sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனமே விழித்தெழு (16)

/

மனமே விழித்தெழு (16)

மனமே விழித்தெழு (16)

மனமே விழித்தெழு (16)


ADDED : ஆக 26, 2019 09:33 AM

Google News

ADDED : ஆக 26, 2019 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாழ்வில் முன்னேறிய மற்றவரைப் போல நானும் முன்னேற வேண்டும்' என்ற மன நிலைக்கும் 'ஐயோ அவன் முன்னேறி விட்டானே, நான் இன்னும் முன்னேறவில்லையே' என்ற மனநிலைக்கும் வேறுபாடு உண்டு. மற்றவரோடு நம்மை ஒப்பிடுவதில் தவறில்லை. மேலாண்மைப் படிப்பில் 'பெஞ்ச் மார்க்கிங்' (Bench Marking) என்றொரு தத்துவம் உண்டு. அதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு, நம்மிடம் உள்ள பொருளை விட எந்த விதத்தில் சிறப்பாக உள்ளது என்று ஆராய்ச்சி செய்து நம்முடைய பொருளிலும் அதை எப்படி கொண்டு வருவது பற்றி ஒரு செயல்திட்டம் தீட்டுவர். போட்டி மிகுந்த காலக்கட்டத்தில், ஆக்கபூர்வமான ஒப்பிடுதல் அவசியம். ஆனால் நம்முடைய பொருளை விட மற்றவர்கள் நேர்த்தியாகச் செய்யும் போது, 'ஐயோ...அவர்களுடைய பொருட்கள் இவ்வளவு தரமாக இருக்கிறதே!' என்று பொறாமை கொண்டால் ஆக்கபூர்வமான செயல்திட்டத்தில் நாம் ஈடுபட மாட்டோம். இதையே 'அழுக்காறு' என்பார்கள். நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் தீய சக்தி.

'அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்' என்னும் திருக்குறள் நமக்குத் தெரியும். அதாவது பொறாமை என்னும் கொடிய பாவி நம்முடைய செல்வத்தையும் அழித்து நம்மைத் தீய வழியில் தள்ளி விடும் என்பது பொருள்.

நம்முடைய மனம் ஒரு 'எண்ணங்களின் தொழிற்சாலை'. தெரிந்தும், தெரியாமலும் எண்ணங்கள் எப்போதும் மனதில் உதயமாகிக் கொண்டே இருக்கின்றன. நம்முடைய மூளை ஒரு ரசாயன தொழிற்சாலை! ஏனெனில் மனதில் எழும் எண்ணங்கள் உணர்ச்சிகளைத் துாண்டி சில ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. ஆக மனதிற்கும், உடலைக் கட்டுப்படுத்தும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

மனம் துக்கப்படும் போது கண்ணீர் சுரப்பிகள் கண்ணீரைச் சுரக்கும். பசிக்கும் போது, உணவைப் பற்றி நினைத்தாலே போதும் வாயில் உமிழ்நீர் சுரக்கும். அதே போல மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் நம்முடைய 'கார்டிசால்' (Cortisol) என்னும் வேதிப்பொருள் சுரக்கும். அடுத்தமுறை உங்களின் மருத்துவரைப் பார்க்கும்போது 'கார்டிசால்' இருக்கும் மருந்துகளை உட்கொள்ளலாமா என கேளுங்கள். 'கண்டிப்பாக வேண்டாம்' என்று சொல்வார். ஏனென்றால் கார்டிசால் நம் மூளையின் இயக்கத்தைப் பாதிக்கும் தன்மை கொண்டது. இது தேவைக்கு அதிகமானால் மூளையின் திசுக்களைக் கொன்று விடும், அதனால் மூளையின் அளவே குறைந்து விடும். மன உளைச்சலை உண்டு பண்ணும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். ரத்த அழுத்தம் அதிகமானால் என்னவாகும் என்பது உங்களுக்கே தெரியும்!

இந்த விளைவுகள் எதனால் வருகின்றன? பொறாமைப்படுவதால் தானே? இப்படிப்பட்ட 'பொறாமை' என்னும் உணர்ச்சி திருவள்ளுவர் சொன்னது போல ஒரு 'பாவி' தானே!

மாறாக நமக்குத் தெரிந்த சிலரைப் போல முன்னேற வேண்டுமென்றால் அவர்களை நாம் 'ரோல் மாடலாக' வைத்துக் கொள்வோம். இதன் காரணமாக அவர் மீது நமக்கு மதிப்பு உண்டாகும். அவர் எப்படி முன்னுக்கு வந்தாரோ அதே போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் ஏற்படும். இதுவும் ஒரு போட்டி உணர்ச்சி தான். ஆனால் உற்சாகம், ஊக்கத்தை கொடுக்கும் உந்து சக்தி. இந்த உணர்வு மனதில் வரும் போதும் மூளையில் ஒரு ரசாயனம் சுரக்கும். ஆனால் அது மூளையைப் பாதிக்கும் கார்டிசால் அல்ல. அட்ரினலின் (Adrinalin) என்ற ரசாயனம் அது. மூளையில் சுரக்கும்போது நமக்கு ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் உற்சாகம் கிடைக்கும்.

இப்போது சொல்லுங்கள். மூளையில் கார்டிசால் (அல்லது) அட்ரினலின் சுரக்க வேண்டுமா?

அடடா...! இப்படி தெரிந்திருந்தால் நான் பொறாமைப்பட்டிருக்க மாட்டேனே என சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது!

இனியாவது நம் மனம் விழிக்க வேண்டும்.

சரி...பொறாமையால் செயல்கள் எப்படி அமைகின்றன, மாறாக வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைத்தால் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என பார்ப்போம்.

நம்மிடம் ஒரு சைக்கிள் இருக்கும் நிலையில், கஷ்டப்பட்டு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்குகிறோம் என்று கொள்ளுங்கள். அப்போது உழைப்பின் பயனை உணருகிறோம். ஆனால் நண்பர், நம் மோட்டார் சைக்கிளை விட, விலை உயர்ந்த ஒன்றை வாங்குகிறார் என்றால், நம் மனதில் இருவித எண்ணங்கள் ஏற்படலாம். ஒன்று, நான் இன்னும் உழைத்து அவரைப் போலவே மோட்டார் சைக்கிள் வாங்குவேன் என்ற மனநிலை. இது நம்மிடம் ஆக்கபூர்வமான எழுச்சியை ஏற்படுத்தும்.

இதை ஆங்கிலத்தில் 'கன்ஸ்டிரக்டிவ் திங்கிங்' (Constructive Thinking) என்பர். இது ஆரோக்கியமான செயல்பாடு.

மாறாக இதே சந்தர்ப்பத்தில் நாம் வேறொரு விதத்திலும் செயல்படலாம். 'அவர் மட்டும் இவ்வளவு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கிவிட்டாரே, நான் வாங்கவில்லையே' என பொறாமைப்படலாம். இதனால் நாம் ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியாது.

நம்மை விட முன்னேறியவர்கள் மீது வெறுப்பு கொள்வோம். அவர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார்கள் என்பதை அறிய

ஆர்வம் ஏற்படாது. நாளடைவில் அவரது முன்னேற்றத்தை தடுக்கவும் சிந்திப்போம்.

சரி. பொறாமை என்பது நம் பிறவிக்குணமா? கடவுள் அப்படி படைத்தாரா? கண்டிப்பாக இல்லை.

நாம் வளர்ந்த சூழ்நிலை காரணமாக இருக்கலாம். பெற்றோர் தங்களின் குழந்தைகளை வளர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நாம்

பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிள்ளைகளின் குணத்தை உருவாக்கும். உதாரணமாக நம் மகன் நுாற்றுக்கு 80 மார்க் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். நாம் இரு விதமாக செயல்படலாம்.

'வெரிகுட்....80 மார்க் வாங்கினாயே....உன் நண்பன் மார்க் வாங்கினான் அல்லவா? அவன் எப்படி படிக்கிறான் என்று தெரிந்து கொண்டு அதே போல நீயும் படித்து அதிக மார்க் வாங்கு... உன்னால் முன்னேற முடியும்' என்பது நல்ல அணுகுமுறை. மாறாக,

'நீ 80மார்க் தானே வாங்கினாய்....உன் நண்பன் நுாறு வாங்கியிருக்கிறான். பள்ளியில் அவனைத் தான் அனைவரும் மெச்சுவார்கள்...உன்னை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்' என்பது பொறாமையைத் துாண்டும் அணுகுமுறை.

மற்றவரைப் பார்த்து பொறாமைப்படக் காரணம் நமது திறமை மீது நமக்கே நம்பிக்கை இல்லாத மனநிலை. இதன் காரணமாக, மற்றவர்கள் முன்னுக்கு வருகிறார்களே, நம்மால் முடியவில்லையே என்ற இயலாமை நம்மை வாட்டும். இதனால் மனதில் காழ்ப்புணர்ச்சி உண்டாகும்.

மூன்றாவது காரணம், நாம் எதைப் பார்க்கிறோமா, எதைக் கேட்கிறோமோ அவை நம் புத்தியை பாதிக்கும். புத்தியே நம் சிந்தனைகளை முடிவு செய்யும். சிந்தனையை பொறுத்து எண்ணம், செயல் அமையும். இதைத் தான் 'யதா திருஷ்டி: ததா புத்தி, யதா ஷ்ருதம் ததா புத்தி' என்பார்கள். தினமும் எந்த காட்சிகளைப் பார்க்கிறோம், யாருடன் பழகுகிறோம், எந்த மாதிரியான கதைகளைப் படிக்கிறோம் என்பது முக்கியம்.

அடுத்த முறை சின்னத்திரையில் வரும் தொடர்களைப் பார்க்கும் போது கதை என்ன, காட்சி என்ன என்பதை கவனியுங்கள். மற்றவர்களை எப்படி அழிப்பது, திருமணத்தை எப்படி நிறுத்துவது, அவர்களின் வெற்றியை எப்படி தடுப்பது என்பதைத் தானே பார்க்கிறோம். சாதிக்கத் துாண்டும் தொடர், திரைப்படங்களை பார்க்கிறோமா என யோசியுங்கள்.

ஆக,பொறாமை என்பது பிறவிக்குணம் அல்ல. நாமே வளர்த்துக் கொள்வது. இது நம்மை அழிக்கும்.

சரி. பொறமை வேண்டாம். உழைக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் உழைக்க மனமில்லை. காலையில் இழுத்துப் போர்த்தியபடி துாங்குகிறோமே ஏன்...?

அடுத்த வாரம் பார்க்கலாமா?

தொடரும்

அலைபேசி: 73396 77870

திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்






      Dinamalar
      Follow us