ADDED : மே 22, 2016 11:39 AM

முருகன் பெயரில் அமைந்த தலமான திருமுருகன்பூண்டி திருப்பூர் அருகில் உள்ளது.
இங்குள்ள சண்முக தீர்த்தத்தில் நீராடி முருகனை தரிசித்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு: ஆயிரத்தெட்டு உலகங்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவத்தால் தேவர்களை துன்புறுத்தினான். அவனது அட்டூழியம் பெருகவே அவனை அழித்து தேவர்களை காக்க முருகன் சூரசம்ஹாரத்திற்கு தயாரானார். சூரனுடன் போர் புரிந்து, அவனை தன் வேலாயுதத்தால் இரண்டாக பிளந்தார். அவற்றை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். சூரனைக் கொன்றதால்
முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இத்தலத்திலுள்ள சுயம்பு மூர்த்தியான சிவனை வழிபட்டார். அவ்வாறு நீங்கிய பாவம், கோவிலின் வெளியே உள்ள வேம்படி முருகன் சன்னிதி அருகில் சதுரக் கல்லாக அமைந்தது. இங்குள்ள சிவன் முருகநாதர் என்றும், அம்மன் மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு முருகப்பெருமானுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதிக்குள் தான் முருகன் பிரதிஷ்டை செய்த முருகநாதர் லிங்கவடிவில் உள்ளார்.
காத்திருக்கும் மயில்: இத்தலத்திலுள்ள சிவலிங்கம் முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், திருமுருக நாதர் என்று அழைக்கப்படுகிறார். முருகன் சிவனை வழிபடும் முன்பு, வேலினால் கோவிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றி தீர்த்தத்தை உருவாக்கினார். அதன் அருகிலேயே, தன் வாகனமான மயிலை காவலுக்கு வைத்தார். இதனால் கருவறைக்குள் முருகன் மயில் இல்லாமல் காட்சியளிக்கிறார். சிவன் திருவிளையாடல்: சிவபக்தரான சுந்தரர், தனது நண்பரான மன்னர் சேரமானிடம் பொன்னும், பொருளும் பெற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இந்தக் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு வந்த போது இருட்டி விட்டது. எனவே அருகிலுள்ள (கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தூரம்) கூப்பிடுவிநாயகர் கோவில் வாசலில் ஓய்வெடுத்தார். அங்கிருந்த முருகநாதரை (சிவன்) வணங்க அவர் மறந்து விட்டார். தன்னை வணங்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், சிவ பூதகணங்களை வேடர்
வடிவத்தில் அனுப்பி பொன், பொருளைக் கவர்ந்து சென்றார். மனம் வருந்திய சுந்தரர் கூப்பிடு விநாயகரிடம் முறையிட்டார். சிவனின் திருவிளையாடல் இது என்பதை அறிந்த விநாயகர், துதிக்கையால் கிழக்கு திசையைக் காட்டி, இந்த சம்பவத்துக்கு சிவனே காரணம் என்பதை உணர்த்தினார். சுந்தரரும் சிவனும் நண்பர்கள். எனவே தன் நண்பனான சிவனை உரிமையுடன் திட்டிப் பாட ஆரம்பித்தார். சிவன் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்டார். பிறகு பொன்னும், பொருளும் அவருக்கே கிடைக்க ஆசியளித்தார். நண்பனின் இனிய பாடல்களைக் கேட்பதற்கே இவ்வாறு நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.
குழந்தை பாக்கியம்: முற்காலத்தில் புத்திரப் பேறின்றி தவித்த மகாரதன் என்ற பாண்டிய மன்னர் ஒருவர், இங்கு வந்து சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயாசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து முருகப்பெருமானுக்கு நைவேத்யம் செய்தார்.
அந்தணர்களுக்கு தானம் அளித்தார். அதன் பயனாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார். இத்தலத்தில் வழிபடுவோருக்கு விரைவில் புத்திரபாக்கியம் உண்டாகும். நினைத்தது நிறைவேற பால்குடம், காவடி எடுத்தும் வழிபாடு செய்கின்றனர்.
மூன்று தீர்த்தங்கள்: சுந்தரர் தன் பொருளை இழந்து வருந்திய போதும், பின் பொருள் பெற்று மகிழ்ந்த போதும் இருந்த முக பாவத்தை வெளிப்படுத்தும் நிலையிலுள்ள சிலைகள் சிவன் சன்னிதியின் முன்புறம் உள்ளன. பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபையில் சிவன் பிரம்ம தாண்டவம் ஆடிய நிலையில் காட்சியளிக்கிறார். வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் நீலகண்டி என்ற பெயருடன் பெண் காவல் தெய்வமும் இங்குள்ளது. சண்முக தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இருப்பிடம்: கோவை திருப்பூர் சாலையில் 43 கி.மீ., திருப்பூரில் இருந்து 8 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 5.30 - பகல்12.45, மாலை 3.30 இரவு 8.15 மணி.
தொலைபேசி: 04296 - 273 507

