ல மணவாழ்க்கை அமையும்.
வில்வ மரத்தடியில் அஷ்ட நாகங்களுடன் உள்ள விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றினால் ராகு, கேது தோஷம் தீரும். ஒருசமயம் வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது நந்தியும், வலம்புரி சங்கும் கரை ஒதுங்கியது. இந்த நந்தியை சுவாமி சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதோஷம், கார்த்திகை சோமவாரம், சிவராத்திரியன்று வலம்புரி சங்கில் தீர்த்தம் எடுத்து விஸ்வநாதருக்கு பூஜை செய்கின்றனர். சந்திரன், விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளது.
எப்படி செல்வது: திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு செல்லும் வழியில் 43 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம்.
நேரம்: காலை 6:30 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97865 61935, 04543 - 227 572
அருகிலுள்ள தலம்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் 41 கி.மீ., (உடல்நலம் சிறக்க...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94444 02440, 0451 - 242 7267