
அதிசயம் ஆயிரம் நாள்தோறும்...
'வேறு நினைப்பு இன்றி எந்த வேண்டுதலும் வைக்காமல் என்னை வழிபடுபவரின் வாழ்வுக்கு நான் பொறுப்பு' என்கிறார் பகவான் கிருஷ்ணர். 'மழைக்குக் குடை, பசிக்கு உணவு, எங்கள் வாழ்வுக்கு எங்கள் கண்ணன்' என்கிறார் மகாகவி பாரதியார். கடவுளிடம் முழுமையாகச் சரணடைதல் என்பது பெரும் பாக்கியம். இதை நமக்கு காட்டுகிறது சனாதனம்.
'ரயிலிலோ அல்லது பஸ்சிலோ பயணம் செய்பவன் தலையில் உள்ள சுமையைக் கீழே இறக்கி வைக்காமல் பயணிப்பது எத்தனை முட்டாள்தனம். அது போல பொறுப்புக்களை கடவுளின் பாதத்தில் வைத்து விட்டு எதையும் எதிர்பாராமல் கடமையைச் செய்வதே சரணாகதி' என்கிறார் ராமகிருஷ்ணர். அதனால்தான் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்த நாளை மனப்பூர்வமாக கடவுளிடம் ஒப்படைத்தனர் நம் முன்னோர்கள். தாயிடம் உரிமையுடன் பேசும் குழந்தையாக, ''இந்த நாளை முழுமையாக உன் பாதத்தில் ஒப்படைக்கிறேன்'' என்றனர். இரவில் திருநீறு பூசிக் கொண்டு கடவுளுக்கு நன்றி சொல்லிய பின்னரே துாங்கினர்.
கிராமம் ஒன்றின் திண்ணை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருந்தார். மாத சம்பளம் கிடையாது. தினமும் காலையில் கடவுள் நாமத்தைச் சொல்லிய படியே தெருவில் வலம் வருவார் ஆசிரியர். அப்போது அரிசி, பருப்பு, மிளகாய், உப்பு, காய்கறி என மாணவர்களின் பெற்றோர்கள் மரியாதையுடன் வழங்குவார்கள். யார் தராவிட்டாலும் கவலைப்படாமல் பாடம் நடத்துவதில் குறியாக இருப்பார் ஆசிரியர். தினமும் அதிகாலையில் பகவத்கீதை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் அவர் படித்த போது, ''என்னைச் சரணடைந்தவர்களின் வாழ்வுக்கு நானே பொறுப்பு'' என ஸ்லோகம் ஒன்று இருப்பதைக் கண்டார்.
ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. பிரபஞ்சத்தில் எத்தனை கோடி அண்டங்கள். எத்தனை கோடி உயிர்கள். எல்லாவற்றிற்கும் எவ்வாறு அவர் பொறுப்பாவார்? எனவே இந்த ஸ்லோகம் தவறானது என பெருக்கல் அடையாளம் இட்டு புத்தகத்தை மூடினார். பின் வெளியே சென்றார். சற்று நேரத்தில் ஒரு சிறுவன் பெரிய மூடையுடன் ஆசிரியரின் வீட்டிற்குள் நுழைந்தான். மூச்சிறைத்தபடி, '' அம்மா... அம்மா'' என்றான். ஆசிரியரின் மனைவி வருவதற்குள், மூடையை இறக்கி, அரிசி, பருப்பு, காய்கறிகளை பிரித்து வைத்தான்.
'யாரப்பா நீ? இதை யார் கொடுத்தது?'' எனக் கேட்டதற்கு,'' இது என் குருதட்சணை'' என்றான். ''உன்னை நான் பார்த்ததில்லையே.'' என்றாள். அதற்கு சிறுவன், ''இந்த கிராமத்தில் எத்தனையோ சிறுவர்கள் படிக்கிறார்கள். அனைவரையும் உங்களுக்குத் தெரியுமா'' என்றான். அவனது இனிய பேச்சில் மயங்கினாலும், மற்றவர்களுக்கு உரிய பொருளாக இருக்குமோ என்ற பயம் ஏற்படவே, ''சரி! கொடுத்தது யார் என ஆசிரியர் கேட்டால் என்ன சொல்வது'' எனக் கேட்டாள். அதற்கு, ''என் பெயர் கண்ணன். நான் சொன்னது தவறு என என் முதுகில் ஆசிரியர் அடித்த பெருக்கல் அடையாளம் இருக்கு...'' என முதுகைக் காட்டினான்.
''என் வீட்டுக்காரர் யாரையும் அடிக்க மாட்டார்'' என்றாள் அவள். காயத்திற்கு களிம்பு தடவினாள். அவன் அங்கிருந்து மறைந்தான். அன்று ஆசிரியருக்கு யாரும் பொருள் தரவில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், '' உங்கள் சீடன் கண்ணன் இதை கொடுத்தான். அவன் சொன்னது தவறு என்று நீங்கள் அடித்த அடையாளத்தையும் காட்டினான்'' என்றாள் மனைவி.
உடனே பகவத் கீதை படித்தது நினைவுக்கு வர, புத்தகத்தை பார்த்தார். பெருக்கல் குறியை காணவில்லை. 'கண்ணா! கண்ணா!' எனக் கதறினார். 'சரணடைந்தவர்களை காப்பாற்றுவேன் என நிரூபித்து விட்டாயே' என கண்ணீர் விட்டார். ஆம்... கடவுளை நம்பினால் காப்பாற்றுவார் என்பதற்கு இது உதாரணம்.
நம்பிக்கை, உறுதி, பக்தி மட்டுமே நமக்குத் தேவை. ஆழமான பிரார்த்தனை எந்த அதிசயத்தையும் செய்யும்.
அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மருத்துவ மாநாடு ஒன்றிற்கு செல்ல வேண்டியிருந்தது. வானிலை மோசமாக இருந்ததால் செல்ல வேண்டிய இடத்திற்கு 200 கி.மீ., முன்னதாகவே விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்த அதிகாரிகள், 'விமானத்தில் செல்ல வாய்ப்பு இல்லை. வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். நீங்களே ஓட்டிச் செல்லுங்கள்' என்றனர்.
காரை ஓட்டிச் செல்லும் வழியில் பனிப்புயல் வீசியது. கடவுளை பிரார்த்தித்தபடி பயணத்தை தொடர்ந்தார். களைப்பால் மெயின் ரோட்டில் இருந்து விலகி கிராமப் பகுதிக்குள் சென்று விட்டார். பாதை மாறிச் சென்றது புரிந்தது. அப்போது வீடு ஒன்று தென்பட்டது. அதனருகில் காரை நிறுத்தி விட்டு கதவைத் தட்டினார். ஒரு பெண் கதவைத் திறந்து வரவேற்றாள். ''அம்மா! நான் மிக களைப்பாக உள்ளேன். டீ கிடைக்குமா...'' எனக் கேட்டார். அவள் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து கைகள், முகத்தைச் சுத்தம் செய்து கொள்ளச் சொன்னாள். ஒரு தட்டில் பிஸ்கட், டீ கொடுத்தாள்.
பசிக்கு அது அமுதமாக இருந்தது. இங்கு யார் எல்லாம் இருக்கிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு , 'நானும், நோயுற்ற என் மகனும் இருக்கிறோம்'' என்றாள்.
''நான் ஒரு மருத்துவர். நீங்கள் அனுமதித்தால் உங்கள் மகனை பரிசோதிக்கிறேன்'' என்றார்.
படுத்திருந்த சிறுவனைப் போய் பார்த்தார். ஒரு நோயின் பெயரைச் சொல்லி, இதை குணப்படுத்த முடியாது என்றும், மெக்சிகோவில் உள்ள மருத்துவர் வில்லியம்ஸ் தான் இதற்கு சரியான நபர் என்றும் இங்குள்ள மருத்துவமனையில் சொல்லி விட்டனர். ஏழையான எங்களால் அங்கு செல்ல முடியாது. அவனுக்காக நான் தினமும் பிரார்த்திக்கிறேன்'' என்றாள்.
கண்ணீருடன், ''அம்மா! நான் தான் வில்லியம்ஸ். உங்கள் பிரார்த்தனை இங்கே இழுத்து வந்து விட்டது. என்னை இங்கு கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி'' என இருவரையும் காரில் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆம்...நம்பிக்கையும், பிரார்த்தனையும் அதிசயங்களைச் செய்யும். எப்போதும் கடவுளைச் சரணடைவோம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870