
நல்லதொரு கூட்டணி
எந்த நல்ல செயல் செய்தாலும் முதலில் சத்சங்கத்தில் இணைந்திருப்பது அவசியம் என்கிறது வேதம். சத்சங்கம் என்பது நல்லவர்களின் நட்பு. நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல நிலையை அடையலாம் என்பதே வேதத்தின் அடிப்படை.
விஸ்வாமித்திரர் ஒருமுறை யாகம் செய்தார். அதன் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் தானம் வழங்கினார். இதைக் கேள்விப்பட்டு வந்த வசிஷ்டரை வரவேற்று வேண்டிய பொருட்களை தானமாக வழங்கினார். அவரும் வாழ்த்தி விடைபெற்றார்.
சிறிது நாட்கள் கழித்து வசிஷ்டர் ஒரு யாகம் செய்தார். அதன் முடிவில் ஏராளமான தானங்களைச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட விஸ்வாமித்திரர் தானம் பெறலாம் என யாகசாலை நோக்கி வந்தார். அவர் வருவதற்குள் தானப் பொருட்கள் யாவும் தீர்ந்து விட்டன. இதையறிந்து விஸ்வாமித்திரர் கோபப்பட்ட போது, ''விஸ்வாமித்ரரே! கோபம் கொள்ளாதீர். நான் என் சத்சங்கத்தின் பலனில் கால் பங்கை உமக்கு தானம் அளிக்கிறேன்'' என்றார்.
'அதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது' என ஆவேசப்பட்டார் விஸ்வாமித்திரர். ''நான் அழைத்ததாகச் சொல்லி உலகிற்கு ஒளி தரும் சூரியனையும், உலகைத் தாங்கி நிற்கிற ஆதிசேஷனையும் அழைத்து வாருங்கள்'' என்றார் வசிஷ்டர். இருவரையும் அழைக்கச் சென்ற போது, ' நாள்தோறும் நான் உலகைச் சுற்றி வந்து பிரகாசம் தர வேண்டுமே... எப்படி வருவது' எனக் கேட்டார் சூரியன். 'உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் என்னால் வர இயலாது' என ஆதிசேஷனும் வர மறுத்தார். வசிஷ்டரிடம் திரும்பிய விஸ்வாமித்திரர், வர இயலாத சூழலில் இருவரும் இருப்பதாகத் தெரிவித்தார். 'உங்களுக்குத் தந்த சத்சங்க பலனில் ஆளுக்கு கால் பங்கு அளிப்பதாகக் கூறி அழைத்து வாருங்கள்' என்றார் வசிஷ்டர்.
விஸ்வாமித்திரரும் அவர்களிடம் தெரிவிக்க இருவரும் உடனே வந்தனர். 'இப்போது அந்த பணிகள் என்னாச்சு' என விஸ்வாமித்திரர் கேட்க, 'தாங்கள் அளித்த கால்பங்கு பலனில் அப்பணிகள் நடைபெறும்' என பதிலளித்தனர். வியந்து போன விஸ்வாமித்திரர், ' எனக்கு கால்பங்கு சத்சங்க பலனே போதும்' எனப் பெற்றுக் கொண்டு ஆஸ்ரமத்திற்கு வந்த போது இரு விஷ்ணு துாதர்கள் அவரது வருகைக்காக காத்திருந்தனர். அவர்களை வரவேற்ற விஸ்வாமித்திரர் அவர்கள் வந்த நோக்கத்தைக் கேட்டார். 'மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார். அப்போது நடக்கவிருக்கும் சீதாகல்யாண வைபவத்தைத் தாங்களே முன்நின்ற நடத்த வேண்டும்' எனத் தெரிவித்தனர். விஸ்வாமித்திரரும் சத்சங்க பலனைக் கண்டு வியந்தார்.
ஆம். நாம் யாருடன் சேர்கிறோமோ அதன் வடிவாகவே ஆகிறோம். அன்புடைய இரு நெஞ்சங்கள் சேர்வதை செம்மண்ணிலே மழைநீர் கலப்பதற்கு ஒப்புமையாகக் குறிப்பிடுகிறார் புலவரான செம்புலப் பெயல் நீரார். நட்பு என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து நட்பு ஆராய்தல், தீநட்பு, கூடாநட்பு என பலவகையாக பிரிக்கிறார் திருவள்ளுவர். நட்பு கொள்வதில் எவ்வளவு கவனம் செலுத்தினார் என்பதற்கு இத்தனை விஷயம் குறளில் இருக்கிறது. 'நீ உன் நண்பனைப் பற்றிச் சொல். பிறகு நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்கிறது ஆங்கிலப் பழமொழி.
'சேரிடம் அறிந்து சேர்' என்கிறாள் மூதாட்டி அவ்வையார். மகாபாரதத்தில் கர்ணன் வரலாற்றை அறியாதவர் யாரும் இருக்க முடியுமா என்ன? துரியோதனன் என்ற தீயவனின் நட்பு, பல நல்ல குணங்கள் கொண்ட கர்ணனுக்கு எமனாகி விட்டதல்லவா... கிராமத்தில், 'பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் தின்னும்' என்பார்கள்.
எனவே தான் சிறுவயது முதலே சேரும் இடத்தை அறிந்து பழகுவதற்கான முயற்சியைப் பெரியவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவனின் நட்பைப் பொறுத்தே அவனது எதிர்காலம் அமைகிறது.
சந்தையில் விற்கும் கிளிகளை இரண்டு பேர் வாங்கிச் சென்றனர். ஒருவர் துறவி. மற்றொருவர் கசாப்புக் கடைக்காரர். துறவியிடம் வளர்ந்த கிளியோ யாரைக் கண்டாலும், 'வாருங்கள்! வணக்கம்' எனச் சொல்லி மகிழ்விக்கும். கசாப்புக் கடைக்காரரிடம் வளர்ந்த கிளியோ, 'வெட்டு குத்து கழுத்தைக் திருகு' எனக் கூச்சலிட்டு பிறரை பயமுறுத்தியது. பள்ளி ஆசிரியர்கள் இந்த கதையை மாணவர்களிடம் கூறி நல்ல நட்பின் அவசியத்தை வலியுறுத்துவார்கள்.
நல்ல சேர்க்கை அப்படி என்ன தான் தரும்? அப்படி கேளுங்கள். நல்ல சேர்க்கை அதாவது நல்ல மனிதர்கள் தான் நல்ல நம்பிக்கையைத் தருவார்கள். மனித மனம் சோர்வுக்கு ஆளாகும். சிறு துன்பம் என்றாலும் போர்வையைப் போர்த்திக் கொண்டு மனம் குமுறும். அது போன்ற சமயங்களில் நல்ல மனிதர்கள் நம்பிக்கையைத் தருவார்கள். அடியார்களின் வரலாற்றை எடுத்துக் கூறி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். துன்பங்களைப் பற்றிச் சொன்னால் அதை விட துன்பத்தை அனுபவித்தவர்கள் எல்லாம் வாழ்வில் எப்படி கடவுளால் காப்பாற்றப்பட்டனர் என்பதைக் கூறி தேற்றுவர். இதுவே நல்லவர் சேர்க்கையால் கிடைக்கும் நன்மை ஆகும். தீயோர் சேர்க்கையோ நம்மை பயமுறுத்தும் அல்லது நிம்மதியை கெடுக்கும் அல்லது தீமை தரும்.
மகாபாரதப் போரின் போது பீஷ்மர் களத்தில் இறங்கி எல்லோரையும் கலங்கடித்துக் கொண்டிருந்தார். ஆயினும் பாண்டவர் யாரும் கொல்லப்படாதது குறித்து ஆத்திரமுற்ற துரியோதனன், ''பிதாமகரே! நீங்கள் என்ன தான் உக்கிரமாகப் போர் புரிந்தாலும் உங்கள் மனதில் பாண்டவர் மீதான பாசம் குறையவில்லை. எனவே தான் அவர்களைக் கொல்லவில்லை'' என கத்தினான்.
எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவன் கேட்கவில்லை. இறுதியில் பீஷ்மர் கோபத்துடன் எழுந்து வில்லை ஊன்றி. 'நாளை மாலை சூரியன் மறைவதற்குள் பாண்டவர்களை மாய்ப்பேன். இது என் வில்லின் மீது ஆணை' என்றார். உலகமே நடுங்கியது. இந்தச் செய்தி பாண்டவர்களை அடைந்தது. 'பீஷ்மரின் சபதம் பலித்து விடுமே... என்ன செய்வது' என திகைத்தனர். ஆனால் அவர்கள் சேர்ந்திருந்த இடம் பகவானின் திருவடிகள் அல்லவா... அவர்கள், 'இக்கட்டான சூழலில் நாங்கள் இருக்கிறோம். இத்தனை நாளும் காப்பாற்றியது போல இப்போதும் நீங்களே காப்பாற்ற வேண்டும்' என பிரார்த்தனை செய்தனர்.
அப்போது மழை பெய்யத் தொடங்கியது. மேக மூட்டத்துடன் மாலை நேர இருள் கவிழ்ந்தது. பாஞ்சாலியை அழைத்துக் கொண்டு பகவான் பீஷ்மரின் பாடி வீட்டிற்கு (தங்குமிடம்) அழைத்துச் சென்றார்.
மழை பெய்து சேறாக இருந்ததால் திரவுபதியின் பாதரட்சைகள் வழியெங்கும் ஒலியெழுப்பின. எனவே பகவான் அவளின் காலணிகளைக் கழற்றித் தரச் சொல்லி கைகளிலே தாங்கிக் கொண்டான். பீஷ்மர் படுத்து ஓய்வெடுத்தபடி இருந்தார். திரவுபதி உள்ளே சென்று பீஷ்மரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். வழக்கம் போல அவரும் யாரென பார்க்காமல் 'தீர்க்க சுமங்கலி பவ' என ஆசியளித்தார்.
பின்னர் எழுந்து விளக்குகளை மெல்லத் துாண்டி வெளிச்சத்தில் பார்த்த போது திரவுபதி நின்றிருந்தாள். திகைப்பில் ஆழ்ந்தார். 'நாளை காலையில் போரில் பாண்டவர்களை வேரறுப்பேன் எனச் சொல்லி இருக்கிறேனே...' என வருந்தினர். பின்னர் ஒருவழியாக மனம் தெளிந்தவராக, வெளியே யாரோ நிற்கிறார்களே என எழுந்து பார்த்தார். திரவுபதியின் காலணிகளைத் தாங்கியபடி பகவான் நின்றிருந்தார். பீஷ்மர் பெருங்குரலில், ''பகவானே! தர்மத்தைக்
காக்க அடியவர்களின் காலணியைத் தாங்கியபடி மழையில் நிற்கிறீரே.. உம்மைச் சார்ந்து விட்ட அவர்களுக்கு எப்படி தோல்வி வரும்?'' என வணங்கினார். பகவான் புன்னகையுடன் திரவுபதியை வெற்றிச் செல்வியாக அழைத்துச் சென்றார். பின்னர் பாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றதை உலகமே அறியும்.
ஆம்... இதுவே நல்லார் இணக்கம். நல்ல அடியவர்கள் நம்மை பகவானோடு அல்லவா இணைத்து விடுகிறார்கள். பக்தியுடன் சரணடைவோம். பகவானுடன் கூட்டணி சேர்வோம். எந்நாளும் நல்வழியில் நடந்து வாழ்நாள் முழுவதும் பத்திரமாகப் பயணிப்போம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870