ADDED : ஜூன் 27, 2024 12:30 PM

கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் ஜுவாலாமுகி என்னும் பெயரில் அம்மன் கோயில் உள்ளது. இவள் மைசூரு சாமுண்டீஸ்வரியின் தங்கையாக கருதப்படுகிறாள்.
ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரர்களை தோற்றுவித்தது. இதனைப் பயன்படுத்தி அசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். ரிஷிகளின் யாகங்களைத் தடுத்தான். அனைவரும் பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டிய படி, கோரைப் பற்களுடன் 'ஜுவாலாமுகி' என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டுக் கொன்று, அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கும் இவளே உத்தனஹள்ளியில் கோயில் கொண்டிருக்கிறாள்.
மைசூரு சாமுண்டி மலையை அடுத்த குன்றில் கோயில் உள்ளது. அம்பிகை புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல சன்னதி உள்ளது. கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் ஏந்தி நிற்கிறாள்.
மூலவர், உற்ஸவருக்கு ஒரே பெயர் வழங்கினாலும், கருவறையில் அம்மன் நாக்கை நீட்டிய படியே கோபத்தோடு காட்சி தருகிறாள். உற்ஸவ அம்மன் சாந்தமாக இருக்கிறாள். ஜுவாலாமுகியை முதலில் தரிசித்த பின்னரே சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
சன்னதி முன்புள்ள அம்மன் பாதத்தின் அடியில், அசுர சக்திகள் செயல் இழந்து கிடப்பதைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. வெள்ளி அன்று ராகு காலத்தில் இங்கு தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும்.
பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நைவேத்யம் செய்து எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும்.
ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவன் சன்னதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை சிவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள். சித்தத்தை (அறிவை) தெளிவாக்குபவர் என்பதால் இவருக்கு 'சித்தேஸ்வரர்' என்றும் பெயருண்டு.
சீதையைப் பிரிந்த காலத்தில், ராமர் இவரை வழிபட்டு போரில் வெற்றி பெற்றதால் ராமநாதேஸ்வரர் என பெயர் பெற்றார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைரவர், மாரகதண்ட நாயக்கர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி.
விசேஷ நாள்: மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி பவுர்ணமி, சனி பிரதோஷம்.
நேரம்: காலை 7:30 - 2:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 98447 05061
அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில் 12 கி.மீ., (எதிரிபயம் தீர...)
நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 99646 76625