
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாஸ்தாவின் பிறந்தநாள் பங்குனி உத்திரம். அவர் குழந்தை வடிவில் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் மெட்டு தர்மசாஸ்தா கோயிலில் அருள்பாலிக்கிறார். இவரை பால சாஸ்தா என்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
சிறப்பம்சம்:
சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக, சபரிமலை பாணியிலேயே இங்கு கோயில் கட்டப்பட்டது. மூலவர் பாலசாஸ்தா, பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரத்தில் உள்ளார். வலது கன்னத்தில் குழந்தைகளுக்கு திருஷ்டி வைப்பது போன்ற அமைப்புடன், யோக மச்சம் உள்ளது. இந்த மச்சத்தை அபிஷேக காலங்களில் தரிசிக்கலாம். இவரை 'மச்சக்கார ஐயப்பன்' என்றும் பால சாஸ்தா என்றும் அழைக்கின்றனர். குழந்தை வடிவில் விளங்குவதால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
சபரிமலை மாதிரி:
சபரிமலையைப் போலவே மண்டலபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் அனைவரும் சபரிமலை செல்வதற்காக இங்குவந்து மாலை அணிந்து விரதமிருந்து இருமுடிகட்டி செல்கின்றனர். மகர ஜோதி அன்று இங்கும் கோயில் எதிரில் ஜோதி காட்டப்படுவது சிறப்பு. திருமணத் தடையுள்ள பெண்கள் மாளிகைப்புறத்தம்மனுக்கு, மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து சட்டைத்துணி படைக்கிறார்கள்.
தன்வந்திரி சந்நிதி:
நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி தனி சந்நிதியில் உள்ளார். இவருக்கு புதன் கிழமைகளில் சந்தனாதி தைலம் மற்றும் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாள்பட்ட நோய் குணமாகும். வெப்பு நோய் உள்ளவர்கள், ஞாயிறு, மூளை நோய் உள்ளவர்கள் திங்கள், தோல் நோய் உள்ளவர்கள் செவ்வாய், நினைவாற்றல் சம்பந்தமாக புதன், வயிறு நோய்களுக்கு வியாழன், நரம்பு நோய்களுக்கு வெள்ளி, இடுப்பு நோய்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. ஐயப்பன் எதிரில் உள்ள கல்லினால் ஆன தீபஸ்தம்பம், குருவாயூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. விழாக்காலங்களில் தீபஸ்தம்பத்தில் ஏற்றும் தீபத்தைக்காண கண்கோடி வேண்டும்.
கோயில் அமைப்பு:
கன்னிமூலகணபதி, பாலதண்டாயுதபாணி, பிரதோஷ சிவன், உற்சவர் ஐயப்பன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் கருப்பணசாமி உள்ளார். ஐயப்பன் சந்நிதி எதிரில் 18 படிகள் உள்ளன. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் உள்ளார். இந்த லிங்கம் காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 - 11, மாலை 5 - இரவு 7.30.
இருப்பிடம்:
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 30 கி.மீ.,.
போன்:
96266 86269, 93441 06384