
உணவே! உணர்வே!
உணவு கடவுளுக்குச் சமம். 'அன்னம் பரப்பிரம்ம சொரூபம்' என்கிறது வேதம். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்கிறது மணிமேகலை. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்கிறார் திருவள்ளுவர்.
சனாதன தர்மத்தின் அடிப்படையான பண்பு அன்னதானம் செய்வது. அந்தக் காலத்தில் குழந்தைக்கு உணவூட்டும் போது, 'காக்கைக்கு ஒரு வாய்; குருவிக்கு ஒரு வாய்; நாய்க்கு ஒரு வாய், பூனைக்கு ஒரு வாய்' என்று சொல்வாள் தாய். பிறருக்கு உணவை பகிர்ந்த பிறகே நாம் உண்ண வேண்டும். வாகன வசதி இல்லாமல் நடந்து சென்ற காலத்தில் ஊர் தோறும் அன்னதான சத்திரங்களைக் கட்டினர் நம் முன்னோர்கள்.
ஊர் எல்லைகளில் சோற்று மூட்டையை தினமும் இரவில் மரத்தில் கட்டி வைப்பார்கள். எதற்காக என்றால் ஊருக்கு இரவில் வரும் வழிப்போக்கன் பசியால் வாடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தால் தான்.
தனக்காக மட்டும் உணவைத் தேடும் சுயநலக்காரன் தன் பாவம் முழுவதையும் அவனே அனுபவிக்க வேண்டும் என்கிறது பகவத்கீதை. கிராமங்களில் அன்றாடம் மீதமுள்ள சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்கும் முன்பாக ஊருக்குள் கடைசி பஸ் போய் விட்டதா எனக் கேட்பார்கள். காரணம் அதில் உறவினர் யாரும் வந்தால் உணவளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே.
மனிதன் திருமணம் செய்து கொள்வதே விருந்தினருக்கு உணவளிக்கத்தான் என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர் என்றால் நம் உறவினர்கள் அல்ல. நமக்கு தெரியாத புதியவர்கள் என்று பொருள்.
திங்களூர் என்னும் சிவத்தலத்தில் அப்பூதியடிகள் என்பவர் வாழ்ந்தார். அவர் திருநாவுக்கரசரின் மேன்மையைக் கேள்விப்பட்டு, அவர் பெயரில் தண்ணீர் பந்தல், அறச்சாலை, அன்னதானக் கூடங்களை நடத்தினார். அந்த ஊர் வழியே ஒருமுறை திருநாவுக்கரசர் வந்த போது தன் பெயரில் பல தர்மங்களைச் செய்யும் உத்தமர் யார் எனக் கேட்டார். அப்பூதியடிகள் என ஊரார் தெரிக்க அவர் வீட்டிற்குச் சென்றார் திருநாவுக்கரசர்.
இன்னார் எனத் தெரியாமலேயே வரவேற்றார் அப்பூதியடிகள். 'தர்மச் செயல்களை எல்லாம் உங்கள் பெயரில் செய்யாமல் வேறொருவர் பெயரில் செய்கிறீர்களே...' எனக் கேட்டார் திருநாவுக்கரசர். அதற்கு கோபப்பட்ட அப்பூதியடிகள், 'சிவபக்தியை பரப்பும் மேன்மையான திருநாவுக்கரசரை வேறொருவர் என்றீர்களே...' என்றார். 'சூலை நோய் மூலம் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட அடியேன் தான் அது' என்றார். தன்னிடம் உள்ள சிறுமையை முன்னிலைப்படுத்திய பெரிய மகான் அவர். அந்தளவுக்கு பணிவு கொண்டவர். அப்பூதியடிகள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிப்பு கோரியதோடு, தன் இல்லத்தில் தங்கவும் வேண்டினார். திருநாவுக்கரசரும் சம்மதித்தார். திங்களூர் கைலாச நாதர் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டு வருவதாகச் சொல்லி புறப்பட்டார். தன் மகன்களுக்கும் 'திருநாவுக்கரசு' என்றே பெயரிட்டிருந்தார் அப்பூதியடிகள். அவருக்காக அறுசுவை உணவு தயாரானது. மூத்தமகனான திருநாவுக்கரசை அழைத்து தோட்டத்தில் வாழை இலை பறித்து வரச் சொன்னார். அவன் இலை பறிக்கச் சென்ற போது கருநாகம் தீண்டியது. பதட்டமுடன் ஓடி வந்த அவன் வாழை இலையைத் தன் தாயிடம் கொடுத்து விட்டு உயிர் விட்டான்.
பெற்றோரின் மனம் துடித்தது. இருப்பினும் சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு உணவு அளிப்பதே முதல் கடமை எனக் கருதி சோகத்தை மறைத்தனர். திருநாவுக்கரசருக்கு விருந்தளிக்க முன்வந்தனர். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்ணலாம் என்ற திருநாவுக்கரசர், தங்களின் மூத்த மகன் எங்கிருக்கிறான் எனக் கேட்டார். 'அவன் இப்போது இங்கு வர மாட்டான்' என்றார் அப்பூதியடிகள். அவன் வந்த பிறகே நாம் உண்ணலாம் என்றார் திருநாவுக்கரசர். வழியின்றி நடந்ததை அழுதபடியே
தெரிவிக்க, சிறுவனின் சடலத்தைக் கொண்டு போய் கோயிலில் கிடத்தி திருநாவுக்கரசர் பாடினார். சிவனருளால் உயிர் பிழைத்தான் சிறுவன். அதன்பின் அப்பூதியடிகளின் தொண்டுகள் அங்கு தொடர்ந்தன. அன்னதானம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வால் உலகமே உணர்ந்தது.
தேவகோட்டை வள்ளல் ராமநாதன் என்பவர் தனுஷ்கோடியில் சத்திரம் கட்டி உணவு, உடைகளை தானம் செய்து வந்தார். தனுஷ்கோடி செல்லும் பக்தர்கள் அந்த சத்திரத்திற்குச் செல்வர். காஷ்மீர் மகாராஜாவும் ஒருமுறை அங்கு தங்கினார். மூப்பின் காரணமாக சிவனடியை அடைந்தார்.
இறுதிச் சடங்கு முடிந்து தகனம் செய்தனர். மறுநாள் காலையில் சுடுகாட்டுக்குச் சென்ற போது வள்ளலின் வலதுகை எரியாமல் கிடந்தது. மகான்கள் சிலரின் வழிகாட்டுதலால் அந்த கையை பூமியில் புதைத்து தேவகோட்டையில் சமாதிக் கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தனர். அக்கோயிலில் பூஜை ஒழுங்காக நடக்கிறதா என தேவகோட்டை ஜமீன்தாரிடம் பாடகச்சேரி சுவாமிகள் அடிக்கடி விசாரிப்பதுண்டு.
அன்னதானத்தின் பெருமையை உலகறியச் செய்யும் வரலாறு இது.
கொடை வள்ளல் கர்ணன் வாழ்வு முடிந்து சொர்க்கத்திற்குப் போனான். அங்கே பசி, தாகம், துாக்கம் யாருக்கும் கிடையாது. இருப்பினும் அவனுக்கு பசி இருந்தது. ஒருமுறை நாரதரை சந்தித்த கர்ணன், 'எனக்கு ஏன் சொர்க்கத்திலும் பசிக்கிறது' எனக் கேட்டான். 'எல்லா தானங்களையும் செய்த நீ அன்னதானத்தைச் செய்யாததால் பசிக்கிறது.
இருப்பினும் பசியால் வாடிய ஒருவரிடம், 'அதோ அந்த சத்திரத்தில் உணவு வழங்குகிறார்கள்' என ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த விரலை வாய்க்குள் வைத்தால் பசியடங்கும்' என்றார். கர்ணனும் அதைச் செய்ய பசி நின்றது. விரலால் அடையாளம் காட்டியதற்கே பசி தீருமானால் அன்னதானத்தின் பெருமையை யாரால் அளக்க முடியும்?
'யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர்கைப்பிடி' என்பார் திருமூலர். தினமும் சாப்பிடும் போது ஒருவருக்கு உணவளிக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. ஆயினும் காஞ்சி மஹாபெரியவர் அற்புதமான பிடியரிசி திட்டத்தைக் கூறியுள்ளார். தினமும் சமைக்கும் போது தர்மம் செய்ய கைப்பிடி அரிசியை எடுத்து வைக்க வேண்டும். அதை அன்னதானக் கூடம் அல்லது நம் வீட்டுப் பணியாளர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்களுக்கு தானம் செய்யலாம். இதனால் பிறருக்கு உணவு கொடுத்த மனநிறைவு ஏற்படும். இத்திட்டம் பற்றி அறியாதவர்களும் இன்றே இதை தொடங்குங்கள்.
ஆசிரியர் ஒருவர் எல்லா மாணவருக்கும் ஆளுக்கு ஒரு பிரட் கொடுத்து விட்டு இதை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் எனக் கேட்டார். ஒருவன் ஜாம் என்றான். இன்னொருவன் வெண்ணெய் என்றான். ஒருவன் ஊறுகாய் என்றான். ஆளாளுக்கு சுவைக்குரியதாக ஒவ்வொரு பொருளைச் சொன்னார்கள். ஆனால் ஒரு மாணவன், 'இதை என் நண்பனுக்கு பகிர்ந்து கொடுத்த பின் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்' என்றான். ஆம்! கடவுள் தந்த உணவை மற்றவருக்கு பகிர்ந்து கொடுப்போம். பசிப்பிணி தீர்ப்போம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870