/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தடைகளை போக்குவார் திருநெடுங்களநாதர்
/
தடைகளை போக்குவார் திருநெடுங்களநாதர்
ADDED : பிப் 23, 2024 11:19 AM

முன்னேற வேண்டும் என முயற்சியில் ஈடுபடும் போது தடை குறுக்கிட்டால் மனம் அமைதி இழக்கும். இந்நிலையில் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம் திருச்சியை அடுத்துள்ள திருநெடுங்களநாதர் கோயில்.
திருநெடுங்களம் என்பதற்கு 'சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என பொருள். அன்னை பார்வதி இங்கு சிவனை நோக்கி தவமிருந்தாள். தவத்தை மெச்சிய சுவாமி அவள் அறியாதபடி வேற்று உருவில் வந்து திருமணம் புரிந்தார்.
சிவன் தன் உடம்பில் பார்வதிக்கு இடப்பாகத்தை கொடுத்தது நாமறிந்த விஷயம். இங்கு கருவறையில் சுவாமி லிங்க வடிவில் இருந்தாலும் அரூபமாக பார்வதியும் உடனிருக்கிறாள். இதனால் கருவறையின் மேல் இரு விமானங்கள் உள்ளன. இந்த விமானம் காசி விஸ்வநாதர் கோயில் விமான அமைப்பை ஒத்துள்ளது. எனவே இக்கோயிலை 'தட்சிண கைலாசம்' என்கின்றனர்.
சுவாமி திருநெடுங்களநாதருக்கு மாதுளை அபிஷேகம் செய்தால் முயற்சி தடையின்றி நிறைவேறும். மன்னர் வந்திய சோழருக்கு பேரழகுடன் சுவாமி காட்சியளித்ததால் 'நித்திய சுந்தரேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றினால் முகப்பொலிவு அதிகரிக்கும். பிறரை வசீகரிக்கும் ஆற்றல் ஏற்படும்.
கோயிலின் நந்தி மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சியளிக்கிறாள் ஒப்பிலாநாயகி அம்மன். 'மங்களாம்பிகை' என்றும் பெயருண்டு. 'இடர்களையும் திருப்பதிகம்' என்னும் பாடலை இங்கு திருஞானசம்பந்தர் நமக்கு அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து பாடினால் திருமணம் தாமதம், குழந்தையின்மை, முயற்சியில் தடை என எந்த பிரச்னையாக இருந்தாலும் சரியாகி விடும்.
பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியர், அய்யனார், ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் சன்னதிகள் உள்ளன. அய்யனாருக்கு பங்குனி உத்திரத்தன்று நெய்தீபம் ஏற்றினால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். யோக தட்சிணாமூர்த்திக்கு தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்ற கல்வி வளர்ச்சி ஏற்படும்.
எப்படி செல்வது: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 21 கி.மீ., துாரத்தில் துவாக்குடி. அங்கிருந்து திருச்சி - தஞ்சாவூர் சாலையில் 3 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம்,
மகா சிவராத்திரி. நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 95788 94382
அருகிலுள்ள தலம்: திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் 13 கி.மீ., (சுறுசுறுப்புடன் இயங்க...)
நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98429 57568, 99650 45666