
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லுாரில் குன்றின் மீது 'வரத ஆஞ்சநேயர்' கோயில் உள்ளது. குழந்தை இல்லாத குறை தீர அமாவாசையன்று இங்கு கிரிவலம் செல்லலாம்.
முன்பு இங்கு வாழ்ந்த ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஒருநாள் வயலில் உழுத போது ஆஞ்சநேயர் சிலையை அவர்கள் கண்டெடுத்தனர். அருகில் இருந்த குன்றின் மீது பிரதிஷ்டை செய்தனர். சுவாமியின் அருளால் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது. வரத ஆஞ்சநேயர் என்னும் இவர் வடக்கு நோக்கியும் வலது கையால் அபயம் அளித்தும், இடது கையில் தண்டம் ஏந்தியும் இருக்கிறார்.
காலப்போக்கில் இங்கு வழிபாடு மறைந்த நிலையில், சிறுவன் ஒருவன் கோயிலைத் துாய்மை செய்து வழிபட்டான். இதைக் கண்ட மக்களும் அவனுடன் சேர்ந்து பணியாற்றினர். அதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டது. சென்னை நங்கநல்லுார் ஆஞ்சநேயரின் சிலையை வடிப்பதற்கு கல் எடுத்து வரும் போது சில தடைகள் குறுக்கிட்டன. அதற்காக வரத ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.
அமாவாசையன்று கிரிவலம் வருவோருக்கு மனபலம், உடல்நலம் பெருகும். திருமணத்தடை, தம்பதி கருத்து வேறுபாடு, குழந்தையின்மை, கிரக தோஷம் நீங்கும். அனுமன் ஜெயந்தியன்று 1008 வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தப்படுகிறது.
அமாவாசையன்று வரத ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி பின்வரும் பாடலைப் பாடினால் பிரச்னைகள் தீரும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்
பஞ்ச பூதங்களுக்கும் அனுமனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வாயு பகவான் பெற்ற மைந்தனே! நீர்ப் பரப்பான கடலைத் தாண்டியவனே! ராமருக்காக ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்றவனே! பூமி பெற்றெடுத்த சீதையை இலங்கையில் கண்டவனே! ஐந்து பூதங்களில் ஒன்றான தீயால் இலங்கையை எரித்தவனே! அனைத்து நலன்களும் அளித்து எம்மைக் காப்பாற்றுவான்.
எப்படி செல்வது
* சென்னை தாம்பரத்தில் இருந்து வந்தவாசி வழியாக பெரணமல்லுார் 90 கி.மீ.,
* ஆரணியில் இருந்து 20 கி.மீ.,
விசேஷ நாள்: அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி, மாதந்தோறும் அமாவாசை
நேரம்: காலை 7:00-இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 97903 87313
அருகிலுள்ள தலம்: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் 25 கி.மீ., (கல்வி வளர்ச்சி...)
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மதியம் 3:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 04182 - 224 387