sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சனாதன தர்மம் - 25

/

சனாதன தர்மம் - 25

சனாதன தர்மம் - 25

சனாதன தர்மம் - 25


ADDED : மார் 31, 2024 09:08 AM

Google News

ADDED : மார் 31, 2024 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேசும் தெய்வம்

அன்பு வடிவானவர் கடவுள். அவர் மீது பக்தி கொண்டவர்கள் உயிர்கள் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்துவர். தாவரம், விலங்குகள் மீது அன்பு கொண்டவன் உலக அமைதிக்கு வழிகாட்டுகிறான். எனவே தான் உலகின் உயிர்நாடியாக இருப்பது அன்பு என்கிறது வேதம்.

வழிபாடு என்பது மனிதனை ஒழுக்கமாக வாழச் செய்யும். நன்றி உள்ளவனாக ஆக்குகிறது. நன்றி உணர்வை எங்கும் பரவச் செய்வது நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறது. துாய மனமும், பக்தியும் கொண்டவர்களுக்கு நேரில் கடவுள் காட்சியளித்து நடத்திய அதிசயங்கள் ஏராளம்.

வழிபாட்டுக்காக தினமும் சுவாமி படத்தைத் துாய்மைப்படுத்தி சந்தனம், குங்குமம் இட்டு, ஒரு பூ வைத்தாலும் போதும். பூஜை செய்யுமிடம் துாய்மையாக இருக்க வேண்டும். பழைய பூக்கள் களையப்பட்டு, புதிய பூக்களைச் சாத்துவது அவசியம். படங்களில் சந்தனம் வைக்கும் போது அது சுவாமியின் கண்கள், மூக்கில் வழிந்தோடாமல் இருக்க வேண்டும்.

கைக்குழந்தையைப் பராமரிப்பது போல சுவாமி படங்களை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். பிரசாதம், பழங்கள் வைக்கும் போது குழந்தைக்கு ஊட்டுவது போல மனதில் நினைக்க வேண்டும்.

தாய்மை உணர்வுடன் சாத்திய மலர்கள், படைக்கும் பிரசாதத்தை ஏற்று கடவுள் நமக்கு அருள்புரிகிறார். வழிபாட்டில் ஒருவன் தன்னையே மறக்கும் நிலையில் கடவுள் பேசத் தொடங்குவார். இது நடக்குமா என்றால் 'ஆழமான நம்பிக்கை' என்பது தான் விடை.

திருநாரையூர் என்னும் சிவத்தலத்தில் அனந்தேசர் என்ற அர்ச்சகர் இருந்தார். அங்குள்ள பொல்லாப் பிள்ளையார் சன்னதியில் (அதாவது பொள்ளாப் பிள்ளையார் - உளியால் செதுக்காமல் சுயம்புவாக வந்தவர்) பூஜை செய்து வந்தார். ஒழுக்கம், கட்டுப்பாடு, பக்தி, தெய்வ நம்பிக்கை, கனிவான பேச்சு ஆகியன இவரது அடிப்படை குணங்கள்.

குணசீலரான அனந்தேசர் சிறப்பாக வழிபட்டு வந்தார். அவரது மனைவி கல்யாணி. இருவரின் பக்திக்கு பரிசாக நம்பியாண்டார் நம்பி என்னும் ஆண் குழந்தை பிறந்தது. தமிழ், சமஸ்கிருத மொழிகளை கற்றுக் கொடுத்தார். குழந்தைக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்ததும் வேத பாட சாலையில் சேர்த்தார். தினமும் பாடசாலைக்குச் செல்லும் முன் தந்தையுடன் கோயிலுக்குச் சென்று உதவி செய்வார்.

ஒருநாள் அவசரப் பணியாக தந்தை வெளியூர் செல்ல நேர்ந்தது. மகனிடம், 'நம்பி... நாளை அம்மாவிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு நீயே வழிபாடு செய்' என்றார். நம்பியும் பாடல்கள், மந்திரங்கள் சொல்லியபடி அபிேஷகம் செய்து, மாலைகளைச் சார்த்தி வழிபடத் தொடங்கினார். துாபம், தீபம் காட்டி பிரசாதம் படைத்தார். சுவாமி உணவைச் சாப்பிடுவார் எனக் காத்திருந்தார். நிவேதனம் என்பதற்கு 'அறிவிப்பது' என பொருள். ''பஞ்ச பூதங்களான நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் உதவியுடன் பெற்ற உணவை நன்றியுடன் அர்ப்பணிக்கிறோம். அதை அருள் பிரசாதமாக உண்கிறோம்'' என்னும் பொருளில் உள்ள மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த விஷயம் பற்றி தெரியாததால், 'ஏன் இன்னும் சாப்பிடவில்லை' என வருந்தினான் நம்பி. 'ஒருவேளை தந்தை படைத்தால் உண்பாரோ... தான் படைப்பதால் உண்ணவில்லையோ' என எண்ணினான்.

'பிள்ளையாரப்பா... சாப்பிடு...' எனக் கண்ணீர் விட்டான். சாப்பிடாவிட்டால் ஒழுங்காக வழிபடவில்லை எனத் தந்தை கோபிப்பாரோ என பயந்தான். 'சாப்பிடாவிட்டால் உயிரை விடுவேன்' என்று சொல்லி பீடத்தில் மோதினான். அவனை தடுத்து நிறுத்தி துதிக்கையால் எடுத்து பிரசாதத்தை உண்டார். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான். பிரசாதம் எங்கே எனக் கேட்டாள் தாய். கோயிலில் சுவாமி சாப்பிட்டதாக கூறினான் நம்பி. 'பூஜை முடிந்ததும் ஊரைச் சுற்றி விட்டு நண்பர்களுக்குப் பிரசாதத்தைக் கொடுத்து விட்டாயா' என தாய் கோபித்தாள்.

தந்தை வந்தவுடன் நம்பி செய்த வழிபாடு பற்றிக் கூறினாள். அவரும் கோபப்பட்டார். கலங்கிய கண்களுடன் நடந்ததைச் சொன்னான் நம்பி.

மறுநாள் காலையில் நம்பியையே மீண்டும் போகச் சொல்லி விட்டு, பின்னால் சென்று மறைந்திருந்து பார்த்தார். உள்ளம் உருகியபடி நம்பி செய்த வழிபாட்டில் நேரில் தோன்றிய விநாயகர் பிரசாதம் சாப்பிடுவதைக் கண்டு மெய் சிலிர்த்தார். மகனின் பக்தி, விநாயகரின் அருளை எண்ணி வியந்தார்.

சிறுவன் நம்பிக்கு அனைத்து கல்வி, கலைகளையும் கற்றுக் கொடுத்தார் விநாயகர். அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த ராஜராஜ சோழன் அழைப்பு விடுத்து, நம்பியாண்டார் நம்பியின் ஆலோசனையுடன் சிதம்பரம் கோயிலில் இருந்த பன்னிரு திருமுறைகளை தொகுத்தார்.

நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நுாலே, சேக்கிழாரின் பெரிய புராணம் நுாலுக்கு உதவியாக இருந்தது.

இது போல பல அடியவர்களுக்கு காட்சி தந்து கடவுள் அருள் செய்தார். இன்றும் அருள் செய்து கொண்டும் இருக்கிறார்.

காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் ஒருவர் தினமும் அவரின் படத்திற்கு பூச்சூட்டி பால் நிவேதனம் செய்து வந்தார். ஒருநாள் அவரது ஊருக்கே மஹாபெரியவர் எழுந்தருளினார்.

இவரும் அவரை தரிசிக்கச் செல்லும் அவசரத்தில் வேகவேகமாக பூச்சூட்டி பால் நிவேதனம் செய்து விட்டு தரிசிக்கச் சென்றார். மஹாபெரியவர் அருகில் சென்று ஆசி பெற்றார்.

சுவாமிகளின் முகத்தில் ஏதோ மாறுதல் தெரியவே தயங்கி நின்றார். 'என்ன பார்க்கிறாய்' எனக் கண்களாலேயே கேட்டார் சுவாமிகள். 'தங்களின் நாக்கு ரொம்ப சிவந்தது போலிருக்கே' என்றார் பக்தர்.

நாக்கை காட்டி விட்டு, ' இங்கு வரும் அவசரத்தில் நீ தான் இன்று கொதிக்கும் பாலை நிவேதனம் செய்தாயே' என்றார். பக்தர் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். தினமும் தான் படைக்கும்

பாலை காஞ்சி மஹாபெரியவர் ஏற்கிறார் என்பதை உணர்ந்த பக்தரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆம்... அன்புடன் கடவுளுக்கு செய்யும் பூஜையின் பலன் இது. கடவுள் அன்பே வடிவானவர். நாம் படைக்கும் ஒவ்வொன்றையும் அன்புடன் ஏற்கிறார். அன்பு, நன்றியுடன் வழிபடுவோம்.

அவரது துணையுடன் ஆனந்தமாக வாழ்வோம். எங்கோ துாரத்தில் அவர் இல்லை. எப்போதும் நம்முடனே இருக்கிறார். உணர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதே சனாதன தர்மம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870






      Dinamalar
      Follow us