ADDED : ஜூன் 21, 2024 02:04 PM

ராமேஸ்வரம் செல்ல முடியவில்லையா... காஞ்சிபுரம் மாவட்டம் திம்மராஜம்பேட்டை சிவனை தரிசியுங்கள். முன்னோரின் ஆசி கிடைக்கும்.
12ம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட போஜராஜன் கட்டிய கோயில் இது. இம்மன்னரின் கனவில் தோன்றிய சிவன், புண்ணியத் தலமான ராமேஸ்வரம் போல கோயில் கட்ட சொன்னார். இங்குள்ள மூலவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியைப் போல இருக்கிறார். கருவறையின் பின்புறம் 'சோமாஸ்கந்தர்' என்னும் பெயரில் பார்வதியுடன் சுவாமி திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்ற மணவாழ்க்கை அமையும். பிதுர் தலமான இங்கு புரட்டாசி மகாளய அமாவசையன்று பிதுர் ஹோமம், தர்ப்பணம் நடக்கிறது. மாசி மாத பவுர்ணமியன்று சூரியஒளி மூலவர் மீது விழுகிறது. இதை தரிசிப்போருக்கு உடல்நலம் மேம்படும். சூரிய தோஷம் நீங்கி தந்தை, மகன் உறவு பலமாகும்.
இச்சா, கிரியா, ஞானம் என்னும் மூன்று சக்திகளின் அம்சமாக பர்வதவர்த்தினி இருக்கிறாள். பவுர்ணமியன்று அம்மனைத் தரிசித்தால் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சியை தரிசித்த பலன் கிடைக்கும். மாங்கல்ய தோஷம் நீங்கவும், தாலிபாக்கியம் நிலைக்கவும் வெள்ளியன்று அர்ச்சனை செய்கின்றனர்.
தியான நிலையில் குருபகவான் கைகூப்பியபடி மூலவரை வழிபடும் விதத்தில் இருக்கிறார். குருவருளைப் பெற வியாழன் அன்று கொண்டைக்கடலை மாலை சாத்தி அர்ச்சனை செய்கின்றனர். ராஜகோபுரத்தின் இடது புறம் விகடச்சக்கர விநாயகர், வலது புறத்தில் ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் 15 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை உத்திரம் திருக்கல்யாணம், கார்த்திகை 3வது சோமவாரம், 108 சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மாசி மகம்
நேரம்: காலை 7:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99944 33598
அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் 15 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 -- 2722 2609