sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனமே விழித்தெழு (20)

/

மனமே விழித்தெழு (20)

மனமே விழித்தெழு (20)

மனமே விழித்தெழு (20)


ADDED : செப் 23, 2019 10:11 AM

Google News

ADDED : செப் 23, 2019 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் நமது செயல்கள் ஏன் இப்படி அமைகின்றன என ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் செயல்களுக்குக் காரணம் இயற்கையாக நமக்குள் இருக்கும் மூன்று குணங்கள் தான் என பகவத்கீதை சொல்லி விட்டது.

கீதையில் ஒரு ஸ்லோகம்.

''சத்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி சம்பவா (14 -: 5 )

அதாவது முக்குணங்கள் தான் இயற்கை. எந்த ஒரு உயிரும் உலகில் பிறந்தவுடன் இயற்கையாகவே இருக்கும் முக்குணங்கள் அதன் உயிரில் தொற்றி விடுகிறது.

சத்வ குணம் பற்றி பார்ப்போம்.

சாத்வீக குணம் என்பது மன அமைதி, நல்ல எண்ணம், ஆக்கப்பூர்வமாக சிந்தனை போன்ற பரிமாணங்களைத் தன்னடக்கியது.

மன அமைதி...யோசித்து பாருங்கள்! நம் முப்பாட்டனாரை விட நாம் அதிகம் படித்திருக்கிறோம். அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறோம். அவர்களுக்கு இருந்த வசதிகளை விட நமக்கு வசதிகள் அதிகம். அவர்களைப் போல உடலை வருத்தி வேலை செய்ய வேண்டாம். பட்டனைத் தட்டினால் விரும்பிய திரைப்படத்தை நாம் பார்க்கலாம். போன் செய்தால் போதும் விரும்பிய உணவு நம் வாசல் தேடி வருகிறது!

ஆனால் அவருக்கு இருந்த நிம்மதி, அமைதி நமக்கு உண்டா? கட்டாந்தரையில் ஏ.சி., இல்லாமல் துாங்கினார்கள் அவர்கள். ஆனால் நாம்?

கண்ணதாசனின் பாடல்கள் வரிகள் நினைவுக்கு வருகின்றன....

''சொன்னாலும் வெட்கமடா

சொல்லாவிட்டால் துக்கமடா

துாக்கமில்லாமல் வெட்கமில்லாமல்

வாழுகிறேன் ஒரு பக்கமடா

மன்னாதி மன்னனைப் போல்

மாளிகையில் வாழுகிறேன்

பாய் விரித்து படுப்பவரும் வாய் திறந்து துாங்குகிறார்

பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை

இல்லாத மனிதருக்கு இல்லை என்னும் தொல்லையடா

உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா

அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே

உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா

வண்ணமுத்து மண்டபமும் வைர நகை பஞ்சணையும்

உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

இப்பாடலை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அமைதியற்ற மனதின் புலம்பல் இது. மேலை நாடுகளில் இன்று விரும்பிக் கற்கும் பயிற்சி என்ன தெரியுமா? நம் நாட்டில் உருவாகி அண்மைக்காலம் வரை நம்மால் கைவிடப்பட்ட யோகாவும் தியானமும் தான்! உலகில் வாழும் பெரும் பணக்காரர்கள் கூட நிம்மதி தேடி இந்தியாவுக்கு பயணம் வருகிறார்கள். இமய மலையில் உட்கார்ந்து தியானம் செய்கிறார்கள்!

எண்ணங்களைத் துாய்மையாக்கி மனதை ஒருமுகப்படுத்த வேண்டுமெனில் நமக்குள் சாத்வீக குணம் வளர வேண்டும். அது எப்படி சாத்தியம்? ஒன்று தானாக எதுவும் வளராது, நாம் தான் வளர்க்க வேண்டும். இரண்டு அப்படி தானாக வளர்ந்தால் அது என்ன என்பதை பார்த்து தேவைக்கேற்ப மாற்ற வேண்டும். உதாரணமாக காடுகள் இயற்கையாக வளரும். தோட்டம் வேண்டுமெனில் நாம் தான் தோட்டத்தை உருவாக்க வேண்டும்.

சாத்வீக குணத்தை வளர்ப்பதற்கும் இது பொருந்தும். நம்மிடம் சாத்வீக, ரஜோ, தமோ குணங்கள் இருக்கின்றன. எந்த நேரத்தில் எந்த குணம் மேலோங்குகிறதோ அதன் பிரதிபலிப்பாக நம் செயல்கள் இருக்கும். பிறக்கும் போது சாத்வீகமாக இருந்த நம்மிடம் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்களைத் துாண்டும் ரஜோ குணமும், வாழ்வில் முன்னேற மற்றவரை அழித்தாலும் தவறில்லை எனத் துாண்டும் தமோ குணமும் ஏற்படுகின்றன. தொலைக் காட்சியில் வரும் தொடர்களை பார்த்தால் இந்த உண்மை புரியும். குறிக்கோள்களை அடைய பிறரை எப்படி அழிக்கலாம் என்பதை மையப் படுத்தி வரும் தொடர்களை குடும்பத்துடன் பார்த்தால் குழந்தைகளுக்கு சாத்வீக குணம் எப்படி வளரும்?

சாத்வீக குணத்தை ஏற்படுத்த நம் முப்பாட்டனார்கள் அன்றாடம் சொல்லிக் கொடுத்த ஒன்றை நாம் மறந்து விட்டோம். அது அவ்வைப்பாட்டியின் ஆத்திச்சூடி! இதோ சில வரிகள் .......

அறம் செய விரும்பு, ஆறுவது சினம்,

இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்,

உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல்,

எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி,

ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், ஞயம்பட உரை, கடிவது மற,

கீழ்மை அகற்று, கெடுப்பது ஒழி....

அநேகமாக பலருக்கு இதன் பொருள் தெரியாது. உதாரணமாக 'ஔவியம் பேசேல்' என்பதற்கு 'பொறாமையுடன் பேசக் கூடாது' என பொருள். 'ஞயம்பட உரை' என்றால் 'இனிமையாகப் பேசு' என்பது பொருள். 'கடிவது மற' என்றால் 'கோபத்தில் பேசாதே' என பொருள். 'கெடுப்பது ஒழி' என்றால் 'பிறருக்கு தீங்கு செய்யாதே' என்பது பொருள்.

சரி.... ஆத்திச்சூடி தான் படிக்கவில்லை. கொன்றை வேந்தன்? 'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்றால் என்ன என நம் வீட்டுக் குழந்தையைக் கேளுங்கள். அதற்கு முன்பு கொன்றை வேந்தன் என்றால் என்ன, அதை இயற்றியவர் யார் எனக் கேளுங்கள். 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்' என்றால் 'பிறருக்கு உதவாதவரின் பொருளை தீயவர் பறிப்பர்' என்பது பொருள்!

இவை குழந்தைகளுக்குக் கண்டிப்பாகத் தெரியாது. ஏனெனில் பாடத்திட்டத்திலிருந்து இவற்றை நீக்கி நீண்ட காலமாகி விட்டது.

ஆக சாத்வீக குணத்தை சிறு வயதிலிருந்தே வளர்ப்பது நம் கடமை. இல்லாவிட்டால் வளர்ந்த பிறகு குழந்தைகளிடம் நல்ல குணம் இருப்பது சந்தேகம் தான். ஆனால் அவர்கள் மெத்த படித்து கை நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்' என பாடிக் கொண்டிருப்பர்!

'அறம் செய விரும்பு' என ஆத்திச்சூடி வரிகளைச் சொல்லி புரிய வைத்த பிறகு, நம் குழந்தையின் பிறந்த நாளன்று மற்றும் ஒரு புத்தாடை வாங்கி அதன் கையால் வேறொரு குழந்தைக்கு கொடுக்கச் செய்தால் அறம் செய்தல் என்னும் நற்குணம் வளரும் அல்லவா?

நல்லவர்களோடு நாம் பழக வேண்டும். குழந்தைகளின் நண்பர்கள் யார், அவர்களின் குணம் என்ன என்றும் கவனிக்க வேண்டும்.

'சேரிடம் அறிந்து சேர்' என்கிறது ஆத்திச்சூடி. அதாவது நண்பர்கள் நல்ல குணம் உடையவரா என ஆராய்ந்த பின்னரே பழகு என்பது பொருள்.இது போன்ற கருத்துக்களை எடுத்துச் சொல்ல யார் இருக்கிறார்கள்? அந்த காலத்தில் பாட்டி தாத்தா இருந்தனர்! அனால் இன்று அவர்களும் தொலைக்காட்சி தொடர்களில் ஐக்கியமாகி விட்டனர்.

சாத்வீக குணம் பற்றி பார்த்த நாம், இனி ரஜோ குணத்தை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

தொடரும்

அலைபேசி: 73396 77870

திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்






      Dinamalar
      Follow us