
மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகிலுள்ள குராயூரில் கிருஷ்ணர் வேணுகோபால சுவாமி அருள்புரிகிறார். இவரை தரிசிப்பவர்கள் குறை ஒன்றுமில்லை கோபாலா என நலமுடன் வாழ்வார்கள்.
14ம் நுாற்றாண்டில் தென்காசியை ஆட்சி செய்த மன்னர் வென்று மாலையிட்ட வீரபாண்டியன். கிருஷ்ண பக்தரான இவர் இக்கோயிலைக் கட்டினார். வீரபாண்டியன், பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியன் ஆகியோர் விரிவுபடுத்தினர். கருவறையில் புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா, ருக்மணி சமேதராக சுவாமி இருக்கிறார்.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளியமரம் பூப்பதோ, காய்ப்பதோ கிடையாது. அதைப் போல இங்குள்ள புளியமரமும் பூப்பதும், காய்ப்பதும் கிடையாது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர்கள் புனிதமானவையாகும். இங்கு ஓடும் கமண்டல நதி இப்படி தான் ஓடுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள 'குரா' மலர்கள் இங்கு அதிகம் இருப்பதால் ஊருக்கு 'குராயூர்' எனப் பெயர் வந்தது.
கிராமத்தினர் விவசாயத்தில் கிடைக்கும் நெல், மிளகாய், கேழ்வரகு போன்ற விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். சுவாமிக்கு சனிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம் பெற துளசி அர்ச்சனை செய்கின்றனர். பிள்ளைகள் கல்வியில் சிறக்க பெற்றோர் மாவிளக்கு ஏற்றுகின்றனர். நுழைவு வாயில், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை, அர்த்த மண்டபம், கருவறை என ஐந்து பிரிவுகளாக கோயில் உள்ளது. கருவறையில் எதிரில் பெரிய திருவடியான கருடாழ்வாரும், கல்துாணில் சிறிய திருவடி அனுமனும் உள்ளனர்.
எப்படி செல்வது: மதுரை-விருதுநகர் ரோட்டில் 22 கி.மீ.,யில் கள்ளிக்குடி. அங்கிருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, பொங்கல்.
நேரம்: காலை 7:00 - 9:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98432 93141, 0452 - 269 3141
அருகிலுள்ள தலம்: திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயில் 22 கி.மீ., (தம்பதி ஒற்றுமை...)
நேரம்: காலை 6:30 - 11:30 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0452 - 234 2782