
மனிதன் தெய்வமாகலாம்
'சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே' என்பது திருவாசகம். இந்த உடலின்கண் உள்ளத்தின் உள்ளே உள்ள முடிச்சுகள் யாவும் அகற்றப்படும் போது ஜீவன் சிவனாகிறான். இதுவே முடித்த போதனை என்கிறது கடோபநிஷதம்.
கடவுள் வேறு, மனிதன் வேறு எனப் பிரித்துப் பார்க்காமல் மனிதனே தெய்வமாகலாம் என உறுதியாகக் கூறுகிறது சனாதன தர்மம். உலகிலுள்ள அசையும் பொருள், அசையாப் பொருள் என அனைத்தையும் கடவுளாகப் பார்க்கும் ஹிந்து சமயம் மனிதனையும் கடவுளாகக் காணும் பார்வையைத் தருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் சிவன் உறைந்திருக்கின்றான். எனவே தான் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'திருச்சிற்றம்பலம்' எனக் கூறும் பழக்கம் ஏற்பட்டது.
நம் இதயத்தில் இருக்கிறது சித் அம்பலம். ஆகாயமாக இருக்கிறது பேரம்பலம். இதையே சிதம்பரத்தில் திரையிட்டு ரகசியமாகக் காட்டுகிறார்கள். அங்கே நடராஜப் பெருமானின் சன்னதி மேற்கூரையில் மனிதன் ஒருநாள் விடும் மூச்சான 21,000 என்ற எண்ணிக்கையைக் கொண்டு 21,000 பொன் ஓடுகளை வேய்ந்திருக்கிறார்கள். மனித உடலில் உள்ள 72,000 நரம்புகளைப் போல 72,000 ஆணிகளை அடித்திருக்கிறார்கள் என்பதன் மூலம் நம் உள்ளமே பெருங்கோயில். இந்த உடம்பே கோயில் என்பதை உணரலாம்.
திருவாதவூரில் பிறந்தவரான வாதவூரனின் திறமையைக் கண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் அவரை மதுரைக்கு அழைத்தான். முதலமைச்சர் பதவி வழங்கி 'தென்னவன் பிரமராயன்' என்னும் பட்டம் வழங்கி கவுரவித்தான். மதுரையில் நல்லாட்சி நடக்க எல்லா வகையில் அவர் உதவினார். மன்னரின் ஆணையை ஏற்று குதிரைப் படையின் தரத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் கிழக்கு கடற்கரை நோக்கிப் பயணம் புரிந்தார் அவர்.
அங்கு குருந்த மரத்தடியில் குருவாக வந்து காத்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். கிழக்கு கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாதவூரரைக் காந்தம் இழுப்பது போல தன் அருளால் ஈர்த்தார் சிவன். ஞானமே வடிவான குருவைக் கண்டு, மனம் நெகிழ்ந்து வந்த வேலையை மறந்து அவர் திருவடியே அடைக்கலம் என்றானார். சீடரான வாதவூரரை அருட்கண்களால் நோக்கி, ஐந்தெழுத்தை உபதேசம் செய்து திருவடியைச் சூட்டி ஆட்கொண்டு மறைந்தார் குருநாதர்.
தாயை இழந்து தவிக்கும் குழந்தை போல குருநாதரைக் காணாமல் தவித்தார். ஏக்கமும், தாபமும் பாடல்களாக உருவெடுத்தன. உலகமே வியக்கும்படி திருப்பெருந்துறையில் இன்றைய ஆவுடையார் கோவிலில் அற்புதமான கோயிலைக் கட்டினார். முதன் முதலில் அரசாங்கப் பணம் அறநிலையத் துறைக்கு செலவானது.
மந்திரியைக் காணாமல் தவித்த மன்னன் ஓலை அனுப்பினான். வாதவூரர் தன் குருநாதரிடம் ஓலையைக் காட்டி என்ன பதில் சொல்வது எனச் சரணடைந்தார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என அவரும் பதில் அனுப்பச் சொன்னார். ஆவணி மூல நாளில் நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி சிவனே அரேபியக் குதிரைக் காப்பாளனாக மதுரைக்கு வந்தார். குதிரைப் படைகளைக் கண்ட மன்னன் வியந்து மகிழ்ந்து குதிரைக் காப்பாளனுக்கும் பரிசுகள் வழங்கினார். நள்ளிரவில் குதிரைகளில் மீண்டும் நரிகளாக மாறி மதுரையில் ஊளையிட்டன. மன்னன் வெகுண்டான். வாதவூரரைச் சிறையில் அடைத்தான். தண்டனை வழங்கினான். கண்ணீரால் சிவனை பூஜை செய்தார்.
நல்லவர்களின் கண்ணீர் இயற்கைச் சீற்றத்தை உருவாக்கும் என்பதன் சாட்சியாக வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வீட்டுக்கு ஒருவர் கரை அடைக்க வர வேண்டும் என மன்னர் கட்டளையிட்டார்.
துணைக்கு ஆளே இல்லாத நிலையில் புட்டு விற்கும் வந்திக் கிழவி என்பவள் மதுரையில் இருந்தாள். அவள் மதுரை கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில்
அச்சுப் புட்டு விற்பவள். அச்சாக வரும் பிட்டுக்களை விற்பனை செய்து விட்டு உதிர்ந்த பிட்டுக்களை எல்லாம் சிவனுக்குப் படைத்து விட்டு தர்மம் செய்வாள். அவளுக்கு வசதி இல்லாவிட்டாலும் பக்தியும், தர்ம குணமும் இருந்தது.
இந்த குணமே அவளிடம் சிவனை கொண்டு வந்து சேர்த்தது. உலகையே காக்கும் சிவபெருமானே கிழவிக்காக கூலி ஆளாக வந்தான். யாரும் ஆள் இல்லாத வந்திக்கிழவி, கூலியாக வந்த இளைஞனைக் கண்டு மகிழ்ந்து, 'அப்பா... என் சார்பில் கரை அடைக்கப் போவாயா' எனக் கேட்டாள். பிறவிக்கடலில் இருந்து கரை ஏற்றுபவன் இப்போது வந்திக் கிழவிக்காக வைகைக் கரையை அடைக்க வந்தான்.
என்ன கூலி தருவாய் எனக் கிழவியிடம் கேட்டான். அவளோ, ''என்னிடம் பணம் ஏதுமில்லை. உதிர்ந்து புட்டுகளைச் சொக்கனுக்கு காணிக்கை ஆக்குவேன். அதையே உனக்குத் தருகிறேன்' என்றாள் கடவுளே நேரில் வந்ததை அறியாத அந்தக் கிழவி. கூலியாளாக வந்த சிவனும் ஒப்புக் கொண்டு வைகையின் கரைக்கு போனார். அன்று பார்த்து கிழவிக்கு எல்லாப் புட்டுகளும் உதிர்ந்து போயின. ஆனால் அவள் கவலைப்படவில்லை. நேர்மையுடன் புட்டு அனைத்தையும் இளைஞனுக்குக் கொடுத்தாள். அதை வாங்கிய இளைஞன் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மீதியை அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தான். பின்னர் மணலிலே படுத்து துாங்கினான்.
மன்னன் வந்தான். யார் பணி செய்யாமல் படுத்துக் கிடப்பது என வெகுண்டு பிரம்பால் அடித்தான். மன்னன் உட்பட அனைவரின் முதுகிலும் அடிபட்டது. சிவன் மறைந்தான். வெள்ளம் வடிந்தது. சிவன் வந்ததை உணர்ந்தான் மன்னன். வாதவூரருக்காக பிரம்படியைத் தாங்கிக் கொண்ட சிவனின் கருணையை வியந்து அவரை சிறையில் இருந்து விடுவித்தான். மீண்டும் மந்திரியாக வேண்டினான். பதவி, பணம், புகழ், செல்வாக்கு எல்லாம் போதும். இனி எனக்கு எல்லாமே சிவன் தான் எனக் கூறி தலம் தோறும் சென்று சிவனைப் பாடினார். சுவாமியும் தன் திருக்கோலங்களை
எல்லாம் காட்டியருளினார். நிறைவாக சிதம்பரத்திற்கு வந்தார்.
சிவனே ஒரு இளைஞனாக வந்து வாதவூரர் சொல்லத் தானே தன் கைகளால் பாடல்களை எழுதினார். அதுவே திருவாசகமாக உருப்பெற்றது. வாதவூரர் மாணிக்கவாசகர் ஆனார். 'பாவை பாடிய வாயால் கோவையும் பாடுக' என்றருளினார் சிவன். அகத்துறை பாடலான திருக்கோவையைப் பாடினார்.
தான் எழுதிய திருவாசக ஏட்டை சிதம்பரம் நடராஜர் சன்னதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில் வைத்து விட்டு சிவன் மறைந்தார். மறுநாள் காலையில் தில்லைவாழ் அந்தணர்கள் சன்னதியைத் திறக்கும் போது திருவாசக ஏட்டைப் பிரித்துப் படித்துக் கண்ணீர் விட்டனர்.
மணிவாசகரை பக்தியுடன் அழைத்து வந்து 'திருவாசகத்தின் பொருள் யாது' எனக் கேட்டனர். அதற்கு அனைவரும், 'சிதம்பரத்தில் ஆடும் ஆடல் வல்லானே இதற்குப் பொருள்' எனக் கூறி உடலே ஜோதியாக மாற்றி அருட்பெருஞ்ஜோதியில் கலந்தார்.
தானே சிவம் ஆனார். அதனால் தான் உலகில் எங்கும் இல்லாத வழக்கமாக மனிதன் தெய்வமாக ஆனதை உணர்த்தும் விதத்தில் இன்றும் ஆவுடையார் கோவில் திருவிழாவே மாணிக்கவாசகருக்கே கொண்டாடப்படுகிறது. ரிஷப வாகனம், தேர் என எல்லாம் மாணிக்க வாசகருக்குத் தான் என்பதே நம் சமயத்தில் மனிதப் பிறவியில் பக்தியுடன் ஒருவன் முயன்றால் இறைநிலை அடையலாம் என்பதற்கான சாட்சி.
அதே போல உருவமற்றவர் கடவுள். அடையாளமாக லிங்கம் கூட கிடையாது. நமது ஆத்மாவே கடவுள் என்பதால் சுவாமிக்கு 'ஆத்மநாதர்' என்றே பெயர். சிவயோகத்தை வழங்கும் பராசக்தியும் 'சிவயோக நாயகி' எனப்படுகிறார். அம்பிகைக்கும் உருவம் கிடையாது. பாதங்கள் மட்டுமே. நந்தி, கொடிமரம் கிடையாது. பிரதோஷம் கிடையாது. சிவபெருமானே குருவானதால் தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது.
சனாதன தர்மத்தின் உயர்நிலை அருவ வழிபாடு மாணிக்கவாசகர் என்பதை உலகிற்கு உணர்த்தவே மனிதன் தெய்வமாகலாம் என்பதை நமக்குக் காட்டியுள்ளார். திருவாசகத்தை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் படியாகச் செய்வோம். எல்லாம் வல்ல சிவன் அருள்புரிவாராக.
-அடுத்த வாரம் முற்றும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870