/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் பெற...
/
நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் பெற...
ADDED : பிப் 23, 2024 11:20 AM

பெங்களூரு அருகிலுள்ள ஹலசூரு ஏரிக்கரையில் ஒடுக்கத்துார் சுவாமிகள் கோயில் உள்ளது. இங்கு தண்டாயுதபாணி என்னும் பெயரில் முருகப்பெருமான் மூலவராக அருள்புரிகிறார். இங்கு வருவோர் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று மகிழ்வர்.
உலோகைய நாயுடு, பாலாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சேைஷயா. இல்லற வாழ்வில் நாட்டமில்லாத இவர் இளம்வயதிலேயே சிவத்தலங்களை தரிசித்தபடி தெற்கு நோக்கி யாத்திரை வந்தார். ஒடுக்கத்துார் காட்டுப்பகுதியில் தவத்தில் ஈடுபட்ட இவர், அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்றார். நோயாளிகளைக் குணப்படுத்தி அற்புதங்கள் நிகழ்த்தினார். பக்தர்கள் பலர் குருநாதராக கொண்டாடத் தொடங்கினர். 1915ல் தை சுவாதியன்று சீடர்களின் முன்னிலையில் சமாதியில் ஆழ்ந்தார். அந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. வேலுார் வேலுமுதலியாரின் மூத்த மகன் சுந்தரராஜ முதலியாரின் மனைவி நாகரத்தினம்மாளின் ஞாபகார்த்தமாக இத்திருப்பணி செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் தை சுவாதியன்று குருபூஜை விமரிசையாக நடக்கிறது. முன் மண்டபத்தில் பாலமுருகன் சன்னதியும், சீதை, லட்சுமணர், அனுமன், ராமரின் சுதை சிற்பங்களும் உள்ளன.
ஒடுக்கத்துார் சுவாமிகள் கோயிலை ஒட்டி தண்டாயுதபாணி என்னும் பெயரில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கியபடி தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். இக்கோயில் 1969ல் கிருபானந்த வாரியாரால் பூமிபூஜை செய்யப்பட்டு திருப்பணி நிறைவேற்றப்பட்டது. இங்கு தண்டாயுதபாணி நடுவில் இருக்க, இடதுபுறம் சித்திவிநாயகர், வலதுபுறம் காமாட்சியம்மன் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் ஐயப்பன், திருவள்ளுவர் உள்ளனர். சந்திரசேகரர், மனோன்மணி, விநாயகர், வஜ்ர சண்டிகேஸ்வரர், வீரபாகுத்தேவர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அருணகிரிநாதர், நால்வர், தண்டாயுதபாணி, நடராஜர், சிவகாமி, பாம்பன்சுவாமிகளுக்கு உற்ஸவர் சிலைகள் உள்ளன. கன்னிமூலை கணபதி, பாலசாஸ்தா, அனுமன் சன்னதிகள் வெளிப்பிரகாரத்தில் உள்ளன. முகப்பில் சுவாமிகள் தவம் புரிந்த அரசமரத்தடியில் அஷ்டநாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆடிக்கார்த்திகை, தைப்பூச நாட்களில் காவடி வழிபாடு நடக்கிறது. காமாட்சியம்மனுக்கு நவராத்திரியில் சண்டிஹோமம், விஜயதசமியன்று நடக்கும் 'தசமி' நிகழ்ச்சியில் பள்ளிக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இங்குள்ள ஜோதி மன்றத்தில் பழம்பெரும் கலைஞர்களான டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்பு லட்சுமி உள்ளிட்ட பலர் இசைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
எப்படி செல்வது: ஓசூரு - மடிவாலா சாலையில் 18 கி.மீ., அங்கிருந்து ஹலசூரு 13 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடிக்கார்த்திகை, கந்தசஷ்டி, தை சுவாதியன்று ருத்ர ஹோமம், ஒடுக்கத்துார் சுவாமிகள் குருபூஜை.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 89714 12566
அருகிலுள்ள தலம்: ஹலசூரு சோமேஸ்வரர் கோயில் 2 கி.மீ., (மனநலம், உடல்நலம் பெற...)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:30 - 9:30 மணி
தொடர்புக்கு: 94480 24793