/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
இரவில் குழந்தை அழுகையா... நிறுத்த இங்கே வழியிருக்கு...!
/
இரவில் குழந்தை அழுகையா... நிறுத்த இங்கே வழியிருக்கு...!
இரவில் குழந்தை அழுகையா... நிறுத்த இங்கே வழியிருக்கு...!
இரவில் குழந்தை அழுகையா... நிறுத்த இங்கே வழியிருக்கு...!
ADDED : டிச 30, 2016 11:09 AM

சில குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது பாடாய்ப்படுத்துவார்கள். பகல் முழுக்க தூங்குவார்கள். இவர்களின் அழுகையை நிறுத்தி நிம்மதியான தூக்கத்தை தரும் பைரவர், திருச்சி அருகிலுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அருள்கிறார். இங்கு பிரம்மாவுக்கு பிரம்மாண்டமான சன்னிதி இருக்கிறது.
தல வரலாறு: சிவனைப்போல ஐந்து தலைகளுடன் இருந்ததால், பிரம்மாவிற்கு ஆணவம் உண்டானது. எனவே, சிவன் அவரது ஒரு தலையைக் கொய்து படைக்கும் தொழிலைப் பறித்து விட்டார். தன்னை மன்னித்து மீண்டும் படைப்புத் தொழிலைப் பெற, பாவ விமோசனம் வேண்டி பூலோகம் வந்தார். இவ்வூரில் 12 லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்து வந்தார். அவருக்கு அருளிய சிவன், மீண்டும் படைப்புத்தொழில் செய்ய அருள் புரிந்தார். பிரம்மா பூஜித்த சிவன் 'பிரம்மபுரீஸ்வரர்' என்ற பெயரில் இங்கு எழுந்தருளினார்.இந்தக் கோவிலுக்குள் 12 லிங்கங்கள் உள்ளன.
இழந்த வேலை கிடைக்கும்: பல காரணங்களால் சிலர் வேலை, தொழிலை இழந்திருப்பார்கள். அவர்கள் இங்குள்ள சிவனையும், பிரம்மாவையும் வணங்கி மீண்டும் தங்களுக்கு நல்ல தொழில் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றனர். தங்கள் தலையெழுத்தை மாற்றி மங்களகரமாக எழுதும்படி வேண்டுவர். வேலை மட்டுமின்றி நோய்களால் சிரமப்படுபவர்களுக்காகவும், மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்காகவும், அவர்களின் விதியை மாற்றித் தரும்படி இவர்களை வேண்டலாம். இதற்காக பிரம்மாவிற்கு மஞ்சள் காப்பிடுவர். பிரம்மா படைப்புக்கடவுள் என்பதால், குழந்தை இல்லாதவர்களும் மகப்பேறு வேண்டி இவரை வழிபடுகின்றனர்.
பிரம்மசம்பத் கவுரி: படைக்கும் தொழிலை இழந்த பிரம்மாவுக்கு அம்பிகையும் அருள் செய்தாள். தனது பெயரில் அங்கு அவள் அருள்பாலிக்க வேண்டுமென பிரம்மா வேண்ட, அம்பிகைக்கு 'பிரம்மசம்பத் கவுரி' என்ற பெயர் ஏற்பட்டது. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் பிரம்மபுரீஸ்வரர் சன்னிதியில் சூரிய ஒளி விழும் நாட்களில், அம்பிகையின் பாதத்திலும் ஒளி விழும்.
பிரம்மாவுக்கு பூஜை: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா காட்சி தருகிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
கோவில் அமைப்பு
“குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு;
குருர் தேவோ மகேச்வர;
குரு சாக்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ” என்ற குருமந்திரப்படி அமைந்த கோவில் இது. கோவிலை வலம் வரும்போது, சிவன் சன்னிதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்த சன்னிதியில் பிரம்மா, அடுத்து சிவன் சன்னிதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்களம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைப்பர். இவரது சன்னிதியில் மஞ்சள் பொடி பிரசாதம் தரப்படும். பிரம்மா பிரதிஷ்டை செய்த பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாளஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னிதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.
அமாவாசை விசேஷம்: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் 'பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.
ஏழாம் எண் விசேஷம்: ராஜகோபுரத்தில் இருந்து ஏழு நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னிதிக்குள் சூரிய வெளிச்சம் விழும்படியாக, கோவில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.
ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். 7,16.25ம் தேதிகளில் பிறந்தோருக்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.
குழந்தைகளுக்கான வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் நிம்மதியாக தூங்க இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாம பூஜையில் இவரது சன்னிதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.
இருப்பிடம்: திருச்சி -சென்னை சாலையில் 20 கி.மீ., தூரத்தில் சிறுகனூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் கோவில்.
நேரம்: காலை 7:30 - மதியம் 12:00 மணி, மாலை 4:00 - இரவு 8:00 மணி. வியாழனன்று காலை 6:00 - மதியம் 12:30 மணி.
அலைபேசி : 98949 26090.

