sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சனாதன தர்மம் - 20

/

சனாதன தர்மம் - 20

சனாதன தர்மம் - 20

சனாதன தர்மம் - 20


ADDED : பிப் 23, 2024 11:48 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேசாமல் இருக்க முடியுமா...

மனிதனின் ஐம்புலன்களில் வாய் மட்டும் தான் இரண்டு பணிகளைச் செய்கிறது. உண்பது, பேசுவது உணவை உண்பதில் மட்டும் நம் முன்னோர் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. பேசுவதிலும் ஒழுங்கு வேண்டும் எனச் சொல்லி வைத்தனர். யாராக இருந்தாலும் நாவை அடக்குவதே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான், 'சும்மா இரு' என உபதேசித்தார். பகவான் ரமண மகரிஷி மவுனத்தால் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஞானம் வழங்கினார். காஞ்சி மஹாபெரியவர் மாதக்கணக்கில் காஷ்ட மவுனம் இருந்தார்கள்.

காஷ்ட மவுனம் என்றால் கட்டையைப் போல அசைவற்று இருப்பது. உடல் சைகைகளால் கூடத் தேவைகளை வெளிப்படுத்துவது கிடையாது. நம் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி மவுனத்தாலேயே சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இதைச் சொல்லாமல் சொல்வது என்பார் பரஞ்சேதி முனிவர். எனவே பேசாமல் இருப்பது என்பதும் வாழ்வின் தேவையாக இருக்கிறது.

ஆனால் கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு திரியும் இந்தக் காலத்தில் பேசாமல் இருக்க முடியுமா என்ன? சாலையில் யாராவது தனியாகப் பேசிக் கொண்டு போனால் அந்தக் காலத்தில் பைத்தியம் என்பார்கள். ஆனால் இன்றோ அவரவர் காதில் மாட்டியபடி தனியாக பேசிக் கொண்டு அலைகின்றனர். தேவையிருக்கோ, இல்லையோ பேசிக் கொண்டே இருக்கிறோம்.

சிலரின் பெயர்களை அலைபேசியில் பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஆத்தாடி... பேச ஆரம்பித்தால் விட மாட்டானே... என தலைதெறிக்க ஓட வேண்டியுள்ளது. தேவையானதை மட்டும் பேசுவது, சுருக்கமாகப் பேசுவது என்பதெல்லாம் சிறந்த கலை.

வாலியால் பயந்து கிடந்த சுக்ரீவனிடம் ஸ்ரீராமரை அறிமுகம் செய்யும் போது அனுமன், 'இவர் வாலியின் காலன்' எனக் கூறினார். அதிலேயே எல்லாம் அடங்கி விட்டது. 'சீதையைக் கண்டேன்' எனச் சுருக்கமாக வெற்றிச் செய்தியை பதிவு செய்தார். ஸ்ரீராமன் போரில் வென்றவுடன் சீதையிடம் 'ஸ்ரீராம ஜெயம்' எனச் சொல்லி முத்திரை பதித்தார். சொல்லின் செல்வன் எனப் பாராட்டப் பெற்ற அவரே அளந்து தான் பேசினார். இன்று நாமோ அளவின்றி, வளவள எனப் பேசிக் கொண்டே இருக்கிறோம். எனவே தான் விரதங்களில், 'மவுன விரதம்' என்ற ஒன்றையும் நம் முன்னோர் வைத்தனர். 'பேசாதிருந்தும் பழகுக' என்பார் ஞானானந்தகிரி சுவாமிகள்.

பால்பிரண்டன் என்னும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் ஹிந்து சமயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு வரை நீண்ட பயணம் மேற்கொண்டார். நிறைவாக, விழுப்புரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசனம் செய்த போது, திருவண்ணாமலையில் உள்ள ரமணரை தரிசிக்கும்படி அவர் வழிகாட்டினார்.

பால்பிரண்டனும் திருவண்ணாமலையிலுள்ள ரமணரைத் தரிசனம் செய்தார். வாய் திறந்து ஏதும் ரமணர் பேசவில்லை. பார்வையாலேயே, மவுனத்தினாலேயே உபதேசம் செய்தார். பால் பிரண்டன் மனதில் இருந்த எல்லா சந்தேகங்களும் தீர்ந்தன. பிறகு அவரும் ஏராளமான மேலை நாட்டாரும் பால்பிரண்டனால் வழிகாட்டப் பெற்று திருவண்ணாமலை நோக்கி வந்து அருள் பெற்றனர். ரமணரின் மவுனம் அத்தகைய சக்தி வாய்ந்தது. இது போன்ற எண்ணற்ற மகான்கள் மவுனத்தினாலேயே உலகிற்கு வழிகாட்டியுள்ளனர். குருவருளால் நாமும் மவுனம் பழகினால் நலமாகும்.

அதற்கு முதலில் நம்மிடம் சில கட்டுப்பாடுகள் வேண்டும். புலன்கள் விரும்பியபடி பயணம் செய்யத் தொடங்கினால் அது விலங்கு வாழ்க்கையாக அமைந்து விடும். மூன்று நண்பர்கள் மவுன விரதம் இருக்க முடிவு செய்தனர். முதல்நாள் இரவே மூவரும் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்தனர். தேவையான பொருட்களை வாங்கி வைத்தனர். வெளியில் இருந்து ஆட்கள் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க 'காலிங் பெல்' சுவிட்சை ஆப் செய்தும் வைத்தனர். மறுநாள் காலை முதல் கவனத்துடன் செயல்படத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் பார்த்தாலும் கூடப் பார்க்காதது போலச் சென்றனர். காலை உணவைத் தவிர்க்கலாமே என ஒரு நண்பன் எழுதி வைத்தான். மற்ற இருவரும் அதை 'டிக்' செய்தனர். அமைதியாக நேரம் நகர்ந்தது.

மதியம் ஒரு மணியைத் தொட்ட போது பசிக்க தொடங்கியது. ஒருவன் அலைபேசி மூலம் மூன்று சாப்பாடு ஆர்டர் செய்தான். உணவு வந்தது. காலிங் பெல் அணைத்து இருப்பதால் வாசல் கதவைத் திறந்தே வைத்தனர். ஒருவன் சொன்னான்,''தம்பி... சாப்பாட்டை அங்கேயே வைத்து விட்டுப் போ. நாங்கள் மூவரும் மவுன விரதம் இருக்கிறோம்'' என்றான். இரண்டாவது நண்பனோ, ''என்னடா மவுன விரதம் முடிஞ்சு போச்சா... பேசிட்டியே'' என்றான். மூன்றாம் நண்பனோ, ''நீங்க ரெண்டு பேரும் பேசிட்டீங்க! நான் மட்டும் தான் மவுன விரதம்'' என்றான். ஆக மூவரும் பேசி விட்டனர். காரணம் காலம் காலமாக பேசிக் கொண்டே இருக்கிறோம்.

தற்போது பெரிய நகரங்களில் 'விபாசனா' என்னும் பயிற்சி நடக்கிறது. பத்து நாட்கள் மவுனமாக, உணவுக் கட்டுப்பாடுடன் இருப்பது என்பது அதற்கான நெறிமுறை. மனவளக் கலை மன்றங்களிலும் மவுனம் பயிற்றுவிக்கப்படுகிறது. பேசாமல் இருப்பதன் மூலமாக நம் மன ஓட்டத்தைக் குறைத்து நம்மை உணரும் பெரும் பயிற்சிகள் உருவாக்கப்படுகின்றன.

'பேசாமல் இருப்பதால் நமது ஜீவகாந்த சக்தி சேமிக்கப்படுகிறது' என்பார் வேதாத்ரி மகரிஷி. புலன்களின் அடக்கத்தின் தொடக்கம் மவுனம். மாதா அமிர்தானந்தமயி தேவி ஒரு கதை சொல்வார்கள். ஒரு பரமஞானி விதிவசத்தால் ஒரு அரண்மனையில் ராஜகுமாரனாகப் பிறந்தார். அவரின் ஞானத்தால் முற்பிறவி நினைவு இருந்தது. அதனால் பிறந்தது முதல் மவுனமாக இருக்கத் தொடங்கினார். குழந்தை பேசவில்லையே என பெற்றோர் பார்க்காத வைத்தியமில்லை. போகாத கோயில் இல்லை. ராஜகுமாரன் ஆயிற்றே... ஒரு எல்லையில், 'யார் என் மகனைப் பேச வைக்கிறார்களோ அவர்களுக்கு என் நாட்டில் பாதியைத் தருகிறேன்' என அறிவித்தார் மன்னர்.

குழந்தையும் வளர்ந்து இளவரசர் ஆனார். யாராலும் அவரைப் பேச வைக்க இயலவில்லை. ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உலா வந்த போது ஒரு வேடன் சத்தமிட்டுக் கொண்டிருந்த ஒரு புறாவினைக் குறி வைத்து வீழ்த்தினான். புறாவானது இளவரசர் காலடியில் வீழ்ந்தது. உடனே பரமஞானியான இளவரசன் அதை எடுத்து காயங்களைச் சரி செய்தார். அதனை உள்ளங்கையில் தாங்கி அருட்கண்களால் நோக்கி, 'நீ ஏன் பேசினாய்' எனக் கேட்டார். சத்தமிட்டதால் தானே இந்தத் துன்பம் என்பதைக் கூறி மீண்டும் வானில் பறக்க விட்டார்.

இதைக் கேட்ட வேடன் இளவரசர் பேசி விட்டார்... பேசி விட்டார் என அலறிக் கொண்டு மன்னரிடம் சென்று பாதி நாட்டைப் பெற்றுக் கொள்ள தயாரானான். ஆனால் இளவரசரோ மீண்டும் மவுனமாக அரண்மனைக்குள் நுழைந்தார். மன்னர் கோபத்துடன் வேடனிடம், ''எங்களை புண்படுத்தும் வகையில் பொய் சொன்ன உனக்கு மரண தண்டனை' என்றார். வேடன் கெஞ்சினான். தான் சொல்வது உண்மை என்றாலும் என்ன செய்வது? கதறிப் பயனில்லை. காரணம் இளவரசர் மற்றவர் முன்பு பேசவில்லையே...

கடைசி ஆசையாக ஒருமுறை இளவரசரைப் பார்க்க வேண்டும் என்றான் வேடன். தனது அறையில் இருந்து வெளியே வந்த இளவரசரின் காலைப் பிடித்துக் கொண்டு கதறினான். வேடனின் தோள்களைப் பற்றி கண்களால் அன்பொழுக நோக்கி, 'நீ ஏன் பேசினாய்' எனக் கேட்டார். வேடனுக்கு விடுதலை கிடைத்தது. ஞானத்தால் தான் இளவரசர் பேசவில்லை என்பதை நாடே அறிந்து கொண்டது.

பேசாத சொற்களுக்கு நீ எஜமானன் என்பது பழமொழி. மவுனம் என்பது சுலபமல்ல. ஆயினும் உணவுக் கட்டுப்பாடு போல் பேச்சிலும் கட்டுப்பாடு வேண்டும் என்கிறது சனாதன தர்மம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870






      Dinamalar
      Follow us