ADDED : ஜூன் 21, 2024 01:01 PM

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கார்த்திகேய சுவாமி மலைக்கோயில் புகழ் மிக்கது. இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3048 மீட்டர் உயரத்தில் உள்ளது. விருப்பம் நிறைவேற இங்கு மணியை காணிக்கையாகக் கட்டுகின்றனர்.
சிவன் தன் மகன்களான விநாயகர், கார்த்திகேயனுக்கு இடையே போட்டி ஒன்றை நடத்தினார். அதன்படி உலகத்தை ஏழுமுறை சுற்றி விட்டு முதலில் வருபவருக்கு பூஜையில் முதல் மரியாதை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். கார்த்திகேயன் மயில் வாகனத்தில் புறப்பட்டார். ஆனால் விநாயகர் தன் பெற்றோரான சிவன், பார்வதியை ஏழு முறை வலம் வந்தார். இது உலகை சுற்றியதற்குச் சமம் என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவன், 'இனி பூஜைகளில் விநாயகருக்கு முதல் மரியாதை' என அறிவித்தார். இதையறிந்த கார்த்திகேயன் கோபம் கொண்டு தன் உடல், சதைகளை பெற்றோருக்கு காணிக்கையாக்கினார். எலும்புகளை எல்லாம் ஒன்றாக்கி சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் தேவர்களுக்கு காட்சியளித்தார்.
அதே கோலத்தில் வெண்ணிறச் சுயம்புத் திருமேனியாக (வெண்பளிங்கு கல்) கார்த்திகேய சுவாமி இருக்கிறார். உத்தரகண்ட் மாநிலத்தில் முருகப்பெருமானுக்கு உள்ள ஒரே கோயில் இது. பாரம்பரிய முறையில் பூஜை நடக்கும். மாலையில் நடக்கும் 'சந்தியா கால ஆரத்தி' விசேஷமானது. மகாபந்தர் என்னும் பிரமாண்ட விருந்து அனைவரையும் கவரும் நிகழ்வாகும்.
இக்கோயிலை சுற்றி நாலாபுறமும் உள்ள மலைகளைப் பார்க்கும் போது என்ன புண்ணியம் செய்தோமோ என எண்ணத் தோன்றும். மலைப்பாதையில் உள்ள கேதார்நாத் டோம், சவுகம்பா, நீலகண்ட பர்வத், துரோணகிரி, திரிசூல், நந்தா தேவி, சுமேரு பர்வத் ஆகிய சிகரங்களில் இமய மலையின் அழகை ரசிக்கலாம்.
மார்ச் முதல் அக்டோபர் வரை இக்கோயிலை தரிசிக்கலாம். மற்ற மாதங்களில் பனியால் கோயில் மூடப்பட்டிருக்கும்.
எப்படி செல்வது: ஹரித்துவாரில் இருந்து 200 கி.மீ தொலைவில் ருத்ர பிரயாக். அங்கிருந்து ருத்ரபிரயாக் - போகரி சாலையில் 40 கி.மீ., தொலைவில் கனக் சவுரி கிராமம். அங்கிருந்து மலைப்பாதையில் 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டும்.
விசேஷ நாள்: ஜூன் மாதத்தில் 11 நாள் கலச யாத்திரை, கார்த்திகை பவுர்ணமி,
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
அருகிலுள்ள தலம்: கர்ணபிரயாக் கர்ணன் மந்திர் 50 கி.மீ., (பரந்த மனம் உண்டாக...)
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி